வெளி நாடுகளில் இந்தியர்கள்

எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன். பூங்கொத்துக்களோ போர்வாளோ எதுவாகினும் அனுப்பி வையுங்கள்.

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வந்ததும் விநோதமாக நடந்து கொள்கிறோம்.

என் அனுபவத்தில் சில எடுத்துக்காட்டுகள்…

புதிதாக என்னை பார்க்கும் நம்மவர்கள் முதலில் கேட்கும் கேள்விகள்:

தமிழ்நாடா கேரளாவா?
எவ்வளவு சம்பளம்?
வீட்டு வாடகை எவ்வளவு?
இங்க எப்படி வாய்ப்பு கிடைச்சது? (இது தமிழன்)

ஒரு சிலர் கொஞ்ச நேரம் கழித்து “ஆமா, உங்க பேர் என்ன சொன்னீங்க?” என்பார்கள். “நான் எங்கேடா சொன்னேன்” என்று நினைத்தபடி ‘அறிமுகம்’ செய்து கொள்வேன். ஒரு சிலர் கடைசி வரை பெயரைக் கேட்பதே இல்லை. நேரம் மிச்சம்.

எனக்குத் தெரிந்த மட்டில் 80% பேர் இப்படித் தான் இருக்கிறார்கள்:

ஜப்பானியர்களிடம் போய் “தமிழும் தெலுங்கும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஸ்க்ரிப்ட் தான் வேறு” என்று விளக்குகிறார்கள்.

உணவகத்தில் “மன்னிக்கவும், உணவு தயாராக கொஞ்சம் நேரமாகும்” என்று சொன்னால் “பரவாயில்லை, இதைத்தான் நாங்கள் Indian Punctuality என்று சொல்வோம். Take your own time” என்று மானத்தை ஏலம் விடுகிறார்கள்.

நம் மொழி தெரிந்தவர்கள் நாலு பேர் சேர்ந்து விட்டால் போவோர் வருவோரை எல்லாம் கிண்டல் செய்கிறார்கள் – அவர்களுக்கு நம் மொழி தெரியாது என்பதால்.

என்னைப் போல் இளிச்சவாயன் மாட்டிக்கொண்டால் “நான் IIT ல ஆறு மாசம் இருந்தேன், IISC ல அரை ப்ராஜெக்ட் பண்ணினேன்” என்று அள்ளி விடுகிறார்கள்.

ஃபிரெஞ்சுக்காரர்கள் ரொம்ப சோம்பேறிகள் என்று டச்சுக்காரர்களிடமும் ஜப்பானியர்களுக்கு சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது என்று ஃபிரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்கள் வீடிழந்து நாடிழந்து பிச்சை எடுக்கப் போகிறார்கள் என்று சீனாக்காரர்களிடமும் உலக அரசியல் பேசுகிறார்கள்.

ஒரு இத்தாலியப் பெண் என்னோடு ரொம்ப நெருங்கி பழகிட்டா… இப்போ அவ அவங்க நாட்டுக்கு போறா…. ஒரே அழுகை… நான் என்ன செய்ய…. என்று பீதியைக் கிளப்புகிறார்கள்.

முத்தமிடும் காதலர்களை முறைத்துப் பார்ப்பதோடு நில்லாமல் சில நேரங்களில் அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படமும் எடுத்து தனக்குத் தெரிந்த இந்தியர்களிடம் காட்டி “அங்கே இதெல்லாம் ரொம்ப சாதாரணம்” என்று பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்.

சிலர் ஒருசில ஆண்டுகள் இங்கே இருந்துவிட்டால் மனதளவில் இந்த நாட்டவர்களாகவே மாறி விடுகின்றனர். உலகமே ஒரு குக்கிராமமாக மாறிவிட்ட இந்நாளில் இதில் வியப்பேதும் இல்லை. ஆனால் வேர்களை மறந்து விட்ட மரங்கள் எவ்வளவு உயரம் வளருமோ தெரியாது.

சரி அது ஒரு புறம் இருக்கட்டும். பார்வோ என்ற ரயில் நிலைய நிழற்குடையில் யாரோ கிறுக்கி வைத்திருந்தார்கள்.

கிறுக்கல்கள்

இங்கும் விஷமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று காட்ட புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

வெளியே வந்ததும் தான் தெரிந்தது அந்த விஷமிகளின் இந்திய விலாசம்.

இந்தியரின் கைவண்ணம்

மணல் மன்னர்கள்

மணலுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு வித சிநேகிதம் உண்டு. பள்ளிக்கூட நாட்களில் சுடும் மணலில் மண்டியிட்டவர்கள் மன்னிக்கவும். மற்றபடி நீளம்/உயரம் தாண்டுதலில் நாம் விழும் தளமாகட்டும், கபடி ஆட்டக் களமாகட்டும், கடற்கரை காதலாகட்டும்,  நிலச் சரிவு தடுப்புச் சுவர்கள் ஆகட்டும், மணலுக்கும் நமக்கும் எப்போதும் ஒரு வித சிநேகிதம் உண்டு. நிறைவேறாத கனவுகளை மணல் கோட்டைகள் என்கிறோம். வெறும் பேச்சிலேயே ஏவுகணை விடுபவர்களை மணல் கயிறு திரிக்கிறான் என்கிறோம். அதி நவீன சிலிக்கான் சில்லுகளுக்கு இன்னும் மணலையே சார்ந்திருக்கிறோம்.

பல துறைகளிலும் பல விதங்களில் பயன்படும் மணலைக் கொண்டு சிற்பங்கள் செய்தால் எப்படி இருக்கும்? எண்ணம் எவனுக்கு முதலில் வந்தது என்று தெரியவில்லை. பல நாடுகளிலும் இது ஒரு பிரபல கலையாக மாறி வருவது உண்மை.

அப்படி ஒரு மணல் சிற்ப கண்காட்சிக்கு அண்மையில் (உண்மையில் சற்று தொலைவில்) செல்ல நேர்ந்தது. அங்கு கண்டவற்றைப் பகிர்கிறேன்.
ஒரு நாட்டைப் பற்றி ஓரிரு சிற்பங்களின் மூலம் எடுத்துக் கூறுவது கடினம். “டூர் ஒப் தி வேர்ல்ட்” என்ற தலைப்பில் ப்லாக்கன்பர்க் நகரில் நடை பெற்ற மணல் சிற்ப கண்காட்சியில் பன்னாட்டுக் கலைஞர்கள் நாற்பது நாடுகளின் பண்பாட்டை பிரதிபலிக்கும் முகமாக அழகிய சிற்பங்களை உருவாக்கி உள்ளனர்.
எடுத்துக்காட்டாக, கியூபா நாட்டைக் குறிக்க சே குவேரா உருவத்தையும் அந்நாட்டு இசைக் கருவி வாசிக்கும் இருவரையும் காட்டியிருந்தார்கள். அமெரிக்கர்கள் ஹாலிவுட், லாஸ் வேகாஸ், ரஷ்மோர் மலைக் குன்று, விடுதலை தேவதை சிலை என்று அமர்க்களப் படுத்தியிருந்தார்கள். ஜப்பானியர்களோ தங்களது சுமோ வீரர்களையும் ஹோண்டா இரு சக்கர வாகனத்தையும் மணலிலே செய்து வைத்திருந்தார்கள். 

 
 நமது இந்தியாவைக் குறிக்க காளி, விநாயகர், மற்றும் சிதார் வாசிக்கும் பெண் ஆகிய உருவங்களை வைத்திருந்தனர். காந்தி, தஞ்சை கோபுரம், கேரளா படகுப் போட்டி, சுதந்திரப் போர் போன்றவற்றை வைத்திருக்கலாம். தாஜ் மகால் வடிவத்தை அழகாக அமைத்திருந்தனர்.
வெறும் சிற்பங்களை வரிசைப் படுத்தி வைப்பதோடு நில்லாமல் தக்க ஒளி அளவையும் வைத்திருந்தார்கள். வெளியே ஏழு உலக அதிசயங்களையும் அமைத்திருந்தார்கள். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் நோக்குடன் மிக நீளமான கண்காட்சியாக இதை அமைத்திருந்தார்கள்.