700 கோடி வயிறுகள்


கருவூலங்களின் காலம் இது. கோயில் கருவூலங்களைத் திறக்கிறார்கள் [1]. அரசு கருவூலங்கள் காலியாகி விட்டதாக சொல்கிறார்கள். இவற்றினிடையே நோர்வே நாட்டில் உலகளாவிய விதை கருவூலம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.

2008 -இல் தொடங்கப்பட்ட Svalbard Global Seed Vault எனப்படும் இந்த கருவூலத்தில் சுமார் 30 லட்சம் வகையான பல்வேறு தானிய விதைகளைச் சேகரிக்கும் உயர்-தொழில்நுட்ப வசதிகள் உள்ளன [2].

எதற்காக?

ஒரு வேளை பருவநிலை மாற்றங்கள், இயற்கை பேரிடர்கள்  போன்றவற்றால் பயிர்வகைகள் அழிய நேரிட்டால் ஒரு backup copy -ஆக இந்த விதைகளைப்  பயன்படுத்தலாம்.

சுருங்கச் சொன்னால் இது ஒரு தொலைநோக்கு கொண்ட விதை வங்கி அல்லது  மாபெரும் குளிர்சாதனப் பெட்டி என்று சொல்லலாம்.

இந்தியாவில் இருந்து 77,239,325  விதைகள் இந்த கருவூலத்தில் பாதுகாக்கப் படுகின்றன.

கோடிக்கணக்கில் செலவிட்டு இப்படி ஒரு அமைப்பை நோர்வே அரசு ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். பலருக்கு இது ‘சின்னப் புள்ளத் தனமாகக்’ கூட தெரியலாம்.

குகை மனிதன் குடியானவன் ஆகி பத்தாயிரம் ஆண்டுகளாகக் காட்டுப் பயிர்களை ‘இது  நாம் கொள்வது, இது நம்மைக் கொல்வது’ என்று தரம் பிரித்து வேண்டியவற்றை சாகுபடி செய்து வந்த உணவுப்பயிர்களே மனித இனத்தை சென்ற நூற்றாண்டு வரை காத்து வந்தன.
மக்கள் தொகை பெருக்கத்தால் விளைநிலங்கள் விலை போனதால் இருக்கும் நிலத்திலேயே எல்லோருக்கும் உணவு விளைவிக்கும் கட்டாயம்.  வந்தது பசுமைப் புரட்சி. வாழ்க ஒரு ருபாய் அரிசி.

Program செய்யப்பட எந்திரங்களாக மாறிவிட்டன பயிர்கள். இயற்கையான பயிர்களைப் போல் சூழலுக்கு ஏற்ப தமது தன்மைகளை மாற்றிக்கொள்ளும் திறன் இவற்றுக்கு இல்லை. தொன்று தொட்டு இருந்து வரும் பயிர் ரகங்கள் மறக்கப்பட்டு அழியும் சூழல் உருவாகிறது.

அசல் போனால் என்ன நகல் இருக்கிறதே என்று இருக்கிறோம். பல தருணங்களில் நகல் செல்லாதது ஆகி விடுகிறது.

அனைத்து நிலங்களிலும் ஒரே வகை பயிர் என்பதால் ஒரு புதிய நோய் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்க்கும் திறன் இல்லையென்று வைத்துக் கொள்வோம். ஒன்று, புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது புதிய பயிர் ரகம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குள் போனது போனது தான். இந்த நோய் எதிர்ப்புத் திறன் ஒருவேளை அழிந்து போன அந்த இயற்கை ரகத்தில் இருந்திருக்கக் கூடும்.

என்ன செய்வது, அசல் தான் இல்லையே!

இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடி ஆகிவிடும் என்கிறார்கள் [3].

இத்தனை வயிறுகளுக்கும் உணவளிக்கும் அதே நேரத்தில் பயிர்களைத் தாக்கும் நோய்களால் விளைச்சல் குறைந்து பஞ்சம் ஏற்படும் நிலையைத் தவிர்க்கவும் வேண்டியுள்ளது.

இது நிச்சயம் கயிற்றின் மேல் நடக்கும் வித்தை தான். பாதி கடந்து விட்டோம். வேகமாக போகிறேன் பேர்வழி என்று கயிற்றை அறுத்து விடவோ கீழே விழுந்து விடவோ கூடாது.

மேற்கோள்: