மூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2


 

சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று தமிழ் வேந்தர்களும் தமிழர் வரலாற்றில் ஒரு சில ஆட்சிக் காலங்களைத் தவிர எப்போதும் தமக்குள் போரிட்டு வந்தனர் என்பதை நாம் அறிவோம்.

இரண்டாம் கரிகாலன் (கி.மு. 60 முதல் கி.மு. 10 வரை), ராஜராஜ சோழன் (கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை) ஆகியோர் நிர்மாணித்த சோழப் பேரரசு மற்ற இரு நாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. அதேபோல், கி.பி. 1280-இல் சடாவர்மன் சுந்தரபாண்டியன் அமைத்த பாண்டியப் பேரரசில் சோழ நாடு அடங்கி விட்டது. மற்ற காலங்களில் எல்லாம் மூன்று வேந்தர்களும் அவரவரது எல்லைகளுக்கு உள்ளேயே ஆண்டு வந்தனர். அவ்வப்போது மற்ற நாடுகளின் மீது படையெடுத்து, தமக்கு இருந்த படை வலிமையைப் பொறுத்து மற்ற இருவரிடம் வெற்றியோ தோல்வியோ அடைந்து வந்தனர்.

இவ்வாறு, எதிரும் புதிருமாகவே இருந்து வந்த இந்த மூன்று மன்னர்களின் வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வைப் பதிவு செய்துள்ளார் ஒளவையார்.

Flags_of_Three_Crowned_Kings

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் நட்புடன் கூடி இருக்கின்றனர். ‘இராசசூயம் வேட்ட’ சோழ மன்னன் பெருநற்கிள்ளி ஒரு யாகம் நடத்துகிறான். அந்த நிகழ்ச்சியில், விருந்தாளிகளாகச் சேரனும் பாண்டியனும் வந்திருக்கின்றனர். இதைக் கண்ட ஒளவையார், பெரும் மகிழ்ச்சி அடைந்து மூன்று மன்னர்களையும் வாழ்த்திப் பாடுகிறார். இந்த நிகழ்வு புறநானூற்றின் 367-ஆவது பாடலாக அமைந்துள்ளது.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;

வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;

வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;

யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

- புறநானூறு 367
ஒளவையார்
 

விளக்கம்:

“தேவலோகம் போன்ற நாடாக இருந்தாலும், வேந்தன் இறக்கும் போது அவனுடன் அந்த நாடு செல்வதில்லை. அடுத்து வரும் வலியவன் கைக்கு மாறிவிடும்.

இரந்து வரும் அந்தணர்க்குக் கைநிறைய பூவும் பொன்னும் வழங்கி, பொன் கலத்தில் நாரால் வடிகட்டிய கள்ளினை அருந்தி, ஏழைகளுக்கு இல்லையென்று சொல்லாமல் உதவி செய்து, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் நீங்கள் வாழ்க. உங்கள் இறப்பிற்குப் பிறகு வேறு எதுவும் உங்களுடன் வரப் போவதில்லை. நீங்கள் செய்த நல்ல செயல்களால் மட்டுமே நீங்கள் மக்கள் மனங்களில் வாழ்வீர்கள்.

இரு பிறப்பு (தாய்வழி பிறப்பு, பின்னர் ஞானப் பிறப்பு ஆகியன) கொண்ட அந்தணர் வளர்க்கும் மூன்று வகை வேள்வித் தீயைப் போல (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை) நீங்கள் மூன்று பேரும் காட்சி அளிக்கின்றீர்கள்! வெண்கொற்றக் குடையையும் கொடி கட்டிய தேர்களையும் உடைய வேந்தர்களே, நான் அறிந்த வாழ்க்கை நெறி இதுவே. வானில் இருக்கும் விண்மீன்களையும் பூமியில் பொழியும் மாமழையையும் விட உங்களது வாழ்நாட்கள் சிறந்து விளங்குவன ஆகுக!”

காலம்: இந்த நிகழ்ச்சி கரிகால் வளவனின் காலத்திற்குப் பிறகும் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பாகவும் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்.

பாடலில் நாம் அறியும் மற்றொரு செய்தி: சங்க காலத்திலேயே தமிழ் மன்னர்கள் தமது ஆட்சி நிலைக்க வேள்விகள் செய்துள்ளனர். அதற்கு கைம்மாறாக, அந்தணர்க்கு நிலமும் பொன்னும் வழங்கி இருக்கின்றனர். இன்றைக்கும் (2019-இல்) கூட தலைமைச் செயலகத்தில் நள்ளிரவு யாகங்கள் நடப்பதாகக் கேள்வி. நடக்கட்டும்.

 

பனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1


ஒரு நாட்டின் படை எவ்வளவு பெரியது என்பதை எப்படி சொல்வது? வெகுமக்களிடம் கேட்டால், ‘கடல் போல் பெரியது’ என்று சொல்வார்கள். நாட்டுப் பற்றாளர்களிடம் கேட்டால், எதிரி நாட்டின் படையுடன் ஒப்பிட்டு (உயர்த்திச்) சொல்வார்கள். எதையும் நோண்டிப் படித்துப் பார்ப்பவர்களிடம் கேட்டால், இத்தனை ஆயிரம் படைவீரர்கள், இத்தனை பிரிவுகள், இத்தனை ஆயுதங்கள் என்று பட்டியல் இட்டுப் புள்ளிவிவரம் சொல்வார்கள்.

அதுவே ஒரு நல்ல கவிஞரிடம் கேட்டால்?

சுவைமிக்க உவமை, உவமானங்களுடன் இனிய பாடல் தருவார்கள். அப்படி ஒரு பாடல் தான் புறநானூற்றில் 255-ஆவது பாடல். நலங்கிள்ளி என்ற சோழ மன்னனின் (இரண்டாம் கரிகாலன் என்ற மாமன்னனின் புதல்வன்) படைபலத்தை இந்தப் பாடலில் விவரிக்கிறார் ஆலத்தூர்கிழார் என்ற அரும்புலவர்.

தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ

விளக்கம்:

தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய – முன் செல்வோர் நுங்கின் இனிய சுவையை நுகர,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் – இடையில் சென்றோர் பனம்பழத்தினை நுகர,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர – இறுதியில் செல்வோர், வாய் அகன்ற வாயை உடைய பிசிறுதான் சுடப்பட்ட கிழங்கினை நுகர,
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ – இப்படி ஒழுங்குடன் வலம்வந்து சூழ்ந்து.

சோழனின் காலாட்படை மூன்று பிரிவுகள் கொண்டதாம்.
1. தூசிப்படை
2. இடையணிப்படை
3. இறுதியணிப்படை

இதில் முதலாவதான தூசிப்படை வீரர்கள் பனை நுங்கை உண்பார்கள். இடையணிப்படை வீரர்கள், பனம்பழம் சாப்பிடுவார்கள். இறுதியணிப் படை வீரர்களோ சுடப்பட்ட பனங்கிழங்கைத் தின்பார்கள்.

purananuru1

ஏன் இந்தப் பாகுபாடு?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. முதல் படை போர்க்களம் புகும் பொழுது பனை நுங்கு காய்ந்திருக்கும் காலம். பெரும்பாலும் இவர்களே நுங்குடன் சேர்த்து எதிரிப் படையையும் தீர்த்து விடுவார்கள். வேலை முடியவில்லை என்றால் தான் இரண்டாம் படை அனுப்பப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் நுங்கு பழமாகி இருக்கும். எனவே, இரண்டாம் படை வீரர்கள் பனம்பழத்தை நுகர்ந்தார்கள். இரண்டாம் படையும் தவறினால், இறுதியணிப்படை நுழையும். இதற்குள்ளாக, பனம்பழம் பனங்கிழங்காக மாறியிருக்கும். வெற்றியுடன் சேர்த்து இந்தக் கிழங்குகளை மூன்றாம் படையினர் சுவைத்தார்கள்.

படைகளை ஒரே நேரத்தில் ஓரிடத்தில் குவித்து வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்திய நலங்கிள்ளி போர்த்திறத்திலும் மதிநுட்பத்திலும் ‘கில்லி’ என்பதை இதை விடச் சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது அல்லவா?

இவ்வாறு, பனை மரத்தின் காலச் சுழற்சியைக் கொண்டே நலங்கிள்ளியின் படை மிகுதியையும் (scale), அது ஒழுங்குடன் கடந்து செல்லும் கால நீட்சியையும் அழகாகப் பாடியுள்ளார் ஆலத்தூர்கிழார். சங்க நூல்களில் இத்தகைய அருமையான புதையல்கள் இன்னும் எத்தனை எத்தனை உள்ளனவோ!