‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்


 

தமிழ் மக்களும் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று ஒரு பட்டியலிட்டால், அதில் தமிழ்த் தாத்தா .வே.சா. அவர்களின்என் சரித்திரம்நூல் முதல் மூன்றில் ஒன்றாக இருக்கும். சுயசரிதை பட்டியலில் அநேகமாக முதலாவதாக இருக்கும்.

பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழ்த் தாத்தாவைப் பற்றி எப்போதோ படித்ததாக நினைவு. ஒருசில தேர்வுகளில் இரண்டு மதிப்பெண் கேள்விக்கு விடையாக அவரது வாழ்க்கைக் குறிப்பு வரைந்ததே அவரைப் பற்றி நான் நினைத்துப் பார்த்த தருணங்கள். அவர் என்ன படித்தார், எங்கே படித்தார், பழைய ஏட்டுச்சுவடிகளைத் தேடி அலைந்து அவர் சேகரிக்க என்ன காரணம் என்றெல்லாம் யோசித்ததே கிடையாது. பிறகு எங்கே தமிழுக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டைப் பற்றியெல்லாம் எண்ணி வியப்பது?

IMG_0475

 

சமீபத்தில் ஆர்.வீ. தமது பதிவில் தமிழ்த் தாத்தாவின்என் சரித்திரம்நூலைப் பரிந்துரை செய்திருந்தார். மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்த ஆர்வம் பெருகி இந்நூலைப் படித்துவிடுவது என்று முடிவு செய்தேன். மற்றவர்களைக் குறைகூறித் தங்கள் வாழ்க்கைச் சரித்திரத்தை எழுதுபவர்கள் மத்தியில் குறைவற்ற சரித்திர வாழ்க்கை வாழ்ந்த ஒரு மேதையின் சரித்திரத்தைப் படிப்பது, அவருடனே பயணிப்பது போன்ற பிரமிப்பைத் தந்தது.

இந்தப் புத்தகத்தைப் படிக்க விரும்புபவர்களுக்குஸ்பாய்லர்களைத் தராமல் ஒருசில குறிப்புகளை மட்டும் இங்கு தருகிறேன் (சில ஸ்பாய்லர்களைத் தவிர்க்க முடியவில்லை). விரிவாகப் பேச வேண்டுமெனில் தொலைபேசியிலோ கொரோனா பயம் இல்லாத சமயங்களில் நேரிலோ வந்தீர்களானால் மணிக்கணக்கில் நாள்கணக்கில் பேசலாம்.

நான் வியந்தவை:

ஆசிரிய பக்தி

இவரது ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. 19-ஆம் நூற்றாண்டின் இணையற்ற தமிழறிஞர். படித்தால் இவரிடம்தான் தமிழ் படிக்க வேண்டும் என்று தவமிருந்து, அந்த நல்வாய்ப்பும் அமையப்பெற்றதால் ஆசிரியரிடம் மிகுந்த மரியாதை பக்தி கொண்டிருக்கிறார். ஆசிரியப்பிரான்என்றே அவரைக் குறிப்பிடுகிறார். தமது ஆசிரியரின் தமிழறிவு மட்டுமின்றி, மாணவர்களுக்கு உதவும் நல்லியல்பும் .வே.சா. அவர்களைக் கவர்ந்ததே இதற்கு காரணம். நூலில் ஓரிடத்தில், தமிழ் மொழியின் சொல்லழகு போன்ற மீனாட்சியின் இயல்பும் அந்தச் சொல்லின் பொருளான சிவனாகிய சுந்தரதின் இயல்பும் ஒருசேர அமையப்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அவரைப் புகழ்கிறார். இருவருக்கும் இடையே ஒரு நல்லகெமிஸ்ட்ரிஇருந்திருக்கிறது. பிள்ளை அவர்கள் இறக்கும் தருவாயில் இவரது மனநிலையும், கடைசி மூச்சின்போது இவர் வாயால் தேவாரம் பாடக் கேட்டு அவர் கண்ணீர் மல்கியதும் உணர்வுப்பூர்வமானது. இவற்றைப் படிக்கும்போது, நமக்கு இப்படி ஒரு ஆசிரியர் அமையவில்லையே என்ற ஏக்கம் வருகிறது. .வே.சா. போன்ற மாணவராக நாம் இல்லையே என்ற நினைவு வந்ததும்வார்த்தை முட்டுது‘.

 

மதிப்புக் கூட்டல் (value addition)

பிள்ளை அவர்களின் பிரதான சீடராக இவர் திகழக் காரணம் இவரது தமிழார்வமும் அயராத உழைப்பும்தான் என்றாலும், இவற்றோடு இன்னுமொரு கலை இவரது கைவசம் இருந்ததே இவருக்குப் பெரிதும் கைகொடுத்தது. அது இவரது இசைப்பயிற்சி. எல்லோரும் படிப்பது போலவே செய்யுள்களைப் படிக்காமல், அவற்றின் அமைப்புக்கு ஏற்ற ராகத்துடன் இவர் படித்தமை கேட்போர் உள்ளதைக் கவர்ந்திருக்கிறது. செய்யுள்களின் இலக்கிய நயத்தைப் பாராட்டும் திறனோடு அவற்றின் இலக்கண விதிமுறைகளும் இவருக்கு அத்துப்படி. எனவே செய்யுள் இயற்றுவதும் கைவந்த கலை. நல்ல ரசனையும் சேர்ந்துகொண்டது. எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. தாம் பதிப்பித்த நூல்களில் மற்றவர்களைப் போல் மூலத்தையும் உரையையும் மட்டும் பதிப்பிக்காமல், நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு, அரும்பத உரை, மேற்கோள்கள், உதாரணங்கள் என்று பல அம்சங்களைச் சேர்த்து வழங்கியமை இவரது மதிப்புக்கூட்டலுக்கு இன்னொரு சான்று.

 

சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான நபர்

இதை அதிர்ஷ்டம் என்றும் சொல்வார்கள். இவருக்கு அது நிறையவே இருந்திருக்கிறது. பிராமணராக இருந்ததும் இவருக்குப் பல இடங்களில் அனுகூலமாக இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக சென்னை சென்ற போது கிடைத்த வாய்ப்புகளும் தொடர்புகளும் இதற்கு எடுத்துக்காட்டு. ஆசிரியரின் மறைவுக்குப் பிறகு ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் இவரை ஆதரித்து, பிள்ளை அவர்களின் இடத்தில் இவரை வைக்கிறார். தமிழ் வளர்ச்சியில் இந்த ஆதீனத்தின் பங்கு அளப்பரியது. பல அரிய சுவடிகளை இங்கே பாதுகாப்பாக வைத்திருந்தனர். இவரது ஆராய்ச்சிக்கு அவை பெரிதும் பயன்பட்டுள்ளன. டாக்டர். .வே.சா.வின் வாழ்வின் திருப்புமுனை என்றால், அவர் சேலம் ராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்தத்தைச் சொல்லலாம்.

முதலியார்: யாரிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள்?

உ.வே.சா.: மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன்.

முதலியார் (அலட்சியமாக): என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?

உ.வே.சா.: குடந்தை அந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, …. (அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத்தமிழில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள், என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.)

முதலியார் (இடைமறித்து): இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?

உ.வே.சா.: திருவிளையாடற் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், ….

முதலியார் இன்னும் அசரவில்லை.

உ.வே.சா.: நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம்….. கம்பராமாயணம் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

முதலியார்: சரி அவ்வளவுதானே?

உ.வே.சா. நொந்துபோய் நிற்கிறார்.

முதலியார்: இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களை எல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?

உ.வே.சா.: நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் உள்ளனவே?

முதலியார்: அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களை படித்திருக்கிறீர்களா?

.வே.சா.: தாங்கள் எந்த நூல்களைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே!

முதலியார்: சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம்?

இந்தக் கடைசி கேள்விதான் .வே.சா. அவர்களின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ஏனெனில் அச்சமயத்தில் இந்நூல்களை இவரது ஆசிரியர்கூடப் படித்ததில்லை. இதன்பொருட்டு இவர் எடுத்த முயற்சிகளாலேயே நமக்குச் சங்க நூல்களைப் பற்றியும் தமிழின் இலக்கியத் தொன்மை பற்றியும் இன்றைய புரிதலில் ஒருவித மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது தனி வரலாறு.

 

ஆங்கிலம் தெரியாது!

இவ்வளவு பெரிய ஆராய்ச்சியைச் செய்து ஒரு துறையின் நிலையையே மேம்படுத்தியிருக்கும் தமிழ்த் தாத்தா ஆங்கிலம் கற்கவில்லை. வடமொழியும் கற்கவில்லை! தான் பணியாற்றிய கல்லூரியில் விழாவொன்றில் ஷேஸ்பியரின்இளவேனில் கனவுநாடகத்தைத் தமிழில் எழுதியிருக்கிறார், இன்னொருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகு. பல வடமொழி நூல்களைப் பிறர் மொழிபெயர்த்துச் சொல்ல, அவற்றைத் தமிழ் மூலத்துடன் ஒப்பிட்டு, பனையோலைச் சுவடி சேதமாகியோ தொலைந்து போனதாலோ விடுபட்ட பகுதிகளை ஆராய்ந்து பதிப்பித்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் சமஸ்கிருதத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கே அளித்து வந்தமகாமகோபாத்யாயஎன்கிற உயரிய பட்டத்தைத் தமிழ் மட்டுமே கற்றிருந்த இவர் பெற்றமை தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகும் இந்தப் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் இங்கே. வருடத்திற்கு 100 ரூபாய் தந்தார்களாம்).

 

சிறந்த ஆராய்ச்சியாளர் & ஆசிரியர்

திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், தனி ஆசிரியரிடமும் பயின்ற இவர் பின்னர் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனதே இவரது திறமையும் பெருமையும் சொல்லும். ஒரு தேர்ந்த ஆராய்ச்சியாளரின் பக்குவத்துடன், உணர்வுபூர்வமாக மட்டும் அணுகாமல், அறிவுபூர்வமாகவும் ஆராய்ந்து, அந்தத் துறையில் தேர்ந்த அனுபவசாலிகளிடம் கலந்துரையாடி, பிழைகள் இருப்பின் அடுத்த பதிப்பில் சரிசெய்யும் பக்குவத்துடன் பணியாற்றியிருக்கிறார். திருக்குறளையும் நாலடியாரையும் மொழிபெயர்த்த ஜி.யூ. போப், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர், தமிழ்த் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மறைமலையடிகளார், . . சிதம்பரனார், ஃப்ரான்ஸ் நாட்டின் இந்திய மொழி ஆராய்ச்சியாளர் ஜூலியன் வின்சன் போன்றோருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். தன் ஆசிரியரைப் போலவே இவரும் தமது மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர். ஆசிரியர் பணியில் கிடைத்த வருமானத்தையும் (மாதம் 50 ரூபாய்) தமிழார்வம் கொண்ட புரவலர்கள் தந்த பணத்தையும் கொண்டே தாம் கண்டெடுத்து ஆராய்ந்த பல தமிழ் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்

 

மணவாழ்க்கை?

தனது பாட்டனார் பிறப்பு முதல் தன் ஜாதகம் வரை பகிர்ந்துகொண்ட .வே.சா. என்ன காரணத்தாலோ தமது மண வாழ்வைப்பற்றியும் தமது மனைவியின் பங்கு பற்றியும் அதிகம் எழுதவில்லை. மகன் பிறந்ததை ஒரு இடத்தில குறிப்பிடுகிறார். அவ்வளவுதான். ஒருவேளை தமது துணைவியாரைப் பற்றி இறுதியில் தெரிவிக்கலாம் என்று எண்ணியிருந்திருப்பாரோ என்னவோ. அதற்குள் இயற்கை எய்திவிட்டார். தமிழ்த் தேடலை வாழ்வெனக் கொண்ட தமிழ்த் தாத்தா தன்னைப் பற்றி இன்னும் அறிய மக்களும் தேடட்டும் என்று நினைத்துவிட்டார் போலும்! இந்நூலின் தொடர்ச்சியாக இவரது மாணவரான கி. வா. ஜகந்நாதன் எழுதியஎன் ஆசிரியப்பிரான் நூலில் மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

 

என்ன அவசரம்?

பல சாதனைகளைச் செய்தவர். இத்தகையவர் இன்னும் சில ஆண்டுகளாவது இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் அப்போது இருந்திருந்தால் சுவடிகளைத் தேடி இவரது அலைச்சல் வெகுவாகக் குறைந்திருக்கும். ‘வளையாபதிபிரதி இருக்கிறது என்று யாரேனும் சொன்னால் உடனே இவர் கிளம்பிப் போய்ப் பார்த்தால், அது வேறு ஏதாவதாக இருக்குமாம். அப்போது திறன்பேசி இருந்திருந்தால் ஸ்கேன் செய்து அனுப்புங்கள் என்று சொல்லி, உறுதி செய்துவிட்டுக் கிளம்பியிருப்பார். இந்த மாதிரி அலைச்சல்களும் மன உளைச்சல்களும் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கும். அதேபோல், இன்றைய மருத்துவ வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அப்போது இருந்திருந்தால் அவரது ஆரோக்கியம் இன்னும் நல்ல முறையில் இருந்திருக்கக்கூடும். என்ன செய்வது?

 

ஹிந்தியா தமிழா?

இவரது மாணவர்களில் ஒருவரும், அப்போதைய மாகாண அரசின் அமைச்சருமான சுப்பராயலு என்பவர் இவரிடம் வந்துஇன்றைய நிலையில் ஹிந்தி படித்தால் மாணவர்களுக்கு நல்லது. இதை நீங்கள் சொன்னால் பலரும் ஏற்றுக்கொள்வார்கள்என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நம் தாத்தா அவர்கள், ஹிந்தி படிப்பது நல்லதுதான். அனால் அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். இவரே உண்மையான திராவிடர். தமிழர்.

இறுதி மூச்சு வரை தமிழ் தமிழ் என்றே வாழ்ந்திருக்கிறார். உலகப் போர் பதற்றத்தின்போது சென்னையிலிருந்து திருக்கழுக்குன்றம் சென்றவர் தமது நூல்களையும் சுவடிகளையும் அங்கே கொண்டுவரும்படி சொல்லியிருக்கிறார். பத்து மாட்டு வண்டிகளில் அவை கொண்டுவரப்பட்ட பின்புதான் நிம்மதி அடைந்திருக்கிறார்.

அருங்காட்சியகமாக இருக்க வேண்டியதியாகராச விலாசம்என்ற இவரது இல்லம் இடிக்கப்பட்டுவிட்டது என்கிற செய்தி அதிர்ச்சியளித்தது. நமது டிசைன் அப்படி.

சில நேரங்களில், இவர் தனி ஒருவராக இருந்து பழைய தமிழ் நூல்களைக் கண்டுபிடித்துத் தந்ததாக ஒரு செயற்கையான பிம்பம் கட்டி அமைக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும்கூட வருகிறது. இருப்பினும், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, மற்றும் .வே.சா. ஆகியோரே பல்லவர் காலத்திற்கும் முந்தைய இலக்கியங்களைத் தேடிப் பிடித்துப் பதிப்பித்து, தமிழ் இலக்கிய வரலாற்றை கி.மு. காலத்திற்கும் முந்தையது என்று நிறுவினார்கள் என்பதை மறுக்க முடியாது. அதுவரையிலும், இந்திய மொழிகளில் சமஸ்கிருதம் மட்டுமே செம்மொழி என்று இந்திய மற்றும் உலக மொழி அறிஞர்களெல்லாம் எண்ணிக்கொண்டிருந்த வேளையில், இவர்களது ஒப்பற்ற உழைப்பால்தான் சமஸ்கிருதத்தின் சார்போ தாக்கமோ இல்லாமல் தனித்தே ஒரு மொழிதமிழ் என்ற அந்த மொழி – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வரலாறும் வளமும் பெற்று இன்னும் பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு செம்மொழியாகத் திகழ்ந்து வந்திருக்கிறது என்ற உண்மை தெரியவந்தது. ஆய்வுலகத்துக்கு இது ஒரு பேரதிர்ச்சி. தமிழுலகத்துக்கோ பெரியதொரு இன்ப அதிர்ச்சி. நாம் எல்லோரும் பெருமப்பட வேண்டிய ஒரு மறுமலர்ச்சி (Renaissance) இது.

தற்போதைய கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களையும் செய்திகளையும் கொண்டு பார்க்கும்போது பல உடைந்த துண்டுகள் ஒன்றுசேர்ந்து பெரும் புதிர் ஒன்று விடுவிக்கப்படுவது போல் உள்ளது.

ஓலைச்சுவடியையோ எழுத்தாணியையோ நான் இதுவரை பார்த்ததில்லை. சுவடிகள் எழுதும் முறை பற்றி இந்நூலில் தமிழ்த் தாத்தா சொல்லியிருக்கிறார். இணையத்தில் தேடியபோது, உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முறை இருந்திருக்கிறது என்றும் அவற்றைப் பற்றி இன்றும் பல நாடுகளில் சிறந்த ஆராய்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அறிந்து கொண்டேன். அவற்றைப் பற்றி மற்றொரு பதிவில் சொல்கிறேன்.

இணைப்புகள்:

1. விக்கியில் இந்நூலைப் படிக்க

2. உ.வே.சா. அவர்கள் சென்னையில் வாழ்ந்த இல்லம் இடிக்கப்பட்ட செய்தி

3. சென்னையில் அவர் பெயரில் அமைக்கப்பட்ட நூல் நிலையத்தின் நிலை (2013-ஆம் ஆண்டில்)

4. அன்றைய தமிழ்ப் புலவர்களின்/ஆசிரியர்களின் நிலை 

 

1 comments on “‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்

  1. உ.வே.சாமிநாதனார் வைதீகப்பார்ப்பனர்என்பது தெரியவருகிறது.அவர் ராமாயணம்& இதிகாசங்கள்,புராணசொற்பொழிவாளராக இருந்தவர்.சேலம் இராமசாமி அவர்களின் கேள்வி, உவேசாமிநாதர்பதில்பகுதியைப்பார்த்தபோது அது உறுதியானது.
    சிவைதாமோதரனார்தான் உவேசா பதுக்கிவைத்திருந்த தொல்காப்பியச்சுவடிகளைப்பிடுங்கிச்சென்று பதிப்பித்தவர்.

    Like

பின்னூட்டமொன்றை இடுக