நான் இழப்பவை…


நான் இழப்பவை…
காலை செய்தித்தாள்
வாயாடி பண்பலை
வெள்ளிக்கிழமை சாயங்காலக்
கோயில் ஒலிபெருக்கி
தேர் திருவிழாவில்
மாடிப் பெண்கள்
முதல் நாள் முதல் காட்சி நெரிசல்
கன்னி  கழியாத தேர்தல் வாக்குறுதிகள்
பழைய காகிதத்துக்கு மாம்பழம்
பக்கத்து ஊருடன் பந்தயக்  கிரிக்கெட்
நேற்றைய மழையின் காளான் தேடல்
நள்ளிரவில்
தானாக ஊளையிட்ட
வங்கி அலாரம்
சில்லரை கேட்டு
சத்தம போடும் நடத்துனர்
மகளிர் இருக்கைக்குப் போராடும் உரிமைவாதிகள்
அவசர ஊர்தியைத் துரத்தும்
இருசக்கர ஆசாமிகள்
தண்டீஸ்வர வீதியில் சந்தன வாசனை
சாலையோர புளியமர நிழலில் தர்பூசணி
கரவொலி கேட்கும் வரை நில்லாத
தொலைக்காட்சித் தர்க்கங்கள்
நன்கொடை கேட்டு கதவு தட்டல்கள்
பாட்டோடு பேருந்து பயணம்
டீக்கடை அரசியல்
வாழை இலையில்
ஆந்திர மதிய உணவு
உதட்டுச் சாயம் வழியாக
ஆங்கிலக் கலப்புத் தமிழ்
இறுதி ஊர்வல நடனங்கள்
இரண்டாம் ஆட்டம் முடிந்து வருகையில்
நாய்களின் துரத்தல்
தீபாவளிப் பட்டிமன்றங்கள்
கழிப்பிடக்   கெட்ட வார்த்தைகள்
தெண்டுல்கர் மீதான திட்டல்கள்
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
எந்த வானிலை அறிக்கையிலும்
வராத மழைகள்
வீட்டுப் பின்புறம் மலர்ந்த
திடீர் பூக்கள்
போர்வையைப் பகிர்ந்திடும்
செல்லப் பூனைக்குட்டி
அம்மா அடுக்கிக் கொண்டே போகும்
அழகு தோசைகள்
புறப்படும் நாட்களில்
அப்பாவுடன் உரையாடல்கள்
இனிய தமிழ் பாடல்கள்
மற்றும் நீ…

பேப்பர் பையன்கள்


செய்தித்தாள் வாசிப்பது ஏதோ பட்டிக்காட்டுத்தனம் அல்லது போன நூற்றாண்டுப் பழக்கம் போல் ஆகிவிட்டது. ட்விட்டர், யூ ட்யூப், News Feeds வகையறாக்கள் தொலைக்காட்சியயையே தூக்கி சாப்பிடும் காலத்தில் செய்தித்தாள் ஓலைச் சுவடி போன்ற வஸ்துவாகிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் செய்தித்தாள் படிப்போர் இருக்கத்தான் செய்கிறோம்.

நாம் ‘சூடாகப்’ படிக்கும் செய்தித்தாளின் அச்சு வேலைக்குப் பிறகு பல நச்சு வேலைகளைத் தாண்டியே நம்மை வந்தடைகின்றது. இறுதியில் பெரும்பாலும் யாரோ ஒரு பெயரறியாத செய்திகள் - நம் வாசற்படியில்....சிறுவன் நம் வீடுகளுக்குள் இன்றைய செய்திகளைத் தூக்கி வீசிச் செல்கிறான். யார் இந்த பையன்?

பேப்பர் பையன்கள் தனியொரு இனம் என்று தான் சொல்ல வேண்டும். வெயிலோ மழையோ, இவர்கள் வந்து போனதை வாசலில் இருக்கும் வாசனை போகாத புத்தம் புதிய செய்தித்தாள் சொல்லும்.

 அண்மையில் ஜெபிரி பாக்ஸ் (Jeffrey Fox) என்பவர் எழுதிய “Rain: What a Paperboy Learned About Business” என்ற நூலைப் படித்தேன். அதில் இவர் பேப்பர் பையன்களின் வாழ்கை மற்றும் அவர்களின் அணுகுமுறையை மையமாக வைத்து எப்படி ஒருவர் தான் செய்யும் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி காண முடியும் என்பதை விவரிக்கிறார்.

இந்நூலில் சாதாரண பேப்பர் பையனாக இருந்து வாழ்வில் முன்னேறியவர்களின் ஒரு பெரிய பட்டியலைத் தந்திருக்கிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் – பல அறிவியல் கதைகளை எழுதிய இசாக் அசிமோவ், பெரும் தொழிலதிபர் வாரன் பஃபெட், ஹாலிவுட் நடிகர் டோம் க்ரூஸ், கண்டுபிடிப்பாளர் எடிசன், மார்ட்டின் லூதர் கிங், மற்றும் பலர். இதைப் படித்தவுடன் எனக்கு நமது பாரத ரத்னா அப்துல் கலாம் நினைவுக்கு வந்தார்.

ஒரு காலத்தில் பேப்பர் பையனாக இருந்தவர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூட ஆலோசனை வழங்குகிறார் ஜெபிரி பாக்ஸ்!

இவர்கள் மிகுந்த பொறுமை உடையவர்களாக, கடமை உணர்ச்சியும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத ஆவல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று தன்னுடைய இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறார்.

எனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது. சிறு வயதில் பேப்பர் பையனாகப் பணியாற்றியவர்கள் அந்த அனுபவத்தையும் தங்களது CV-இல் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதும் இல்லை. சொல்லப்போனால் இது நாம் பெருமைப் பட வேண்டிய ஒன்று.