சூரியனைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட பார்க்கர்


சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் ஏனைய கோள்களுக்கும், ஏன் சில முரண்கோள்களுக்கும் (Asteroids) கூட விண்ணோடங்களையும் உலவு ஊர்திகளையும் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சித் துறையைப் பொறுத்த வரை மிகவுல் இயல்பானதாக ஆகிவிட்டது. நிரந்தரமாக ஒரு சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகாயத்தில் மிதந்து வலம் வந்து கொண்டு இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளும் விண் ஆராய்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விருப்பத்திற்குரிய ஆய்வு விண்வெளியில் பயணித்தபடியே கடந்த 28 ஆண்டுகளாய் கண்களுக்கும் மனதுக்கும் மூளைக்கும் இனிய, விண்மீன் கூட்டங்கள், சூப்பர்நோவாக்கள், கோள்கள், நிலவுகள் என்று பல விண்குடும்ப வினோதங்களைப் படம் பிடித்து நமக்கு அனுப்பி வரும் ஹப்பிள் தொலைநோக்கி (Hubble Space Telescope) ஆகும். விண்ணியலில் பல்வேறு கருத்தாக்கங்களை மெய்ப்பித்தும் பொய்ப்பித்தும் தெளிவை உண்டாக்கியதில் இந்தத் தொலைநோக்கிக்கு ஈடு இதுவரை எதுவும் இல்லை.

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

ஹப்பிள் தொலைநோக்கி அனுப்பிய படங்களில் இரண்டு

பிற கோள்களிலும் நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளிலும் உயிர்களோ அவற்றைத் தாங்கவல்ல உயிர்வேதியியல் தன்மைகளோ உள்ளனவா என்று அறிய முனையும் விண்வெளி உயிரியல் (Astrobiology) போன்ற துறைகளும் வளர்ந்து வரும் இவ்வேளையில், பெரும் பணக்காரர்களும் வளர்ந்த நாடுகளும் விண்வெளிச் சுற்றுலா, விண் காலனியாக்கம், தனிமவளப் பங்கீடு என்று பல வகைகளிலும் சிந்தித்தும் செயல்பட்டும் வருகிறார்கள்.

இத்தகைய சூழலில், கடந்த 60 ஆண்டுகளாய் நாசா (NASA) ஒரு சவாலான முயற்சிக்காக உழைத்து வந்தது. அது என்னவென்றால், சூரியனுக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது. அது இப்போது நடந்தேறி இருக்கிறது. ஒரு சிறிய மகிழுந்த்து அளவிருக்கும் பார்க்கர் (Parker) என்ற அந்த விண்கலம் சூரியனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்குச் செல்லத் தேவையான ஆற்றலைக் காட்டிலும் 55 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் இந்தப் பயணத்துக்காக உலகிலேயே ஆற்றல் மிகுந்த ஏவூர்தி (rocket) இந்தக் கலத்தை மணிக்கு 4 லட்சத்து முப்பதாயிரம் மைல் வேகத்தில் செலுத்துகிறது. இந்த வேகமும் ஒரு உலக சாதனை. ஏழு ஆண்டு சூரியனை ஆய்வு செய்யவிருக்கும் இந்த விண்கலம் சூரியனை 24 முறை சுற்றி வரும். இதுவரை சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் என்ற பெருமையையும் பெறும் (38 லட்சம் மைல்கள்).

இந்தப் பயணம் மிகச் சிக்கலானது. சூரியனை விட்டுத் தொலைவில் செல்ல வேண்டுமானால் ஈர்ப்பு விசையை மீறி அதிக வேகத்தில் செலுத்தி டாட்டா காட்டி விட்டுச் சென்று விடலாம். ஆனால் சூரியனை நோக்கிச் செல்ல வேண்டி இருப்பதால் இடையில் வேகக் குறைப்பு, கோண மாறுதல் என்று சிலபல சீரமைப்புகள் தேவைப்படுகின்றன. நமது சூரியக் குடும்பத்தில் 99.8 % நிறை சூரியனுடைது. அப்படி இருக்கையில், அதன் ஈர்ப்பு விசையே போதுமே இந்த விண்கலத்தைச் சூரியனுக்குச் செலுத்த? இதில் என்ன சிக்கல் என்று நீங்கள் கேட்கலாம். புவியும் பிற கோள்களும் சூரியனைச் சுற்றி வந்த போதிலும் அதன்பால் இழுத்துக் கொள்ளப் படாமல் இருப்பதற்கு அவற்றின் பக்கவாட்டுச் சுழற்சியே உதவுகிறது. எடுத்துக்காட்டாக, நமது பூமி மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சுழல்கிறது. எனவே, சூரியனுக்குச் செல்ல வேண்டுமானால், இந்தப் பக்கவாட்டு சுழற்சியை முதலில் சரிகட்ட வேண்டும்.

பார்க்கரின் பயணப் பாதை

தனது ஏழாண்டு பயணத்தில் பார்க்கர் கலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வேகத்தைக் குறைத்து இந்த வேலையைச் செய்யும். இதற்காக வெள்ளியின் (Venus) ஈர்ப்பு விசையைக் கொஞ்சம் பயன்படுத்திக் கொள்ளும் (Gravity assist), ஏழு முறை அந்தக் கோளைக் கடப்பதன் மூலம்.

வெப்பம் vs. வெப்பநிலை

சரி, அருகில் சென்றால் போதுமா? கதிரவனின் வெப்பத்தில் கருகிப் போகாமல் இருக்க வேண்டுமல்லவா? இங்கே நாம் ‘வெப்பம்’ (Heat) என்பதற்கும் ‘வெப்பநிலை’ (Temperature) என்பதற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அறிய வேண்டும். வெப்பம் என்பது ஒரு பொருளில் இருந்து மற்றொன்றிற்கு எவ்வளவு ஆற்றல் இடம் மாறுகிறது என்பதைக் குறிக்கும். ஆனால் வெப்பநிலை என்பது இந்த இரு பொருள்களுக்கு இடையில் வெப்பத்தைக் கடத்தும் துகள்கள் எவ்வளவு வேகமாகப் பயணிக்கின்றன என்பதன் அளவீடு. நகல் எடுக்கும் கருவி என்றதுமே ஜெராக்ஸ் என்று சொல்வது போல் வெப்பத்தையும் வெப்பநிலையையும் குழப்பிக் கொள்கிறோம். விண்வெளியில் பெரும் பங்கு வெற்றிடமாக உள்ளது. எனவே, சூரியனின் சுற்றுப்புறத்தில் பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவினாலும் இந்த வெற்றிடத்தில் உலவும் விண்கலத்திற்கு வெப்பத்தைக் கடத்தத் தேவையான துகள்கள் எதுவும் இல்லாததால் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து விடுகிறது. இதன் விளைவாக பார்க்கர் கலத்தின் வெப்பத் தடுப்பு கேடயம் சுமார் 1400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை மட்டுமே உணரும். இது எரிமலைகள் கக்கும் லாவா நெருப்புக் குழம்பை விட 200 டிகிரி செல்சியஸ் அதிகம். 8 அடி அகலமும் 4.5 அங்குலம் தடிமனும் கொண்ட இந்தக் கரிமத்தால் ஆன கேடயத்தைத் தாண்டி பார்க்கர் கலத்தின் மீது படும் வெப்பம் வெறும் 30 டிகிரி செல்சியஸ்! சென்னையை விடக் குறைந்த வெப்பநிலை தான்.

மனிதகுல வரலாற்றில் முக்கியமான இந்தப் பயணத்தில் இன்னும் ஒரு சிறப்பு, சுமார் 11 லட்சம் பொதுமக்களின் பெயர்கள் பதியப்பட்ட நுண்தகடு (microchip) இந்தக் கலத்தில் பயணிக்கிறது.

சூரியனில் உன்

பேரெழுதுவேன்

என்று காதலிக்குக் கவிதை எழுதியவர்கள் நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

தமிழ் குறுக்கெழுத்து 6


இந்த வார தமிழ் குறுக்கெழுத்து. உங்கள் விடைகளையும் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள். சில நேரடி கேள்விகளும் எளிய சொற்களும் இடம்பெறுகின்றன. ஒருசில சிலேடைகள் மற்றும் அறிவியல் தமிழ்ச் சொற்களும் இலவசம்.

தமிழில் கலக்குங்கள்…

 இடமிருந்து வலம்

1. பழந்தமிழ் டென்னிஸ் வீராங்கனை? (7)

4. அண்டத்தில் நாம் வசிக்கும் காலக்ஸி.  (4)

5. உயிர் காக்கும் உபகாரம் (3, 3)

6. குழந்தையும் தெய்வமும் தோன்றும் இடம்.  (4)

9. சுழலும் விளையாட்டுக் கருவி. (5)

11. கார்பன் – தமிழில் (2)

12. நீளம், அகலம், உயரம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு. (7)

14. பிளாஸ்டிக் – தமிழில் (3)

15. எப்படியோ இந்த கேள்விக்கான விடை வெளியே தெரிந்து விட்டது! (5)

16. பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் தலையெழுத்து? (2, 2)

மேலிருந்து கீழ்

1 புதுக்கவிதையின் பழைய பெயர் (6)

2. முடி திருத்தகத்தில் வரிசையாக ஒரே சந்ததியினர் (4)

3. திருமணம் ஆகாதவள் – பணக்காரி (3)

4. பயம் கொள்ளலாகாதவர் செய்வது (4)

7. இல்லாமை (4)

8. கடகடவென்று இதை நிரப்புங்கள் (8)

10. உப்பு விளையும் இடம். (5)

13. மங்கையர் செய்தது? (4)

11.கவி பாடும் கட்டுத் தறி வைத்திருந்த கவிஞன். (4)