தமிழ் குறுக்கெழுத்து 3 – விடைகள்

This gallery contains 1 photo.

மின்னஞ்சலில் விடைகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி. லோகேஷ் வழக்கம்போல் அதிக விடைகளை அனுப்பியிருந்தார். வாழ்த்துக்கள். Grid அவ்ளோ professionalla இல்ல என்று கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி. அடுத்த முறை சரி செய்து கொள்கிறேன். முயற்சி செய்தவர்கள் இந்நேரம் வியங்கோள் வினைமுற்று, ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம் என்று எட்டாம் வகுப்பு grammar class-க்கு மீண்டும் சென்று … Continue reading

தமிழ் குறுக்கெழுத்து – 3

முன்பொரு காலத்தில் பதித்த இரண்டாவது குறுக்கெழுத்து

கொஞ்சம் கடினம் என்று  நண்பர்கள் கூறியதால் இப்போது சற்று எளிய புதிர் ஒன்றைத் தர நினைக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது முயற்சி செய்து பாருங்களேன்.

 இடமிருந்து வலம்:

1. கொம்பு ஒடிந்ததும் பறக்கிறது பேருந்து (4)

3. நெருப்புக்குப் பிறகு மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்பு (5)

6. அரசரை வியங்கோள் வினைமுற்று கொண்டு அழைத்தல் (4, 3)

7. பொறி (3)

9. தூங்கா நகரத்தை இப்படியும் உச்சரிக்கிறார்கள் (3)

10. காடும் காடு சார்ந்த நிலமும் (3)

11. எதிர்மறை பெயரெச்சம் ஈறு கெட்ட போதிலும் உதிராத மணி (5)

13. அறுசுவைகளில் ஒன்று (5)

14. தன் நாட்டில் கதியற்றதால் தஞ்சம் கோருபவர் (3)

17. இரண்டு புள்ளிகளை இணைக்கும் குறைந்தபட்ச தூரத்தின் பாதை (4)

18. இதை முடிக்க நீங்கள் இரவெல்லாம் யோசிக்க வேண்டும் (3, 3)

மேலிருந்து கீழ்:

1 . ஜூன் 1 -ல் எதிர்பார்க்கப்படும், முகப்பரு இல்லாத வாலிப சாரல்? (3,2 )

2 . இவர்களுக்குத் துப்பாய தூஉம் மழை (6)

3 . இன்னும் அழியாமல் இருக்கிறதா என்று தெரியாத விலங்குகளை இப்படியும் அழைக்கலாமோ? (8)

4. அழகி (2)

5. கண்ணதாசன் (5)

7. ‘Apple of the eye’ வகை செல்லப் பெண். (4)

10. ரஜினி படம் பாண்டியன் சிலம்பில்! (3)

12.அழை, call பண்ணு, வரச் சொல்லு (4)

15. காமராஜரால் கண் பெற்றது (3)

16.மின்னலைத் தொடர்ந்து வருவது (2)

700 கோடி வயிறுகள்

கருவூலங்களின் காலம் இது. கோயில் கருவூலங்களைத் திறக்கிறார்கள் [1]. அரசு கருவூலங்கள் காலியாகி விட்டதாக சொல்கிறார்கள். இவற்றினிடையே நோர்வே நாட்டில் உலகளாவிய விதை கருவூலம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.

2008 -இல் தொடங்கப்பட்ட Svalbard Global Seed Vault எனப்படும் இந்த கருவூலத்தில் சுமார் 30 லட்சம் வகையான பல்வேறு தானிய விதைகளைச் சேகரிக்கும் உயர்-தொழில்நுட்ப வசதிகள் உள்ளன [2].

எதற்காக?

ஒரு வேளை பருவநிலை மாற்றங்கள், இயற்கை பேரிடர்கள்  போன்றவற்றால் பயிர்வகைகள் அழிய நேரிட்டால் ஒரு backup copy -ஆக இந்த விதைகளைப்  பயன்படுத்தலாம்.

சுருங்கச் சொன்னால் இது ஒரு தொலைநோக்கு கொண்ட விதை வங்கி அல்லது  மாபெரும் குளிர்சாதனப் பெட்டி என்று சொல்லலாம்.

இந்தியாவில் இருந்து 77,239,325  விதைகள் இந்த கருவூலத்தில் பாதுகாக்கப் படுகின்றன.

கோடிக்கணக்கில் செலவிட்டு இப்படி ஒரு அமைப்பை நோர்வே அரசு ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். பலருக்கு இது ‘சின்னப் புள்ளத் தனமாகக்’ கூட தெரியலாம்.

குகை மனிதன் குடியானவன் ஆகி பத்தாயிரம் ஆண்டுகளாகக் காட்டுப் பயிர்களை ‘இது  நாம் கொள்வது, இது நம்மைக் கொல்வது’ என்று தரம் பிரித்து வேண்டியவற்றை சாகுபடி செய்து வந்த உணவுப்பயிர்களே மனித இனத்தை சென்ற நூற்றாண்டு வரை காத்து வந்தன.
மக்கள் தொகை பெருக்கத்தால் விளைநிலங்கள் விலை போனதால் இருக்கும் நிலத்திலேயே எல்லோருக்கும் உணவு விளைவிக்கும் கட்டாயம்.  வந்தது பசுமைப் புரட்சி. வாழ்க ஒரு ருபாய் அரிசி.

Program செய்யப்பட எந்திரங்களாக மாறிவிட்டன பயிர்கள். இயற்கையான பயிர்களைப் போல் சூழலுக்கு ஏற்ப தமது தன்மைகளை மாற்றிக்கொள்ளும் திறன் இவற்றுக்கு இல்லை. தொன்று தொட்டு இருந்து வரும் பயிர் ரகங்கள் மறக்கப்பட்டு அழியும் சூழல் உருவாகிறது.

அசல் போனால் என்ன நகல் இருக்கிறதே என்று இருக்கிறோம். பல தருணங்களில் நகல் செல்லாதது ஆகி விடுகிறது.

அனைத்து நிலங்களிலும் ஒரே வகை பயிர் என்பதால் ஒரு புதிய நோய் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்க்கும் திறன் இல்லையென்று வைத்துக் கொள்வோம். ஒன்று, புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது புதிய பயிர் ரகம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குள் போனது போனது தான். இந்த நோய் எதிர்ப்புத் திறன் ஒருவேளை அழிந்து போன அந்த இயற்கை ரகத்தில் இருந்திருக்கக் கூடும்.

என்ன செய்வது, அசல் தான் இல்லையே!

இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடி ஆகிவிடும் என்கிறார்கள் [3].

இத்தனை வயிறுகளுக்கும் உணவளிக்கும் அதே நேரத்தில் பயிர்களைத் தாக்கும் நோய்களால் விளைச்சல் குறைந்து பஞ்சம் ஏற்படும் நிலையைத் தவிர்க்கவும் வேண்டியுள்ளது.

இது நிச்சயம் கயிற்றின் மேல் நடக்கும் வித்தை தான். பாதி கடந்து விட்டோம். வேகமாக போகிறேன் பேர்வழி என்று கயிற்றை அறுத்து விடவோ கீழே விழுந்து விடவோ கூடாது.

மேற்கோள்:

ஆசிரிய வருத்தம்

என் ஆசிரியர்களுக்கு,

உங்களில் பலருக்கு
என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் தெரிந்தாலும்
உங்கள் கேள்விகளுக்கு
என்றுமே நான் எழுந்து
பதில் சொன்னதில்லை.

அது ஏனோ
நீங்கள் என்னைக் கேட்ட
கேள்விகளுக்கு மட்டும்
பதில் தெரிந்ததில்லை.http://www.creative-learner.com/imagesforTWQ/clasroom_cartoon.gif

முதல் வரிசை
முந்திரி கொட்டைகள்
பின்வரிசை ‘பெரிய பையன்கள்’
இரண்டிலும் சேராதவன் நான்.

இரண்டாம் வரிசையில் என் இருக்கை.

அதனால் உங்களுக்கு என்னை
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று
ஒருசில உண்மைகளை
உங்களிடம் சொல்ல விழைகிறேன்.

அந்த பச்சை நிற வாளியை உடைத்தது
அபராதம் கட்டிய ஐந்து பேருமில்லை.
ஐந்தில் வளையாத நான் மட்டும் தான்.

அதற்குப் பிராயச்சித்தமாக
நண்பன் திருடிய பேனாவுக்கு
நானும் அடி வாங்க நேர்ந்தது.

உண்மையில் என் நாலு கோடு நோட்டு
காணமல் போகவில்லை.
வீட்டுப் பாடம் எழுதாததால்
பொய் சொல்லி விட்டேன்.

அமுக்கன், அறுவை, தூக்க மாத்திரை
இடி அமீன் என்றெல்லாம்
உங்களுக்குப் பட்டப் பெயர் வைத்தது
நான் தான்.

கணக்கு வாத்தியாருக்கு மட்டும்
ஏற்கனவே யாரோ பேர் வைத்துவிட்டனர்.

தமிழாசிரியரின் வெள்ளைச் சட்டையில்
கருப்பு மை அடித்தது நான் தான்.

உணவு இடைவேளையில்
உங்களில் சிலர்போல் நான்
நடித்துக் காட்டியது
நிஜம்தான்.

கை தட்டல்களினால் என்
கண்ணியம் குறைந்துவிட்டது.

நீங்கள் சொன்ன எல்லாமே
என் மண்டையில் ஏறவில்லை தான்.

ஆனால் மனதின் ஒரு மூலையில்
மரியாதை இருக்கத்தான் செய்தது.

நீங்கள் கழுவிய மீன்களில்
நழுவிய மீனாய்
நானும் தேர்ச்சிபெற நேர்ந்தது

என் தவறுகளை நீங்கள்
எப்போதும் போல மன்னிப்பீர்கள்.

இருப்பினும்
இவற்றைச் சொல்வதால் நான்
மீண்டும் என் பள்ளிக்கூட நாட்களுக்கு
திரும்ப முடிந்தது

உங்கள் மாணவனாக….

வெளி நாடுகளில் இந்தியர்கள்

எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். பூங்கொத்துக்களோ போர்வாளோ எதுவாகினும் அனுப்பி வையுங்கள்.

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வந்ததும் விநோதமாக நடந்து கொள்கிறோம்.

என் அனுபவத்தில் சில எடுத்துக்காட்டுகள்…

புதிதாக என்னை பார்க்கும் நம்மவர்கள் முதலில் கேட்கும் கேள்விகள்:

தமிழ்நாடா கேரளாவா?
எவ்வளவு சம்பளம்?
வீட்டு வாடகை எவ்வளவு?
இங்க எப்படி வாய்ப்பு கிடைச்சது? (இது தமிழன்)

ஒரு சிலர் கொஞ்ச நேரம் கழித்து “ஆமா, உங்க பேர் என்ன சொன்னீங்க?” என்பார்கள். “நான் எங்கேடா சொன்னேன்” என்று நினைத்தபடி ‘அறிமுகம்’ செய்து கொள்வேன். ஒரு சிலர் கடைசி வரை பெயரைக் கேட்பதே இல்லை. நேரம் மிச்சம்.

எனக்குத் தெரிந்த மட்டில் 80% பேர் இப்படித் தான் இருக்கிறார்கள்:

ஜப்பானியர்களிடம் போய் “தமிழும் தெலுங்கும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஸ்க்ரிப்ட் தான் வேறு” என்று விளக்குகிறார்கள்.

உணவகத்தில் “மன்னிக்கவும், உணவு தயாராக கொஞ்சம் நேரமாகும்” என்று சொன்னால் “பரவாயில்லை, இதைத்தான் நாங்கள் Indian Punctuality என்று சொல்வோம். Take your own time” என்று மானத்தை ஏலம் விடுகிறார்கள்.

நம் மொழி தெரிந்தவர்கள் நாலு பேர் சேர்ந்து விட்டால் போவோர் வருவோரை எல்லாம் கிண்டல் செய்கிறார்கள் – அவர்களுக்கு நம் மொழி தெரியாது என்பதால்.

என்னைப் போல் இளிச்சவாயன் மாட்டிக்கொண்டால் “நான் IIT ல ஆறு மாசம் இருந்தேன், IISC ல அரை ப்ராஜெக்ட் பண்ணினேன்” என்று அள்ளி விடுகிறார்கள்.

ஃபிரெஞ்சுக்காரர்கள் ரொம்ப சோம்பேறிகள் என்று டச்சுக்காரர்களிடமும் ஜப்பானியர்களுக்கு சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது என்று ஃபிரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்கள் வீடிழந்து நாடிழந்து பிச்சை எடுக்கப் போகிறார்கள் என்று சீனாக்காரர்களிடமும் உலக அரசியல் பேசுகிறார்கள்.

ஒரு இத்தாலியப் பெண் என்னோடு ரொம்ப நெருங்கி பழகிட்டா… இப்போ அவ அவங்க நாட்டுக்கு போறா…. ஒரே அழுகை… நான் என்ன செய்ய…. என்று பீதியைக் கிளப்புகிறார்கள்.

முத்தமிடும் காதலர்களை முறைத்துப் பார்ப்பதோடு நில்லாமல் சில நேரங்களில் அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்து தனக்குத் தெரிந்த இந்தியர்களிடம் காட்டி “அங்கே இதெல்லாம் ரொம்ப சாதாரணம்” என்று பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்.

சிலர் ஒருசில ஆண்டுகள் இங்கே இருந்துவிட்டால் மனதளவில் இந்த நாட்டவர்களாகவே மாறி விடுகின்றனர். உலகமே ஒரு குக்கிராமமாக மாறிவிட்ட இந்நாளில் இதில் வியப்பேதும் இல்லை. ஆனால் வேர்களை மறந்து விட்ட மரங்கள் எவ்வளவு உயரம் வளருமோ தெரியாது.

சரி அது ஒரு புறம் இருக்கட்டும். பார்வோ என்ற ரயில் நிலைய நிழற்குடையில் யாரோ கிறுக்கி வைத்திருந்தார்கள்.

கிறுக்கல்கள்

இங்கும் விஷமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று காட்ட புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

வெளியே வந்ததும் தான் தெரிந்தது அந்த விஷமிகளின் இந்திய விலாசம்.

இந்தியரின் கைவண்ணம்

தமிழ் குறுக்கெழுத்து 2 – விடைகள்

This gallery contains 2 photos.

குறுக்கும் நெடுக்குமாக யோசித்ததில் கடினமாகிப் போன குறுக்கெழுத்துக்கான விடைகள். Continue reading

பெர்செயிட் எரி நட்சத்திரங்கள்

எரி நட்சத்திரம் என்பது எரிந்து விழும் நட்சத்திரம் அல்ல. மைனர்களைப் போல் விண்வெளியை வலைய வரும் சிலபல பொருட்கள் தெரியாமல் நம் பூமியின் ஈர்ப்பு விசையால் வசீகரிக்கப்பட்டு நம் உலகத்தில் விழுவன. அவை நமது காற்று மண்டலத்தில் உராயும் போது தீப்பிடித்து தீப்பிடித்து (முத்தம் தராமல்) காற்றிலே சாம்பல் ஆகி விடும்.

இந்த வாரம் (12 மற்றும் 13 ஆம் தேதி) இந்த நரகாசுர உருப்படிகளின் மரணம் வானத்தில் தீபாவளியாகக் காட்சியளிக்கும்.

இன்றைக்கு கொஞ்சம் முயற்சி செய்து வானத்தை அண்ணாந்து பாருங்கள் – பெர்சிட் என்ற நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து வரும் இந்த எரிநட்சத்திரங்களின் மத்தாப்புக் காட்சிகளைக் காண.

மேலும் விளக்கங்களுக்கு இந்த நாசா வலை தளத்தைப் பார்க்கவும்:

தமிழ் குறுக்கெழுத்து – 2

முதல் குறுக்கெழுத்து கொஞ்சம் எளிமையாக, அதே நேரம் கொஞ்சம் சுவையானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அதே போல், இந்த இரண்டாம் குறுக்கெழுத்தும் இருக்க முயற்சி செய்திருக்கிறேன். ஒரு சில cryptic clues ஆங்காங்கே இருக்கும்.

மற்றபடி எளிமையானதாகவே இருக்கும். எளிமைதானே தமிழ்!

தமிழிலேயே கலக்குங்கள்!

இடமிருந்து வலம்
1. எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் இந்த புத்தகப் புழுவுக்கு (4)
3. சிரித்தே கொல்லும் பாவை இருக்கும் இடம் (5)
6. முற்காலத்தில் அரச வம்சத்தினர் இப்படித் தான் பயணித்திருப்பார்கள் (5, 2)
7. குழலையும் யாழையும் தோற்கடிக்கும் இசை (3)
8. சூர்பனகைக்கு அறுவை சிகிச்சை நடந்த இடம் (3)
9. இந்த மொழி தட்டச்சு இயந்திரத்தில் முதல் இரண்டு எழுத்துக்களைக் காணோம்! (3)
10. யதார்த்தத்துடன் குடுமியையும் இழந்து விட்டான் சோழியன் (3)
11. வானுக்குப் போக வாகனம் வந்து விட்டது (5)
13. விருத்தத்திற்கு ஒரு கம்பன்… வெண்பாவுக்கு _______ (5)
14. உருட்டியதால் சுருங்கிய பட்டாசுக் கடை (3)
17. மனைவியர் குலம்! (4)
18. பெண்கள் பருவத்தில் முதுமையிலும் இளமை! (6)

மேலிருந்து கீழ்
1. காலடியில் நசுங்கிய ராணுவம்? (5)
2. ஊரே பூட்டிக் கிடக்கிறது! (6)
3. மரத்தில் இருந்ததால் மூக்கடி பட்ட பாம்பு (4,4)
4. விண்ணப்பம் எழுதிய முதல் மனிதன் (2)
5. தமிழ் தாத்தா தேடியது (6)
7. மன்னரின் தலையில் தண்ணீர் கலன்! (4)
10. சோம்பேறி ஆகச் சொல்லும் வாசனைப் பொருள் (3)
12. வழித் தோன்றல்கள் (4)
15. எடை மிகுந்த நீதிபதி? (3)
16. சென்னையின் மூலையில் ஒரு வள்ளல்! (2)

(விடைகள் விரைவில்…)

தமிழ் குறுக்கெழுத்து 1 – விடைகள்

This gallery contains 3 photos.

விடைகளும் விளக்கங்களும் Continue reading

தமிழ் குறுக்கெழுத்து

ஒரு சிறு முயற்சி.

‘ஒரு விலங்கு’, ‘ஒரு  நதி’ என்பது போன்ற கடினமான கேள்விகள் இல்லாமல் ஒரு குறுக்கெழுத்து புதிர் சாத்தியமில்லையா?

எளிதான இந்த குறுக்கெழுத்துக்கு விடை காண முயற்சி செய்து பாருங்கள். “என்கீ டமில் அவ்ளோவா பட்க தெர்யாது” என்பவர்கள் இங்கே சென்று பாருங்கள்.


இடமிருந்து வலம்:

1.  எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் தெரிவது தெனாலிராமன் தான்!
3.  செலவெல்லாம் போக எஞ்சியது இது தான்.
6. இலங்கை நகரத்து இசைக்கருவி.
9. தேவதத்தன் தொடுத்தது, சித்தார்த்தன் எடுத்தது.
10. நம் மொழியின் இலக்கணம் கூறும் பழம்பெரும் நூல்.
11. காலின்றி நடப்பன; இரையாகிப் பறப்பன.
12. தென்னையை முதலில் செதுக்கிய நகரம்.
15. எஃகை வார்த்து சிலிகான் சேர்த்து… ஏழாம் அறிவை எழுப்ப முயல்பவன்.

16 .முழங்காலின் எதிர்கட்சி தலைவர்?
17. திருக்குறளின் கம்பீரம்!

மேலிருந்து கீழ்:

1. இவரும் ஓட்டுனர் தான்!

2. காதலித்தால் வரும் என்கிறார்கள்.
4. அமுது, நிலவு, உயிர்…
5. தீ மூட்டிய ஆபரணம்?
6. கணியன் பூங்குன்றனார் சொன்னது
7. பேருந்தில் சென்ற மாமல்லன்

8. தனம் தரும், கல்வி தரும்… நாயகியின் துதிப் பாடல்
9. பாவகை – ஔவை விநாயகருக்குப் பாடியது

12. பழந்தமிழின் புதிய பெயர்!
13. எரிக்கும் உறவு?
14. இதைத் தாண்டி ஒன்றும் இல்லை!

(விடைகள் நாளை)

லேசர் ஐம்பது : பாகம் 3 – நிலாப்பயணம்

லேசரின் ஆற்றல் லேசானதல்ல. நிலவில் சென்று தன் முகம் பார்த்து வந்த ஒளி இது.

ஆர்ம்ஸ்ட்ராங்கும் எட்வின் ஆல்ட்ரினும் நிலவில் விட்டு வந்தது அமெரிக்கக் கொடியும் காலணித் தடங்களும் மட்டுமல்ல – Retroreflector என்ற நூறு கண்ணாடி பகுதிகள் அடங்கிய இரண்டடி உயர கருவியும் தான்.

நிலாப்பயணம் (படம்:NASA)

பூமியில் இருந்து இந்த கருவியை நோக்கி ஒரு லேசர் ஒளிக்கற்றையை செலுத்தினார்கள் – டெக்சாஸ் நகரின் மக்டோனல்ட் (பர்கர் கடை அல்ல) ஆய்வகத்திலிருந்து.

“Corner cube reflectors ” என்ற இந்த கண்ணாடிகள் தம் மீது விழுந்த ஒளியை “நீயே வைத்துக் கொள்” என்று பூமிக்கு அனுப்பிவிடும்.

பிரதிபலிக்கப் பட்ட இந்த ஒளி “என்னடா இது வம்பா போச்சு” என்றபடி பூமியை வந்தடையும்.

வருவதற்குள் பெரும்பாலான ஃபோட்டான்களை செலவு செய்து விட்டு ஒன்று அல்லது இரண்டு ஃபோட்டான்களாக திரும்பும்.அது போதுமே. தயாராக இருக்கும் detector (உணர்த்தி?) அந்த ஓரிரு ஃபோட்டான்களை வரவேற்கும்.

சும்மாவா இப்படி லேசர் அடித்து விளையாடினார்கள்? இல்லை, இதிலிருந்து ஒருசில விஷயங்கள் தெரியவந்தன.

1.  பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தூரத்தை மிகத் துல்லியமாக (மில்லிமீட்டர் வாரியாக) கணக்கிட முடிந்தது – ஒளியின் வேகம் தெரியும்; லேசர் ஒளி ஒரு முறை அங்கு போய் வந்த நேரம் தெரியும்; இவற்றை வைத்து தூரத்தை இன்றைய எட்டாம் வகுப்பு மாணவர்கள் கணக்கிட்டு விடுவர்.

2. நம்மை விட்டு நிலவு ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் தள்ளிப் போகிறதாம். (“நிலவே என்னிடம் நெருங்காதே” பாடல் கேட்டிருக்குமோ?)

3 இது தவிர, ஐன்ஸ்டீன் கோட்பாடு, புவியீர்ப்பு விசை மாறிலி என்று பலவற்றை பற்றிய ஆய்வுகளுக்கு இந்த சோதனை உதவியது.

இப்படி 1969 இல் துவங்கிய இந்த லேசர் விளையாட்டு 40 ஆண்டுகள் நடைபெற்று வந்தது. “நாம் இருக்கும் நிலைமையில் இது தேவையில்லை. நீங்கள் இதுவரை அளந்தது போதும்” என்று அமெரிக்க அரசு இந்த ஆய்வை நிறுத்தச் சொல்லிவிட்டது – 2009 இல்.

மிக முக்கியமாக, மனிதன் நிலவில் இறங்கியது பொய் என்ற கூற்றை இந்த லேசர் ஒளியைக் கொண்டே பொய்யாக்கினார்கள்.

ஒரு வேளை நீங்கள்

காணத் தவறாதீர்கள் (படம்: NASA)

வருங்காலத்தில் நிலவுக்கு சுற்றுலா சென்றால் நமது சந்திராயனின் Moon Impact Probe-ஐயும்

அங்கு Sea of Tranquility என்ற இடத்தில அமெரிக்கக் கொடி, ஆர்ம்ஸ்ட்ராங்கின் காலணித் தடம், இவற்றுடன் அந்த Retroreflector கண்ணாடிக் கருவியையும் கண்டு வாருங்கள்.

லேசர் ஐம்பது : பாகம் 2

சாதாரண மின்விளக்குகள் தரும் ஒளிக்கும் லேசர் ஒளிக்கும் என்ன வித்தியாசம்?

இரைச்சலுக்கும் இளையராஜா இசைக்கும் உள்ள வித்தியாசம்.

விளக்கமாக சொல்ல வேண்டுமானால் பள்ளிக் கூடம் முடிந்ததும் பறந்தோடி வரும் மாணவர்களைப் பார்த்திருக்கிறோம். கண்ணை மூடிக் கொண்டு வீட்டுக்கு ஓடுபவர்கள், கணக்கு வாத்தியாரின் வாகன இருக்கையை கிழிக்கப் பதுங்குபவர்கள், பட்டாம்பூச்சி பிடிக்கப் புறப்படுபவர்கள், பேருந்தில் இடம் பிடிக்க விரைபவர்கள் என்று ஒரே ஆரவாரமாக இருக்கும்.

மாறாக, ஒரு ராணுவ அணிவகுப்பைப் பார்ப்போம். ஒரே சீராக, சொல்லி வைத்தாற்போல் அனைவரும் ஒரே மாதிரி அசைவார்கள். ஒரு ஒழுங்கும் கம்பீரமும் அதில் இருக்கும். இத்தகைய வித்தியாசம் தான் சாதாரண ஒளிக்கும் லேசர் ஒளிக்கும்.

நாம் பார்க்கும் ஒளி ஃபோட்டான் (photon) எனப்படும் துகள்களைக் கொண்டது.

ஒவ்வொரு வினாடியும் கோடிக் கணக்கான ஃபோட்டான்கள் நம் விழித்திரையில் படுவதால் தான் நாம் இந்த உலகத்தைப் பார்க்க முடிகிறது. ஃபோடான்களின் அதிர்வு எண் (frequency) மற்றும் அலை நீளம் (wavelength) அவற்றின் நிறம் என்ன என்பதை சொல்லும்.

சாதாரண ஒளியில் உள்ள ஃபோட்டான்கள் வெவ்வேறு அதிர்வு எண் மற்றும் அலை நீளம் கொண்டவை.

வித்தியாசம்

எனவே இதில் பல நிறங்கள் இருக்கும். இதனால் தான் இந்த ஒளியின் பாதையில் ஒரு முப்பட்டகத்தை (prism ) வைக்கும்போது நமக்கு வானவில்லின் ஏழு நிறங்கள் (VIBGYOR) தோன்றுகிறது.

ஆனால் லேசரில் இந்த விளையாட்டு நடக்காது. ராணுவ அணிவகுப்பைப் போல் எல்லா ஃபோட்டான்களும் ஒரே அதிர்வு எண் கொண்டிருக்கும். எனவே லேசர் ஒளி ஒற்றை நிற ஒளியாகவே (monochromatic) பயணிக்கும் – ராணுவ ஒழுங்குடனும் கம்பீரத்துடனும்.

லேசர் ஐம்பது : பாகம் 1

இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, கார் நாற்பது, கமல் ஐம்பது என்பது போல லேசர் ஐம்பது எழுத வேண்டிய காலம் வந்து விட்டது.

லேசரின் வயது 50 (படம்: Physics World)

அதற்கு என்ன என்கிறீர்களா?

காரணம் இருக்கிறது.
  • இன்றைய நவீன பலசரக்குக் கடைகளில் நீங்கள் வாங்கும் இட்லி மாவு பாக்கெட்டின் மீது கடைக்காரர் ஏதோ ஒரு கருவியைக் காட்டுகிறார். பீப் என்று ஒரு சின்ன சத்தம், அதை தொடர்ந்து அதன் அருகில் உள்ள விலை காட்டியில் மாவின் விலை தோன்றுகிறது.
  • ஒரு திரைப் பட சி. டி. அல்லது டி.வி.டி. மென்தகட்டினை வாங்கி பிளேயரில் அதை நுழைத்ததும் துல்லியமான படம் பார்க்க முடிகிறது.
  • லேசர் சிகிச்சை என்கிறார்கள்
  • லேசர் ஒளியில் கலை நிகழ்ச்சி என்கிறார்கள்
  • சிறுவர்கள் கூட கையில் லேசர் வைத்திருக்கிறார்கள்

இந்த லேசர் என்பது என்ன? எப்படி வேலை செய்கிறது?

முதலில் கடைக்காரரிடம் இருக்கும் அந்த கருவியை நோண்டிப் பார்ப்போம்.

இந்த கருவி UPC பார் கோட் ரீடர் (UPC Barcode Reader) எனப்படுகிறது.

UPC குறியீடு

UPC என்பது ஒரு பொதுவான குறியீட்டு எண். ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய எண் இருக்கும். கருப்பு வெள்ளை கோடுகளாக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பர்களே, அது தான். இந்த கோடுகள் இந்த இட்லி மாவு தயாரிக்கப்பட்ட தேதி, விலை, என்று அதன் சரித்திரத்தையே சொல்லக் கூடியவை. அதைப் படிக்க இந்த லேசர் கருவியால் தான் முடியும்.

இந்த கருவியைத் திறந்து பார்த்தால் அதில் இருப்பது:

ஒன்றிற்குள் இன்னொன்றாக ஹீலியம் மற்றும் நியோன் வாயுக்கள் நிரப்பப் பட்ட இரண்டு கண்ணாடி குழாய்கள், பாசிடிவ் மற்றும் நெகடிவ் தகடுகள்,  மற்றும் பாதி ஒளியை மட்டும் ஊடுருவ விடக் கூடிய சிறு கண்ணாடி.

இது தவிர, 21 பாகங்களாக பிரிக்கப் பட்ட ஒரு சுற்றும் விழிச் சுடர் – இந்த சுற்றும் தகடு  தான் பிரதிபலிக்கப் பட்ட லேசர் ஒளியைப் பதிவு செய்து கணிப்பொறிக்கு அனுப்புகிறது.

கொஞ்சம் மின்சாரம் கொடுத்தால் போதும். ஹீலியம் அணுக்கள் தலை தெறிக்க ஓட ஆரம்பிக்கும். சோம்பேறி நியோன் அணுக்களையும் உசுப்பேத்தி விடும். நண்பர், நண்பருக்கு நண்பர், அவருடைய நண்பர் என்று ஃபேஸ்புக் நட்பு பெருகுதல் போல அணுக்களில் ஃபுட்போர்ட் அடித்துக் கொண்டிருக்கும் ‘valence’ எலெக்ட்ரான்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் வைத்து விடுகின்றன.

வாலிப வேகத்தில் வெளியே வந்துவிட்ட இந்த எலெக்ட்ரான்கள் அப்பன் அடிக்க வரும் முன் வீட்டுக்கு ஓடி விடலாம் என்று சங்கத்தை கலைத்து விடுகின்றன. ஆனால் இந்த சிறு பிள்ளைகளின் வெள்ளாமை வீடு சென்று சேர்வதில்லை. மாறாக, ஆற்றல் மிக்க ஒளியாக மேற்சொன்ன ‘பாதி ஊடுருவி கண்ணாடி’ வழியாக லேசர் ஒளியாக வெளி வருகின்றன. இத்தனையும் அந்த ‘பீப்’ என்ற சத்தம் அடங்குவதற்குள்ளாக!

இட்லி மாவின் ஸ்டிக்கர் மேல் பட்ட இந்த லேசர் ஒளி பிரதிபலிக்கப் பட்டு அந்த சுற்றும் தகட்டின் 21 பாகத்தில் எதாவது ஒன்றின் மேல் நிச்சயம் படும். இந்த ஒளி மீண்டும் மின்சாரமாக மாற்றப்பட்டு கணிப்பொறிக்கு புரியும் மொழியில் அனுப்பப் படுகிறது. இட்லி மாவின் விலை உங்கள் பில்லில் சேர்க்கப் படுகிறது.

எனக்கென்னவோ இதெல்லாம் ஆச்சர்யமாகப் படவில்லை. பார் கோட், லேசர், கணிப்பொறி எல்லாம் சேர்ந்து செய்யும் வேலையை நொடியில் மனக் கணக்கில் செய்யும் அண்ணாச்சி தான் வியப்பூட்டுகிறார்.

விஷக் கதை 6 : நம்ம ஊரில்…

ஆர்செனிக், சயனைடு என்று அசலூர் விஷங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தால் எப்படி? உள்ளூர் சரக்கைப் பற்றி பேசாவிட்டால் தமிழர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்?

ஒரு வேளை உணவு கிடைக்காத நாடுகளில் கூட பெற்றோர் தம் பிள்ளைகளைக் கொன்றதாக நாம் கேள்விப் பட்டதில்லை.

இவள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைக்கவும் அதன் பிறகும் பல செலவுகள் ஆகும் என்று பெண் சிசுக்களைக் கொன்ற கொடூரம் இங்கு மட்டும் தான் சாத்தியம்.

இதற்குப் பெரிதும் பயன்பட்ட விஷங்கள் கள்ளிப்பால், எருக்கம்பால், மற்றும் அரளி விதை. இங்கு புதிதாய் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் இவற்றின் டாக்சிகாலாஜி பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

calotropin, cardenolide என்று இவற்றில் இருக்கும் நச்சுப் பொருள்களின் பெயர்கள் இவர்களுக்குத் தெரியாவிட்டால் என்ன… அவை என்ன செய்யும் என்பது நன்றாகவே தெரியும்.

இதில் சிறப்பு என்னவென்றால் எருக்கம் பூ சிவ வழிபாட்டில் பயன்படுவது. அரளி முருகன் உட்பட பல தெய்வங்களுக்கு சூடப் படுவது.கொஞ்ச நாட்கள் முன்பு வரை தமிழ் படங்களில் வாழ்க்கையை வெறுத்த அம்மாக்கள் அரளி விதையை மார்க்கெடிங் செய்து கொண்டிருந்தார்கள்.

வேறு பல விஷங்கள் இருந்தாலும் இந்த மூன்றும் தமிழகத்தைப் பொறுத்த வரை விஷ மும்மூர்த்திகள். சிசுக் கொலைகள் குறைந்து விட்ட போதிலும் இந்த விஷங்களின் சுவடுகள் நம் வரலாறெங்கும் பரவிக் கிடக்கும்.

விஷக் கதை 5 : ஆந்த்ராக்ஸ் ஆபத்து

ஆந்த்ராக்ஸ் என்பது விஷமல்ல – பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus anthracis) என்ற பாக்டீரியா உண்டாக்கும் ஒரு நோய். “ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கும்” என்ற பழமொழி ஆந்த்ராக்ஸ் நோய்க்கு மிகவும்  பொருந்தும்.

பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் கிருமி மற்ற கிருமிகள் போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல் படாது. ஸ்போர்கள் (spores) எனப்படும் விதை மூலங்களாக மண்ணில் நெடுந்தூக்கம் மேற்கொண்டு தேமே என்று கிடக்கும்.

ஆந்த்ராக்ஸ் பரவும் முறை (படம்: medindia.net)

தக்க தருணத்தில் (பல ஆண்டுகள் கழித்தும் கூட) ஆடு, மாடு போன்ற வெஜிடேரியன் கால்நடைகளைத் தாக்கும். பின்பு அவற்றை உண்ணும் அசைவ உண்ணிகளையும் இறுதியில் இவை எல்லாவற்றையும் சாப்பிடும் மனிதனையும் தாக்கும். சுத்த சைவம் என்று காலரைத் தூக்கி விடுபவர்களையும் கூட காற்றின் மூலம் நுரையீரலையோ காயங்கள், வெட்டுகள், சிராய்ப்புகள் மூலம்  வெளித் தோலையோ ஆந்த்ராக்ஸ் தாக்கக் கூடும்.

பாக்டீரியாக்களால் நோய்கள் உருவாகும் என்று முதலில் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை வைத்தே நிரூபித்தார் ராபர்ட் கோச் என்ற விஞ்ஞானி. அதன் பின்னரே லூயி பாஸ்டர் இதற்கு தடுப்பூசியை தயார் செய்தார்.

2001 இல் அமெரிக்காவையே கலக்கும் படியாக ஆந்த்ராக்ஸ் தூவப் பட்ட கடிதங்கள் அந்நாட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றுக்கு அனுப்பப் பட்டது.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய இந்த கிருமி  உயிரியல் சார்ந்த (bio-weapon) ஆயுதமாகப் பார்க்கப் படுகின்றது. அணு குண்டுகள், பீரங்கிகள், போர் விமானங்கள், லேசர் துப்பாக்கிகள் என்று பெரிது பெரிதாக செய்து கொண்டிருக்கும் அதே வேலையில் கண்ணுக்குப் புலப்படாத இந்த ஆயுதங்களும் செய்யப் படுகின்றன. இத்துனூண்டு துகள்களைத் தூவி எதிரிகளை அழிக்க வலிக்கிறதா என்ன?

சயனைடு, ஆர்செனிக் போல இல்லாவிட்டாலும் ஆந்த்ராக்ஸ் தனக்கே உரிய பாணியில் உயிரை எடுத்துச் செல்ல வல்லது. தக்க நேரத்தில் உரிய சிகிச்சை செய்தால் பாதிக்கப் பட்டவரைக் காப்பாற்றலாம்.

இல்லேயேல் போன உயிர் திரும்ப வராது – வெள்ளைக்காரர்கள் எடுத்துச் சென்ற கோஹினூர் வைரம் போல.

(விஷம் பரவும்)