சம்புவரையர் மாளிகை


C_12_4-2.jpg

ஆழ்வார்க்கடியான் ஆபத்தானவன் எனத் தோன்றியதால் மின்னல் வேகத்தில் பயணிக்கலானேன். 1 நாழிகை நேரத்தில் (24 நிமிடங்கள்) கடம்பூர் சம்புவரையர் மாளிகையை அடைந்தேன். பழுவேட்டரையரின் படையினர் சிலர் நேற்று என் குதிரையைப் பரிகாசம் செய்து என்னையும் அவமானப்படுத்தினார்கள். இங்கே வாயிற்க்காவலுக்கும் அவர்களே நின்றிருந்தார்கள். வருவது வரட்டும் என்று துணிந்து உள்ளே புகுந்தேன். வழியில் எத்தனை பேரைச் சாய்த்தேன் என்று எனக்கே தெரியாது. அபாய மணி அடித்ததும் சம்புவரையர் தன் மைந்தனைக் கீழே அனுப்பினார். அவன் என் ஆருயிர் நண்பன் கந்தமாறன். முட்டாள் காவலாட்களைக் கண்டித்துவிட்டு என்னை அவன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தான். பின்னர் நான் ஒரு தடவையேனும் காண வேண்டும் என்றெண்ணியிருந்த பழுவேட்டரையரிடமும் அழைத்துச் சென்றான். உண்மையிலேயே அவர் மேனியில் 64 போர்க்காயங்கள் இருந்தனவா என்ற என் ஐயத்தைக் கந்தமாறன் தெரிவிக்கவே, “என்ன தம்பி, நீயே எண்ணிப் பார்த்தால் தான் நம்புவாயா?” என்று கர்ஜித்தார். ஒரு வழியாக அவரிடம் மழுப்பி விட்டு பின்னர் கந்தமாறனுடன் அந்தப்புரத்துக்குச் சென்றேன். நாணத்தில் அவளது தாய்க்குப் பின்னால் நின்றிருந்தவள் தான் அவனது தங்கையாக இருக்க வேண்டும். அவன் சொன்னதையெல்லாம் வைத்து நான் ஒருவிதமாகக் கற்பனை செய்து வைத்திருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான். சரி சரி… பழுவேட்டரையருடன் நேற்று பல்லக்கில் வந்த மாது எங்கு இருக்கிறாள் என்று பார்க்க வேண்டும்.