நள்ளிரவில்…


நூறு நரிகள் இருக்கும். ஊளையிட்டபடி என்னைத் துரத்தின. நான் ஓடிய எதிர் திசையில் இருந்து ஆயிரம் நாய்கள் என்னை நோக்கிக் குரைத்தபடி பாய்ந்தோடி வந்தன. திறந்திருந்த கோயில் ஒன்றினுள் புகுந்து கதவைத் தாளிட்டேன். காலி கோயில் என்று பார்த்தால் காளி கோயில் அது. காளி சிலைக்குப் பின்னால் இருந்து வெட்டரிவாளுடன் பூசாரி ஒருவன் வெளிப்பட்டு, “வந்தாயா? வா! உன் அரச குலத்தின் வரலாற்றைக் கூறு” என்றான். 300 ஆண்டுகள் அரசு புரிந்த என் குல வரலாற்றைச் சொன்னதும், “நீ தகுந்த பலி அல்ல. ஓடிப் போ” என்றான். திடீரென்று பாசுரம் ஒன்று ஒலித்தது. பாடியவன் ஆழ்வார்க்கடியான். இல்லை, இல்லை… ஆழ்வார்க்கடியானின் தலை மட்டும். பொல்லாத கனவு. எழுந்து நடக்கலானேன். முற்றம் ஒன்றில் பேச்சுக் குரல் கேட்டது. பத்து பன்னிரண்டு பேர் அமர்ந்திருந்தனர். “உம் குமாரனின் தோழன் நம் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடாது. கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் அவனை இங்கேயே வேலை தீர்த்து விட வேண்டியது தான்” என்று ஒருவர் சொல்லக் கேட்டேன். அப்படியானால் இவர்கள் அவ்வளவு முக்கியமான திட்டம் என்ன தீட்டுகிறார்கள் என்று முழுவதும் கேட்டு விட வேண்டியது தான்.