தந்தி: படிக்க – நிற்க – நினைக்க


யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காலம் முன்பு வரை  நடிகர்களுக்குத் தந்தியைப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. சிரிப்புக் காட்சியோ அழுகை காட்சியோ, தந்தி என்றதும் பதறிப் போவது போல் நடிக்க வேண்டும். அது சரி, என்ன ஆயிற்று இந்த தந்திக்கு? இருக்கிறதா இல்லையா? யார் தான் அனுப்பிகிறார்கள், யார் தான் பெறுகிறார்கள்?

போர் நிறுத்தக்கோரி முதல்வர்கள் தான் தந்தி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

“ஆட்சி நிற்க போர் நிற்க” என்று அதிலும் இலக்கிய நயம் இருந்திருக்கலாம்.

போரும் முடிந்து விட்டதாக சிலர் பேசிக்  கொள்கிறார்கள். தந்தியை முற்றிலுமாகத் தடை செய்யும் திட்டம் மைய அரசுக்கு இருந்தாலும் வியப்படைவதற்கு இல்லை.

தினத் தந்திக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். நம்மை அறியாமலே, கொஞ்சமும் பதறாமல் “ஒரு தந்தி கொடுங்க” என்று கேட்டு வாங்கிப் படிக்கிறோம்.

மற்றபடி, பத்தாம் வகுப்புத் தேர்வில் ஒரு இரண்டு மதிப்பெண் கேள்விக்கு ஒரு தந்தி அனுப்பியதாக நினைவு. இன்னும் சில எழுத்தாளர்கள் குளிருக்குப் பற்கள் தந்தி தான் அடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர் தொலைபேசித் தொடர்பு இல்லாத கிராமங்களில் (இருந்தால்) ஒரு வேலை தந்தியைப் பயன்படுத்துகிறார்களோ என்னவோ?

கடல் கடந்து செய்திகளை அனுப்பும் பொருட்டு 1851 இல் ஆரம்பிக்கப் பட்ட வெஸ்டன் யூனியன் நிறுவனம் 2002இல் தனது கடைசி தந்தியை பட்டுவாடா செய்தது.

மனிதனின் முதல் விமானப் பயணம் மற்றும் முதலாம் உலகப் போர்த் துவக்கம் ஆகியவற்றின் செய்திகள் முதலில் தந்தி மூலமே அனுப்பப் பட்டதாம். மோர்ஸ் கோட் (Morse Code) முறையில் அனுப்பப்பட்ட தந்திகள் அக்காலத்தில் தொலை தூர அழைப்புகளை விட மலிவாக இருந்ததால் மக்களின் வரவேற்பைப் பெற்றதாம். நிற்க (STOP) என்ற சொல் இலவசமாதலால் புள்ளிகளைத் தந்தியில் தவிர்த்தனர் (ஒவ்வொரு புள்ளியும் ஒரு சொல்லாகக் கருதப்படும்!).

பீதி

இரண்டாம் உலகப் போரின் போது மஞ்சள் நிறத் தந்திகள் என்றாலே அக்காலப் பெற்றோர் அஞ்சுவர் – அவை பெரும்பாலும் மகன் இறந்த செய்தியைச் சொல்பவை என்பதால்.

1844 இல் மோர்ஸ் தந்தி  முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் தனது நண்பருக்கு “கடவுள் என்ன வடிவமைத்துள்ளார்?” (What hath God wrought?)என்று கேட்டு உலகின் முதல் தந்தியை வாஷிங்டனில் இருந்து பால்டிமோர் நகருக்கு அனுப்பினார். அந்த நண்பர் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

குறுந்தகவல் மற்றும் இணைய வழி அழைப்புகளிடம் மின்னஞ்சலே பிச்சை வாங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தந்திகள் அரும்பொருள் காட்சியகங்களில் முன்பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், 140 எழுத்துக்கள் கொண்ட ட்வீட்களுக்கும் ஓரிரு வரி தந்திகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

நன்றி: http://www.wired.com/science/discoveries/news/2006/02/70147