விஷக் கதை 6 : நம்ம ஊரில்…

ஆர்செனிக், சயனைடு என்று அசலூர் விஷங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தால் எப்படி? உள்ளூர் சரக்கைப் பற்றி பேசாவிட்டால் தமிழர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்?

ஒரு வேளை உணவு கிடைக்காத நாடுகளில் கூட பெற்றோர் தம் பிள்ளைகளைக் கொன்றதாக நாம் கேள்விப் பட்டதில்லை.

இவள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைக்கவும் அதன் பிறகும் பல செலவுகள் ஆகும் என்று பெண் சிசுக்களைக் கொன்ற கொடூரம் இங்கு மட்டும் தான் சாத்தியம்.

இதற்குப் பெரிதும் பயன்பட்ட விஷங்கள் கள்ளிப்பால், எருக்கம்பால், மற்றும் அரளி விதை. இங்கு புதிதாய் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் இவற்றின் டாக்சிகாலாஜி பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருப்பதை என்னவென்று சொல்வது?

calotropin, cardenolide என்று இவற்றில் இருக்கும் நச்சுப் பொருள்களின் பெயர்கள் இவர்களுக்குத் தெரியாவிட்டால் என்ன… அவை என்ன செய்யும் என்பது நன்றாகவே தெரியும்.

இதில் சிறப்பு என்னவென்றால் எருக்கம் பூ சிவ வழிபாட்டில் பயன்படுவது. அரளி முருகன் உட்பட பல தெய்வங்களுக்கு சூடப் படுவது.கொஞ்ச நாட்கள் முன்பு வரை தமிழ் படங்களில் வாழ்க்கையை வெறுத்த அம்மாக்கள் அரளி விதையை மார்க்கெடிங் செய்து கொண்டிருந்தார்கள்.

வேறு பல விஷங்கள் இருந்தாலும் இந்த மூன்றும் தமிழகத்தைப் பொறுத்த வரை விஷ மும்மூர்த்திகள். சிசுக் கொலைகள் குறைந்து விட்ட போதிலும் இந்த விஷங்களின் சுவடுகள் நம் வரலாறெங்கும் பரவிக் கிடக்கும்.

விஷக் கதை 5 : ஆந்த்ராக்ஸ் ஆபத்து

ஆந்த்ராக்ஸ் என்பது விஷமல்ல – பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus anthracis) என்ற பாக்டீரியா உண்டாக்கும் ஒரு நோய். “ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிக்கும்” என்ற பழமொழி ஆந்த்ராக்ஸ் நோய்க்கு மிகவும்  பொருந்தும்.

பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் கிருமி மற்ற கிருமிகள் போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல் படாது. ஸ்போர்கள் (spores) எனப்படும் விதை மூலங்களாக மண்ணில் நெடுந்தூக்கம் மேற்கொண்டு தேமே என்று கிடக்கும்.

ஆந்த்ராக்ஸ் பரவும் முறை (படம்: medindia.net)

தக்க தருணத்தில் (பல ஆண்டுகள் கழித்தும் கூட) ஆடு, மாடு போன்ற வெஜிடேரியன் கால்நடைகளைத் தாக்கும். பின்பு அவற்றை உண்ணும் அசைவ உண்ணிகளையும் இறுதியில் இவை எல்லாவற்றையும் சாப்பிடும் மனிதனையும் தாக்கும். சுத்த சைவம் என்று காலரைத் தூக்கி விடுபவர்களையும் கூட காற்றின் மூலம் நுரையீரலையோ காயங்கள், வெட்டுகள், சிராய்ப்புகள் மூலம்  வெளித் தோலையோ ஆந்த்ராக்ஸ் தாக்கக் கூடும்.

பாக்டீரியாக்களால் நோய்கள் உருவாகும் என்று முதலில் ஆந்த்ராக்ஸ் கிருமிகளை வைத்தே நிரூபித்தார் ராபர்ட் கோச் என்ற விஞ்ஞானி. அதன் பின்னரே லூயி பாஸ்டர் இதற்கு தடுப்பூசியை தயார் செய்தார்.

2001 இல் அமெரிக்காவையே கலக்கும் படியாக ஆந்த்ராக்ஸ் தூவப் பட்ட கடிதங்கள் அந்நாட்டு அரசு அலுவலகங்கள் பலவற்றுக்கு அனுப்பப் பட்டது.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய இந்த கிருமி  உயிரியல் சார்ந்த (bio-weapon) ஆயுதமாகப் பார்க்கப் படுகின்றது. அணு குண்டுகள், பீரங்கிகள், போர் விமானங்கள், லேசர் துப்பாக்கிகள் என்று பெரிது பெரிதாக செய்து கொண்டிருக்கும் அதே வேலையில் கண்ணுக்குப் புலப்படாத இந்த ஆயுதங்களும் செய்யப் படுகின்றன. இத்துனூண்டு துகள்களைத் தூவி எதிரிகளை அழிக்க வலிக்கிறதா என்ன?

சயனைடு, ஆர்செனிக் போல இல்லாவிட்டாலும் ஆந்த்ராக்ஸ் தனக்கே உரிய பாணியில் உயிரை எடுத்துச் செல்ல வல்லது. தக்க நேரத்தில் உரிய சிகிச்சை செய்தால் பாதிக்கப் பட்டவரைக் காப்பாற்றலாம்.

இல்லேயேல் போன உயிர் திரும்ப வராது – வெள்ளைக்காரர்கள் எடுத்துச் சென்ற கோஹினூர் வைரம் போல.

(விஷம் பரவும்)

விஷக் கதை 4 : சயனைடு சொர்க்கம்

விஷப் பரீட்சை ஒன்று வைத்தால் முதல் ஐந்தில் நிச்சயமாக சயனைடு இருக்கும். ஆர்செனிக் அரசன் என்றால் சயனைடு சினிமா நட்சத்திரம். எத்தனை மக்கள் இதனிடம் உயிரையே கொடுத்துள்ளனர்! பிரபலங்களும் அடக்கம்.

கார்பனும் நைட்ரஜனும் 3 பிணைப்புகள் மூலம் (triple bond) இணைந்தால் அது ‘சயனோ’. இந்த சயனோ இணைப்பு உள்ள எந்த ஒரு வேதியியல் கூட்டுப் பொருளும் சயனைடு.

இயற்கையில் நாம் உண்ணும் சில பழங்களிலும் இதர தாவரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் சயனைடு இருக்கிறதாம் - ஆபத்து இல்லாத, நமக்குத் தேவையான அளவிற்கு. (அதற்குள் வயிற்றில் சயனைடைக் கரைத்து விட்டார்கள்.)

உடனடி காஃபி போல உடனடி மரணம் சயனைடின் சிறப்பு. இது எப்படி சாத்தியமாகிறது?அடினோசின் ட்ரை ஃபாஸ்பேட் (Adenosine Tri-Phosphate) என்ற மூலக்கூறுகள் தான் நாம் உயிர் வாழத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்கின்றன. செல்களின் உலகில் இவையே கரன்சி நோட்டுகள் என்கிறார்கள். இவற்றை அழிப்பதன் மூலம் சயனைடு நம் அடி வயிற்றிலேயே கை வைத்து விடுகிறது.

சில நிமிடங்களில் சுவாச மண்டலம், நரம்பு மண்டலம் என்று எல்லாவற்றையும் தன் வசப் படுத்தி, இதயத்தில் குடியேறி உயிரை ஆஃப் செய்து விடுகிறது.

இறப்பு கொஞ்சம் கலர்ஃபுல்லாக இருக்க சயனைடு ஹீமோக்லோபினுடன் சேர்ந்து அதையும் குழப்பி வெளித் தோல் பிங்க் நிறமாக மாறும் படி செய்கிறது.
  • இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களைக் கொல்ல ஜெர்மானியர்கள் ஹைட்ரோஜென் சயனைடை பயன்படுத்தினர்.

    அழிந்த மானுடம்

  • அமெரிக்காவில் மரண தண்டனைக்கு பொட்டாசியம் சயனைடு பயன்பட்டது
  • ஹிட்லர், அவனது மனைவி இவா பிரவுன், ஹிம்லர் ஆகியோர் சயனைடு உட்கொண்டு இறந்தவர்கள்
  • விடுதலைப் புலிகள் பெரும்பாலும் எதிரியின் கையில் இறப்பதை விட சயனைடு குப்பியை விழுங்கி இறந்தனர்
  • போபால் விஷ வாயு கசிவில் இறந்தவர் பல்லாயிரம்

வேறு எந்த விஷத்தைக் காட்டிலும் சயனைடு பருகிய உயிர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

(விஷம் பரவும்)

விஷக் கதை 3 : நெப்போலியன் புதிர்

பிரபலமானவர்கள் இறந்து விட்டார்கள் என்றதும் முதலில் நாம் நம்ப மறுக்கிறோம். நேதாஜி இன்னும் உயிருடன் உள்ளார் என்று நம்பும் மக்கள் உள்ளனர். எம். ஜி. ஆர். எப்போதோ இறந்து விட்டார் என்று சொல்லப் போய் ஒரு பெரியவர் என்னை அடிக்கவே வந்து விட்டார் – இது நடந்தது 2001 இல்.

சில சமயங்களில் சிலர் இறந்ததற்கான காரணம் தெரியாது. ஆளாளுக்கு ஒரு தியரி எழுதத் தொடங்கி விடுவார்கள் – அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப. மாவீரன் நெப்போலியன் மரணம் பற்றி இப்படி பல தியரிகள் உள்ளன. அதில் வலுவான காரணம் ஆர்செனிக் (Arsenic) என்ற வேதிப் பொருள்.

விஷங்களிலேயே வீரியம் அதிகம் கொண்டதால் ஆர்செனிக் ‘விஷங்களின் அரசன்’ (King of poisons) என்று அழைக்கப் படுகிறது. சென்ற நூற்றாண்டு வரை அரச குடும்பங்களில் யாரையாவது போட்டுத் தள்ள வேண்டுமென்றால் “எடு ஆர்செனிக்கை” என்று காரியத்தைக் கச்சிதமாக முடித்தனர். அப்படியானால் இது “அரசர்களின் விஷம்” என்றும் கொல்லலாம்… கொள்ளலாம் (தலைப்பு அப்படி).

carcinogen என்ற புற்றுநோய்-ஊக்கிகளில் தலையாயது ஆர்செனிக். வயிறு, நுரையீரல், சிறுநீரகம், தோல் என்று பல்வேறு உறுப்புகளிலும் புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடியது. ஆர்செனிக் மிகுந்த நிலத்தடி நீரைப் பருகி வங்க தேசத்திலும் மேற்கு வங்கத்திலும் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் பல லட்சம்.

நெப்போலியனின் பிரேத பரிசோதனையில் அவனது வயிற்றுப் பகுதியில் புற்று நோய் இருந்ததது தெரிய வந்தது.  அவனது தலை முடியில் அளவுக்கு அதிகமாக இருந்த ஆர்செனிக்குடன் தொடர்பு படுத்திப் பார்க்கையில் இது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியே என்று சில நிபுணர்கள் சொல்கின்றனர். இதனை உறுதிப் படுத்த தங்களது தலைமுடியை மட்டுமல்லாது அவனது தலைமுடியையும் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாட்டர்லூ போர் களத்தில் தோற்ற நெப்போலியனை சிறையில் அடைக்கவில்லை. “இங்கேயே கிட” என்று செயின்ட் ஹெலெனா என்ற தீவில் விட்டு விட்டனர்.  ஆங்கிலேயக் குசும்பு.

தனிமை

உலகிலேயே மிகவும் தனித்த தீவு செயின்ட் ஹெலெனா. நாளுக்கு இரண்டு முறை பேருந்து வரும் கிராமத்தில் இருந்தாலே “போரடிக்கிறது” என்று நொந்து விடுகிறோம். பல நாடுகளைப் போர்தொடுத்து வென்ற நெப்போலியனை நினைத்துப் பாருங்கள். உண்மையில் ஆர்செனிக்கை விட தனிமை தான் அவனை மிகவும் கொன்றிருக்க வேண்டும்.

(விஷம் பரவும்)

விஷக் கதை 2 : சாக்ரடீசைக் கொன்ற நஞ்சு

பெரும்பாலான விஷங்கள் தாவரங்களில் தான் இருக்கின்றன. விலங்குகள் தங்களைக் காத்துக் கொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஆனால் தாவரங்கள் எங்கே போகும்? அதனால் தான் இயற்கை இவைகளுக்கு ஆல்கலாய்டு உள்ளிட்ட விஷப் பொருட்களை அளித்துள்ளது.

ஒன்றும் அறியாதது போல் இருக்கும் இந்த தாவரங்கள், “என்னையா சாப்பிடுகிறாய், செத்தாய்!” என்று நமக்கு கேட்காத ஒரு பாஷையில் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வகை தாவரங்களில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது ஹெம்லாக் (Hemlock) என்ற செடி தான்.

தண்டனை

கிரேக்க மேதை சாக்ரடீசைக் கொல்ல இந்த தாவரத்தின் விஷத்தைத் தான் பயன் படுத்தினார்கள் என்று அவரது மாணவர் பிளாட்டோ எழுதிய புத்தகத்தில் இருந்து தெரிய வருகிறது.

தண்டினை விட வேரில் தான் அதிக விஷத்தை வைத்திருக்கிறது ஹெம்லாக். இது மூலக் கூறு வடிவமைப்பில் நிகோடின் என்கிற நாம் ஓரளவு அறிந்த (அதாங்க… இந்த சிகரெட்டில் இருக்குமே…) மூலகூற்றின் ஜெராக்ஸ் காப்பி. செயலும் அது போன்றதே. ஆனால் வேகம் அதிகம்.

அப்படியானால் இதிலும் போதை வருமா என்று கேட்காதீர்கள். போதை வரும்…. ஆனால் அதை உணரும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். வேகமாக மத்திய நரம்பு மண்டலத்தைத தாக்கத் தொடங்கி, தலைவலி, அளவுக்கதிகமான உமிழ்நீர் சுரத்தல், வியர்த்துக் கொட்டுதல், அதிவேக இதயத் துடிப்பு, இறுதியில் சுவாசக் குழாய் செயலிழப்பு என்று தன் கைவரிசையைக் காட்டி விடும் இந்த ஹெம்லாக் – இத்தனையும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள்.

பூத்துக் குலுங்கும் ஹெம்லாக்

சாலையோரம் அழகாக பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன ஹெம்லாக் செடிகள் – சாக்ரடீஸ் இறக்கத் தாங்கள் பயன்பட்டது தெரியாமல்…

(விஷம் பரவும்)

விஷக் கதைகள் – 1

ஃபேஸ்புக்கில் விளையாட்டாக ஆரம்பித்தோம் – “உங்களைக் கொலை செய்ய காத்திருக்கும் 10 நண்பர்கள்” என்ற ‘பயன்பாட்டில்’. என் ஆருயிர் நண்பர்கள் இருவர் என்னை எப்படி விஷம் வைத்துக் கொள்வது என்று என்னுடனே கலந்தாலோசித்தனர். நல்ல வேடிக்கையாக இருந்தாலும் அடி வயிற்றைக் கொஞ்சம் கலக்கத் தான் செய்தது.

ப்ரூஸ் லீ, மைக்கேல் ஜாக்சன் போன்ற பிரபலங்கள் இறக்கக் காரணம் அவர்கள் உட்கொண்ட சிலவகை மருந்துகளே அவர்களுக்கு விஷமாக மாறியது தான் என்ற கருத்து ஒருபுறம் இருக்க, இந்த விஷம் என்பது முதலில் எப்போது தோன்றியிருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

சில நாட்களுக்கு முன் படித்த பழைய National Geographic (மே 2005) இதழில் வந்த கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. மேலும் பாட்டி சொன்ன புராணக் கதை, நெப்போலியன் வரலாறு, நந்தா திரைப் படம், ‘நஞ்சிருக்கும் தோலுரிக்கும்’ என்கிற இரட்டுற மொழிதல் பாடல் என்று நினைவுகள் விஷம் போல பரவத் தொடங்கி விட்டன. முதலில் கடவுளில் இருந்து ஆரம்பிப்போம்.

ஆலகாலம்
அசுரர், தேவர் என்ற இரண்டே ஜாதியினர் வாழ்ந்து வந்த காலத்தில், அமிர்தம் யாருக்கு என்பதில் கடும் போட்டி. ஆளுக்குப் பாதி என்ற ஒப்பந்தம் செல்லாது. முந்தியவருக்குப் பந்தி என்கிற ரீதியில் பாற்கடலைக் கடையத் தொடங்கி விட்டனர்.

முதலில் வந்ததோ அமிர்தம் அல்ல, ஆலகாலம் என்ற கொடிய விஷம். இந்த நஞ்சின் மூலப் பொருட்கள் என்னென்ன என்று இன்றளவும் டாக்சிகாலஜி நிபுணர்களால் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த விஷம் உலக உயிர்கள் அனைத்தையும் அழிக்க வல்லது. இந்த சொல்யூஷனை வெல்ல ஒரே சொல்யூஷன் சிவன் தான் என்பதால் அவரிடம் சென்று அனைவரும் முறையிட்டனர்.

சிவனும் ஏதோ ரசம் குடிப்பது போல் இந்த விசத்தைக் குடித்து

நீலகண்டன், நஞ்சுண்டன்

விட்டார். சிவனுள் பாதியாம் பார்வதி மிக லாவகமாக சிவனது கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டார். இதனால் விஷம் உள்ளேயும் இறங்காமல் வெளியேயும் போகாமல் அவரது தொண்டை பகுதியிலேயே நின்றுகொண்டது. ஆஸ்தான வைத்தியர் தனவந்திரி, இரவு முழுவதும் சிவனார் தூங்கக் கூடாது. அப்போது தான் விஷத்தின் தன்மை குறையும் என்று கூறியதும் கடவுளர் பலரும் சிவன் தூங்காதிருக்கப் பல நடன நிகழ்சிகள் நடத்தினர். இந்த ராத்திரியை நாம் இன்றளவும் சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

சரி டாக்சிகாலஜிக்கு வருவோம். ஆலகால விஷத்தால் சிவனின் உயிர் போகவில்லை. மாறாக, அவருக்கு இன்னும் இரண்டு பெயர் கிடைத்தது. நஞ்சினை உண்டதால் நஞ்சுண்டன் என்றும் நஞ்சின் தன்மையால் அவரது கழுத்து நீல நிறம் ஆனதால் நீலகண்டன் என்றும் பெயர் பெற்றார்.

இந்த விஞ்ஞான யுகத்தில் ஆலகாலத்தின் தன்மை அணு குண்டுகளுக்கும் ரசாயன, உயிரியல் ஆயுதங்களுக்கும், ஏன் மது பானங்களில் இருக்கும் ஆல்கஹாலுக்கும் இருக்கக் கூடும். எதற்கும் சிவனிடம் இப்போதே சொல்லி வைப்போம்.

(விஷம் பரவும்)