குரவைக் கூத்து


பழுவேட்டரையர் அந்தப் பல்லக்குப் பெண்ணை மணந்து கொண்டு ஒரு சிறைக் கைதியைப் போல் வைத்திருக்கிறார் என்று கந்தமாறன் சொன்னான். அவள் எந்த நாட்டவளாக இருப்பாள் என்று அந்தப்புரப் பெண்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தனர். குரவைக் கூத்து ஆரம்பிக்கவே ஆவலுடன் அதைக் காணச் சென்றேன். முருகனின் புகழ் பாடிய அந்த கூத்து முடிந்து தேவராளன் ஆட்டம் துவங்கியது. இறுதியில், ‘சந்நதம்’ வந்த தேவராளனிடம் பூசாரி மழை பொழியுமா, வெள்ளம் பெருகுமா, வளம் செழிக்குமா என்று கேட்டார். எல்லாம் நடக்கும் என்று சொன்ன தேவராளன், அனைவரும் திடுக்கிடும்படி “துர்க்கை கோபமாக இருக்கிறாள். அரச ரத்தம் கேட்கிறாள்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான். உடுக்கு சத்தம் நின்றதும் தேவராளனின் வெறியாட்டமும் நின்றது. அந்த இடத்தில் பேரமைதி நிலவிடவே, தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் இப்போது கேட்டது. அந்த திசையில் திரும்பிப் பார்த்தேன். மாளிகையின் வெளி மதில் சுவர் மீது ஒரு தலையை யாரோ வெட்டி வைத்தது மாதிரி தெரிந்தது. அது ஆழ்வார்க்கடியானின் தலை. கண்ணிமைத்த நேரத்தில் அந்த தலை அங்கு இல்லை.