மருந்து இருக்கிறதா?


ஜூலை 2020 கணையாழி இதழில் வெளிவந்துள்ள என் வரிகள்:

கதவு திறந்ததும்
கட்டித் தழுவிட
ஓடோடி வருகிறாய்.

சட்டென விலகிக் கொள்கிறேன்.
உன் அம்மா
உனை வாரிச் செல்கிறாள்.

நிம்மதிப் பெருமூச்சுடன்
நழுவுகிறேன்
குளிப்பதற்கு.

தேய்க்கிறேன் கழுவுகிறேன்
தேய்க்கிறேன் கழுவுகிறேன்

இன்னும் கொஞ்சம் சுடுநீர்
இன்னும் கொஞ்சம் சோப்பு

விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
எங்கேயும் இருக்கலாம் கிருமி.

சிலரைக் குணமாக்கி
வீட்டுக்கு அனுப்பினேன்.
ஒருசில உயிர்களை
இப்போதைக்கு இருக்கச் செய்தேன்

என்ன செய்தும்
மற்றவர்கள் மரித்துப் போனார்கள்.

இந்த இருப்புகளில் விருப்பும் இல்லை
இறப்புகளில் வெறுப்பும் இல்லை.

தேய்க்கிறேன் கழுவுகிறேன்
தேய்க்கிறேன் கழுவுகிறேன்

இன்னும் கொஞ்சம் சுடுநீர்
இன்னும் கொஞ்சம் சோப்பு

விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
எங்கேயும் இருக்கலாம் கிருமி.

இன்று வரைந்த ஓவியம்
காகிதப் பூ கத்திக் கப்பல்
சேலைகட்டி எடுத்த படம்
எல்லாமும் காட்டி

அப்பாவைக் கொஞ்ச வேண்டும்
எப்போது வருவாரென்று

தூக்கத்தைத் தூரப்போட்டு
காத்திருக்கும் என்னுயிரே

புன்னகைப் பூ உன்னைவிட
பெரியதெந்த செல்வமடி?

ஓடி வா என் மகளே
முத்தமழை பொழிய வந்தேன்.

விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
உதட்டோரம்
இன்னும் இருக்கலாம் கிருமி.

கட்டித் தழுவிட
ஓடோடி வருகிறாய்.

சட்டென விலகிக் கொள்கிறேன்.

தூங்கப் போஎன்று அதட்டிவிட்டு
இதயத்தைச் சாத்தி வைக்கிறேன்.

இழந்த இன்பங்களுக்கு
எங்கேயாவது
மருந்து இருக்கிறதா?

கொரோனா குறள்கள்


வள்ளுவரிடமிருந்து ஓலையொன்று வந்திருக்கிறது. அவர் தந்த அதிகாரம்:

கொரோனா களைதல்

1. கைகளைக் கழுவுக கசடற கழுவாக்கால்
கைகழுவிச் செல்லும் உலகு
2. தொடுமுறை தவிர்த்து வணக்கம் உரைப்போர்
விடுமுறை விடுவார் நோய்க்கு
3. நுண்ணுயிர்க் கிருமி பேராயுதம் போலே
மண்ணுயிர்க் கழிவைத் தரும்
4. பெற்றவர் பிறந்தவர் உற்றவர் ஆகினும்
சற்றவர் தூரம் நன்று
5. வீட்டிலும் தெருவிலும் ஊரிலும் தூய்மை
நாட்டிலும் நோய் நீக்கும்
6. தும்மலும் சளியும் வருகையில் வேண்டும்
நம்மிடம் கைக் குட்டை
7. காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல்
நோய்த் தொற்று அறிகுறியாம்
8. வதந்தியும் பதற்றமும் நோயினும் விரைவில்
சுதந்திரம் பறித்து விடும்
9. மருத்துவர் செவிலியர் துப்புர வாளர்
திருத்தொழில் போற்றிடு வோம்
10. ஒன்றென யாவரும் உழைத்திட நோயை
வென்றிட லாம் வாரீர்

அசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு


இன்றைய சமூக சிந்தனையாளர்களில் தவிர்க்க முடியாதவர் அருந்ததி ராய். அவரது The God of Small Things புதினத்தில் நமது சமூகத்தில் நிலவும் சாதியியல் உள்ளிட்ட பல இயல்புகளையும் படம்பிடித்துக் காட்டியிருப்பார். காஷ்மீர் பற்றிய அவரது கருத்துகள் சர்ச்சைக்குரியவை; ஆனால் சிந்திக்கத் தக்கவை என்றே நினைக்கிறேன். கடந்த நவம்பர் 12, 2019 அன்று நியூ யார்க்கில் அவர் ஆற்றிய “இந்தியா: ஒரு முடிவின் நிமித்தங்கள்” (“India: Intimations of an Ending”) என்ற தலைப்பிலான உரை The Nation தளத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் NRC என்கிற தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரலாறு மற்றும் விளைவு பற்றியும் விவரித்துள்ளார். பெரிய கட்டுரை. இதில் அசாம் பற்றிய பகுதியை மட்டும் என்னால் முடிந்த வரை மொழிபெயர்த்துள்ளேன். காஷ்மீருடன் ஒப்பிடுகையில் அசாம் பற்றிய நமது புரிதல் குறைவு என்றே உணர்கிறேன்.

தற்சமயம் பெரிதும் விவாதிக்கப்பட்டு வரும் NRC வெறும் இந்து-முஸ்லிம் தகராறு என்பது போல் சித்தரிக்கப்பட்டு வருகிறது. எதற்காக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் அறிந்திடாமல் எந்தப் பக்கத்துக்கும் ஆதரவாகவோ எதிராகவோ வாதாடுவதில் பயனில்லை என்றே கருதுகிறேன். இதன் மூலம் அசாமின் வரலாற்றை ஓரளவுக்கு நான் அறிந்து கொண்டேன்.

இந்திய இறையாண்மையைக் காக்கக் கம்பு சுற்றிக் கொண்டு வருபவர்கள் இது மொழிபெயர்ப்பு என்பதை முதலில் அறிவதுடன் முழுவதையும் படித்துவிட்டு, முடிந்தால் மூலத்தையும் படித்துவிட்டு வருவது நலம்.

கட்டுரை இதோ:

அசாம் ஒரு எல்லைப்புற மாநிலம். அதற்கென்று தனித்துவமான வரலாறு உண்டு. அந்த வரலாறெங்கும் பல்வேறு தரப்பினரின் உரிமைகோரல்கள், மக்களின் இடப்பெயர்வுகள், போர்கள், படையெடுப்புகள், மாறிக்கொண்டே இருக்கும் எல்லைகள், பிரிட்டிஷ் காலனியாக்கம் என்று பல வடுக்கள். எழுபது ஆண்டுகள் தேர்தல் மக்களாட்சியாலும் இந்த வடுக்களைப் போக்க முடியவில்லை.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பதன் தேவை அசாமின் இந்தத் தனித்துவமான வரலாற்றால் முக்கியத்துவம் பெறுகிறது. 1826-இல் ஆங்கிலேயர்களிடம் தோற்ற பர்மா (இப்போதைய மியான்மார்), அசாம் என்கிற பகுதியைப் பிரிட்டிஷாரிடம் தாரைவார்த்தது. அப்போது அசாம் என்பது அடர்ந்த காடுகளையும், குறைவான மக்கள்தொகையையும் கொண்டிருந்தது. போடோ, கச்சாரி, மிஷிங், லாலுங், அஹோமிய இந்துக்கள், அஹோமிய முஸ்லிம்கள் என்று நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு குழுவினரும் தமக்கே உரிய மொழி அல்லது வட்டார வழக்கு, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். ஆதலால், ஒட்டும்மொத்த இந்தியாவைப் போலவே, பல்வேறு தரப்பினரும் வாழும் பகுதியாக இருந்து வந்தது அசாம். இந்த ஏற்பாட்டைச் சற்றே மாற்றினாலும்கூட வன்முறை வெடிக்கும் நிலை இருந்தது.  இந்நிலையில், 1837-இல் இத்தகைய வன்முறைக்கு வித்திடப்பட்டது. அசாமின் புதிய முதலாலிகளான ஆங்கிலேயர்கள், வங்காள மொழியை (Bengali) அப்பகுதியின் அலுவல் மொழியாக்கினார்கள். அதாவது, எல்லா நிர்வாக மற்றும் அரசுப் பதவிகளும் படித்த, வங்க மொழி பேசும், உயர்நிலை இந்துக்களுக்குச் சென்றன. 1870-இல் அசாமிய மொழிக்கும் அலுவல் மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட போதிலும், அசாமியர்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இன்னும் கடுமையானதாகவே மாறியது. 150 ஆண்டுகள் கழிந்தும் இந்தப் பகை இன்றளவும் தொடர்கிறது.

19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், அசாமின் நிலவளமும் பருவநிலையும் தேயிலைச் சாகுபடிக்கு உகந்ததாக இருப்பதை ஆங்கிலேயர்கள் அறிந்தனர். அசாமிய பூர்வகுடிகளுக்கோ இந்தத் தேயிலைத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய விருப்பமில்லை. எனவே, மத்திய இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தோட்டத் தொழிலாளிகளாக அசாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். இப்படி அழைத்துவரப்பட்ட மக்கள் மட்டும் இன்றைய அசாமின் மக்கள்தொகையில் 15 முதல் 20 விழுக்காடு உள்ளனர். வெட்கம் என்னவென்றால், இந்த மக்கள் உள்ளூர் மக்களால் தரக்குறைவாக நடத்தப்படுவதுதான். முதலாளிகள் மட்டும் மாறியிருக்கிறார்கள். இவர்களின் நிலை இன்னும் அதே அடிமை நிலைதான்.

1890-களில் தேயிலை வியாபாரம் வளர்ந்த நிலையில், கிழக்கு வங்காளத்தில் மேற்கொண்டு தேயிலை பயிரிட இடமில்லை. அந்தப் பகுதியில், பிரம்மபுத்திரா நதியால் வளமூட்டப்பட்ட, ஆற்றின் போக்கினால் மாறிக்கொண்டே இருக்கும் நிலப்பரப்பை உடைய சார்ஸ் (chars) என்ற தீவுக்கூட்டங்கள் ஆங்கிலேயர்களின் கண்களை உறுத்தின. இத்தீவுகளில் இருக்கும் மரங்களை வெட்டிக் காடுகளை விவசாய நிலங்களாக மாற்றி விட்டால், அதன்மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு இன்னும் அதிக வருவாய் கிடைக்கும் என்று தீர்மானித்தனர். அதன்பொருட்டு, இத்தகைய நிலப்பரப்பில் உழவுத்தொழில் செய்வதில் மிகுந்த திறமைபெற்ற வங்காள முஸ்லிம் உழவர்களை ஆங்கிலேயர்கள் அசாமிற்கு அழைத்துச் சென்றார்கள். ஆங்கிலேயர்களுக்கு வேண்டியதெல்லாம் லாபம். காடுகளாவது பூர்வகுடிகளாவது. அவர்களைப் பொறுத்தவரையில், அசாம் என்பது ‘யாருக்கும் உரிமையற்ற’ ஒரு பகுதி. அங்கு யார், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நிலப்பரப்பும் அதில் வாழும் மக்களும் ஒரு பொருட்டே அல்ல. இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களை வைத்துக் காடுகளை அழித்தும், சதுப்பு நிலங்களை விளைநிலங்களாக மாற்றியும், 1930 வாக்கில் அந்தப் பகுதியின் பொருளாதார, நிலவியல் மற்றும் மக்கள்தொகை அமைப்பைத் தலைகீழாக மாற்றிவிட்டனர்.

முதலில், புதிதாக வந்தவர்கள் வரவேற்கப்பட்ட போதிலும், காலப்போக்கில் இன, மத, மொழி வேறுபாடுகளால் பதற்றம் உருவானது. இந்தப் பதற்றம் 1941-இல் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கீட்டால் சற்று தணிந்தது. குடிபெயர்ந்தவர்களும், தாங்களும் அசாமியர்களே என்று நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்கள். வங்க மொழி பேசும் இசுலாமியர்கள் ‘மியா’ என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களின் பேச்சு வழக்கு அசாமிய எழுத்துருக்களைக் கொண்டு இன்றளவும் எழுதப்படுவதால், அசாமிய மொழியையே தாய்மொழியாகவும் அலுவல் மொழியாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அசாமின் வரைபடம் மாறிக்கொண்டே இருந்தது. 1905-இல் வங்கப் பிரிவினையின்போது, அசாம் மாநிலத்தை இசுலாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு வங்காளத்துடன் (இன்றைய பங்களாதேஷ்) இணைத்தனர் ஆங்கிலேயர்கள். தாக்கா அதன் தலைநகர். ஒருகாலத்தில் இடம்பெயர்ந்து அசாமில் குடியேறியவர்கள் இப்போது பெரும்பான்மையினரில் ஒரு அங்கமானார்கள்! ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, வங்காளம் ஒன்றிணைக்கப்பட்டதும் அசாம் மீண்டும் தனி மாகாணம் ஆனது. வங்காளிகள் மீண்டும் குடிபெயர்ந்தோர் ஆயினர். 1947 பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. ஆனால் குடிபெயர்ந்து வந்திருந்த இசுலாமியர்கள் அசாமிலேயே இருக்க விரும்பினார்கள். அதே வேளையில் கிழக்கு வங்கத்திலிருந்து அகதிகளாகப் பல்லாயிரக்கணக்கான இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் அசாமில் தஞ்சமடைந்தார்கள். பின்னர் 1971-இல் நடந்த போரின்போதும் மற்றொரு அகதிகள் அலை அசாம் நோக்கிப் படையெடுத்தது. பங்களாதேஷ் உருவானது.

இவ்வாறு, அசாம் என்கிற பகுதி பர்மாவாகவும், பின்பு கிழக்கு வங்காளமாகவும், கிழக்கு பாகிஸ்தானாகவும், பின்னர் மீண்டும் அசாமாகாவும் பல அவதாரங்கள் எடுத்தது. நாடுகள் மாறின. கொடிகள் மாறின. நாட்டுப்பண் மாறியது. நகரங்கள் வளர்ந்தன. காடுகள் அழிந்தன. ‘வளர்ச்சி’ ஏற்பட்டது. அதில் பழங்குடியினர் காணாமல் போயினர். மக்களுக்கிடையேயான வேற்றுமைகள் அதிகரித்துக்கொண்டே இருந்தன.

வங்கதேச விடுதலையில் இந்திய அரசு பெருமை கொள்கிறது. அமெரிக்க, சீன ஆதரவு கொண்டிருந்த பாகிஸ்தானை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அச்சமின்றி எதிர்க்கொண்டு, வங்கதேசத்தில் இனப்படுகொலையைத் தடுத்து வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றி, அசாமிற்கும் அதன் அகதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவதில் முழு வெற்றி அடையவில்லை.

இந்தச் சூழ்நிலைதான் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியது. இதில் முரண்நகை என்னவெனில், ‘தேசிய’ என்ற பதம் இங்கு இந்தியாவைக் குறிப்பதை விட அசாம் மாநிலத்தையே குறிக்கிறது. இந்தப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் முதல் முயற்சியானது, அசாமிய தேசிய மாணவர் இயக்கத்தின் செயல்பாடுகளால் 1951-இல் நடைபெற்றது. இதே காலகட்டத்தில், தீவிர, ஆயுதம் ஏந்திய, பிரிவினைவாதப் போராட்டங்களும் உயிர் பெற்றன. தனி அசாம் தேசியவாதிகள் ‘வெளிநாட்டினர்’ அனைவரது பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் வரையில் தேர்தலைப் புறக்கணிக்க முடிவுசெய்தனர். “அறி, அழி, அகற்று” (Detect, Delete, Deport) என்பதே அவர்களின் முழக்கமானது. விரைவில் வன்முறை வெடித்தது. 1979-இல் அசாம் பற்றி எரிந்தது. துவக்கத்தில் வங்காளிகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த இயக்கம், பின்னர் இந்து-முஸ்லிம் பரிமாணத்தை அடைந்தது. இதன் விளைவாக, 1983-இல் 6 மணி நேரத்தில் 2000 வங்காள முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நெல்லீ படுகொலை நடந்தது.

1985-இல் கிளர்ச்சி செய்யும் மாணவர் அமைப்புத் தலைவர்கள் அரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடித்தனர். ஒப்பந்தத்தின் படி, 1971-ஆம் ஆண்டு மார்ச் 24  அதாவது பாக்கிஸ்தான் ராணுவம் தாக்கத் துவங்கிய நாள் – அதன் பிறகு அசாமிற்குள் வந்தவர்கள் எல்லோரும் வெளியேற்றப்படுவார்கள். அதாவது 1971-க்குப் பிறகு குடிபெயர்ந்த ‘வந்தேறிகள்’ வெளியேற்றப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து, ‘வந்தேறிகள்’ எல்லைக் காவல் படையாலும், ‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள்’ தேர்தல் அதிகாரிகளாலும் கண்டறியப்பட்டு அன்றைய இந்திரா காந்தியின் அரசின் Illegal Migrants Determination by Tribunal Act (IMDT Act) சட்டப்படி விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் விதிமீறல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தச் சட்டமானது, ஒருவரைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர் என்று நிரூபிக்கும் பொறுப்பைக் குற்றம் சாட்டுபவர்களிடம் ஒப்படைத்தது. இவ்வாறு இதுவரை சுமார் 4 லட்சம் ‘சந்தேகத்துக்குரிய’ வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தடுப்புக் காவல் மையங்களில் வைக்கப்படிருக்கிறார்கள் – எந்தவித அடிப்படை உரிமையும் இன்றி.

2005-ஆம் ஆண்டில், இந்த IMDT சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அசாம் மாநிலம், வங்கதேச மக்களின் சட்டவிரோத குடியேற்றத்தால் ‘வெளிப் பகையாலும், உட்பூசல்களாலும்’ பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே” என்ற கருத்தைப் பதிவு செய்தது நீதிமன்றம். நிரூபிக்கும் பொறுப்பு, குற்றம் சாட்டியவரிடமிருந்து குற்றம் சாட்டப்பட்டவரிடம் தள்ளிவிடப்பட்டது. இதனால், குடிமக்களில் ஒவ்வொருவரும் தத்தமது குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். இதுவே இன்றைய NRC திட்டத்துக்கு அடித்தளமிட்டது. அனைத்து அசாமிய மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்த சர்பானந்த சோனாவால் என்பவர்தான் இந்த வழக்கைத் தொடுத்தவர். இவர் இப்போது ப.ஜ.க.வில் இணைந்து மாநில முதலமைச்சரும் ஆகிவிட்டார்.

2013-இல் அசாம் பப்ளிக் வர்க்ஸ் என்கிற அரசு சாரா இயக்கம் “சட்டவிரோத குடியேறிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்” என்று கோரி உச்சநீதி மன்றத்தை நாடியது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த நீதிபதி ஒரு அசாமியர்.

2014-இல் உச்ச நீதிமன்றம் “ஒரு ஆண்டுக்குள்ளாக, தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) புதுப்பிக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதன்மூலம் கண்டறியப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சுமார் 50 லட்சம் ‘ஊடுருவிகளை’ என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களை மீண்டும் வங்கதேசத்துக்கு நாடுகடத்துவதைப் பற்றியும் எந்தத் தெளிவும் இல்லை. அத்தனை பேரையும் தடுப்பு முகாம்களில் வைப்பதா? எவ்வளவு காலத்துக்கு? அவர்கள் குடியுரிமை பறிக்கப்படுமா? யாருக்கும் தெரியாது.

தொலைதூரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான கிராம மக்கள் தாங்கள் வழிவழியாக 1971-க்கு முன்பிருந்தே அசாமில் குடியிருப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம். உச்ச நீதிமன்றம் இட்ட கெடு முடிவதற்குள் இதைச் செய்து முடிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. கல்வியறிவற்ற, ஏழை கிராமவாசிகள் இந்தக் கொடிய நிர்வாகச் சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.

ஏற்கனவே சொன்னது போல், அசாமின் தனித்துவமான நில அமைப்பு பிரம்மபுத்திரா நதியின் போக்கின்படி மாறிக்கொண்டே இருப்பது. இப்போது வளமான தீவாக இருக்கும் நிலப்பரப்பு எந்த நேரத்திலும் நதியின் கோர தாண்டவத்தினால் மூழ்கிவிடக் கூடியது. அதற்குப் பிராயச்சித்தமாக, அதுவரை நீருக்கடியில் இருந்த வேறொரு இடம் புதிய தீவாகப் பரிணமிக்கும். இவ்வாறான ‘சார்’ எனப்படும் தீவுக்கூட்டத்தில் சுமார் 2500 தீவுகள் இருக்கின்றன அசாமில். இந்த இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டுமானால் நெரிசலான படகு சவாரி செய்துதான் போக வேண்டும். நிரந்தரமற்ற இந்த நிலப்பரப்பில் ‘வீடுகள்’ தற்காலிகக் கொட்டகைகளே. பட்டா, சிட்டா என்பதற்கெல்லாம் அவ்வளவாக அர்த்தமே இல்லை. பள்ளிக்கூடங்கள் இல்லை. மருத்துவமனைகளும் இல்லை.

சென்ற மாதம் இந்தப் பகுதிகளுக்கு நான் சென்றிருந்தேன். பிரம்மபுத்திராவின் நீரலைகளைப் போலவே வறுமையும் இங்கே விளையாடிக்கொண்டிருக்கிறது. நவீனத்துவத்தின் ஒரே அடையாளமாக இருப்பது அந்த ஊர் மக்களின் ‘இருப்பிடச் சான்றிதழ்களைப்’ பாதுகாப்பாக வைத்திருக்கப் பயன்படும் நெகிழிப் பைகளே. காலத்தின் ஓட்டத்தாலும் பருவநிலையின் பிரதாபத்தாலும் ஓரங்கள் சிதிலமடைந்தும் எழுத்துக்கள் அழியத் தொடங்கியும் இருக்கும் அந்தச் சான்றிதழ்கள்தான் இவர்களையும் இவர்களது பிள்ளைகளையும் தடுப்பு முகாம்களுக்குச் செல்வதிலிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையால் அவற்றை உயிராய்ப் பாதுகாத்து வருகிறார்கள். இப்படிப் பல்லாயிரக்கணக்கான மக்களை ராணுவத்தைக் கொண்டு பயமுறுத்தாமல், சான்றிதழ் கேட்டே பயமுறுத்துகிறது அரசு. அதிலும் இந்த அப்பாவி மக்களிடம் “legacy document,” “link paper,” “certified copy,” “re-verification,” “reference case,” “D-voter,” “declared foreigner,” “voter list,” “refugee certificate” என்று ஆங்கிலத்திலேயே கேட்டுக் கேட்டு இப்போது இந்தச் சொற்கள் எல்லாம் இவர்கள் தாய்மொழிச் சொற்களாகவே மாறிவிட்டன. இதில் சோகம் நிறைந்த சொல் “genuine citizen” என்பதே.

ஒவ்வொரு கிராமத்திலும், மக்கள் எவ்வாறு தங்களுக்குத் திடீரென்று ஓர் இரவில் ‘நாளை காலையிலேயே 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என்ற ஆணை அனுப்பப்பட்டது என்று விவரித்தார்கள். பயந்து போன அவர்கள், அவசர அவசரமாக, தங்களிடம் இருக்கும் எல்லாச் சான்றிதழ்களையும் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, இரவோடு இரவாகச் சிறு படகுகளில் புறப்பட்டுக் காட்டாற்றைக் கடந்து,  பேராசை மிக்க வாகன உரிமையாளர்களுக்குப் பணம் கொடுத்து, அபாயகரமான பயணத்தை மேற்கொண்டனர். இப்படி போனவர்களில் ஒரு குடும்பத்தினர் பயணம் செய்த வாகனம் சாலைப்பணி வாகனம் ஒன்றுடன் மோதியதில் அவர்கள் உடலெங்கும் தார் கொட்டிய அவலம் நிகழ்ந்தது. அவர்களை நான் மருத்துவமனையில் சந்தித்தேன். சட்டவிரோத குடியேறிகள் என்கிற கருப்புச்சாயம் அவர்கள் மீதிருந்து எப்போது அகலுமோ?

இத்தனை இடர்பாடுகளிலும், இந்த NRC புதுப்பித்தலை அசாமில் பலரும் வரவேற்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உண்டு: அசாம் தேசியவாதிகளைப் பொறுத்தவரையில், இந்துக்களோ இசுலாமியர்களோ, அசாமில் குடிபுகுந்த வங்காளிகள் அனைவரும் வெளியேறினால் சரி. பூர்வகுடிகளுக்கோ, இத்தனை காலமாகத் தங்களுக்கு நடந்த இனத்துரோகத்துக்கும் வரலாற்றுப் பிழைகளால் தாங்கள் அடைந்துவந்த துயரங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும். அசாமில் தற்போது வசிக்கும் வங்காளிகளுக்கோ, அவர்கள் இந்துவோ இசுலாமியரோ, NRC-இல் தங்கள் பெயரும் இருக்க வேண்டும். தாங்களும் சட்டபூர்வமான குடிமக்களே என்று நிரூபிக்க இதுவே ஒரு நல்ல வாய்ப்பு. இந்து தேசியவாதிகளுக்கோ, லட்சக்கணக்கான இசுலாமியர்களின் பெயர்கள் இந்தப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவேட்டை வரவேற்கத் தனித்தனி காரணங்கள் உள்ளன. கணக்கை முடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

ஒருவாறாக இறுதி பட்டியலும் ஆகஸ்ட் 31, 2019 அன்று வெளியானது. 19 லட்சம் மக்களின் பெயர்கள் அதில் இல்லை. இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும். இந்தப் பெண்கள் மிகச்சிறு வயதில் திருமணம் செய்தவர்கள். தங்களது இன வழக்கப்படி, திருமணத்துக்குப் பிறகு பெயர் மாற்றம் செய்தவர்கள். ஆனால் இதற்கான “link documents” இவர்களிடம் இல்லை. எழுத்தறிவில்லாத பலரும் தங்களது பெயர்களில் இருந்த எழுத்துப்பிழைகளால்  பெயர் நீக்கப்பட்டவர்கள். எடுத்துக்காட்டாக, H-a-s-a-n என்பது H-a-s-s-a-n என்றோ Joynul என்ற பெயர் Zainul என்றோ இருந்துவிட்டால் அவ்வளவுதான். கதை முடிந்தது. இன்னொரு அவலம், சான்றிதழ்கள் எல்லாமே தந்தைவழி வந்ததாக இருக்க வேண்டும். தாயின் சான்றிதழ்கள் செல்லாது. கணவரை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், நிலம் இல்லாதவர்கள் எல்லோரும் வெளியே. இத்தகைய பெண்களுக்கும் ஏழைகளுக்கும் எதிரான ஓரவஞ்சனைதான் NRC-யின் கொடுமைகளிலேயே மிகப்பெரிய கொடுமை. ஏழைகளில் பெரும்பாலானோர் இசுலாமியர், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பெயர் விடுபட்ட 19 லட்சம் பேரும் நீதி பெறும் பொருட்டு, ‘வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் (Foreigners Tribunal) அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் நியமிக்கப்படுபவர்கள் கையில்தான் இந்த 19 லட்சம் மக்களின் வாழ்வும் சாவும் இருக்கிறது. இதில் வழக்கு நடத்த வேண்டுமெனில், இம்மக்கள் தாமே செலவு செய்து வழக்கறிஞரைக் கொண்டு வாதாட வேண்டும். இருக்க வக்கற்றவர்கள்  வக்கீல் செலவுக்கு எங்கே போவார்கள்? பலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

கோடிக்கணக்கில் செலவிட்டுத் திரட்டிய இந்தப் பட்டியல் வெளியாகியும் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதற்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் உள்ளது. வங்காளிகளின் அதிருப்திக்குக் காரணம் இந்திய அரசியல் சட்டப்படி சகல உரிமை பெற்றவர்களாகத் தாங்கள் இருந்தும் இந்தப் பதிவேட்டில் தங்களது பெயர்கள் இல்லாமல் போனதுதான்; அசாமிய தேசியவாதிகளுக்கோ இன்னும் பல சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் இந்தப் பதிவேட்டில் நீடிக்கிறதே என்ற கவலை; இந்து தேசியவாதிகளுக்கோ வேறு கவலை – இந்த 19 லட்சம் பேரில் பாதிக்கும் மேலானவர்கள் இசுலாமியர்கள் அல்ல.

நீதிபதி கோகோய், NRC-இன் ஒருங்கிணைப்பாளர் ஒரு வாரத்துக்குள் அசாமை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். காரணம் எதுவும் குறிப்பிடவில்லை.

இப்போது புதிய NRC வேண்டும் என்ற கோரிக்கை துவங்கியுள்ளது.

இந்த மடத்தனத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? இதற்கான விடையைக் கவிதையில் தேடுகிறது ‘மியா’ கவிஞர்களின் குழுமம். மியா என்பது பல வட்டார மொழிகளின் தொகுப்பு மொழி. அம்மொழியில்  ‘தாய்’ என்கிற தலைப்பில் ரெஹ்னா சுல்தானா என்கிற கவிஞரின் வரிகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

தாயே, சலித்துப் போய்விட்டது

என்னை உனக்குத்

திரும்பத் திரும்ப அறிமுகம் செய்து கொள்வதில்

Ma, ami tumar kachchey aamar porisoi diti diti biakul oya dzai
Mother, I’m so tired, tired of introducing myself to you

காவல்துறையிடம் இதுபற்றி பல புகார்கள் சென்றன, அசாமிய சமூகத்தை இந்தக் கவிஞர்கள் அவமதிக்கிறார்கள் என்று. ரெஹ்னா சுல்தானா தலைமறைவாகி விட்டார்.

முகிலினி


வரலாற்று நிகழ்வுகளை எல்லா தரப்பின் நியாயங்களையும் அறிந்து, நிகழ்வுகளின் களம், காலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘செத்துப் போனவர்களின் ஜாதகமாக’ இல்லாமல் உயிர்ப்புடன் அவற்றைப் படிப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். புனைவு கதை எழுதுவதும் அதே அளவு கடினமானதே. கதைக் களத்தில் ஃபிலிம் காட்டிவிட்டு கதையிலோ கதைமாந்தரின் வடிவமைப்பிலோ கோட்டை விட்டுவிடக் கூடாது. அப்படியானால் வரலாற்றுப் புனைவுக் கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

அப்படிப்பட்ட வித்தையை ‘முகிலினி’ என்கிற தனது வரலாற்றுப் புதினத்தில் சிறப்பாகச் செய்து காட்டியிருக்கிறார் திரு. இரா. முருகவேள் அவர்கள். சுமார் அறுபது ஆண்டு கால வரலாற்றை, கனவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், உரிமை மீறல்கள், உரிமை மீட்புப் போராட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை வாழ்வாதாரத்துக்குமான மோதல்கள், வணிகப் பேராசைகள், சாதி வேற்றுமைகள், மாற்றங்கள், மாற்றங்களுக்கான தேவைகள், வெற்றிகள், தோல்விகள் என பல பரிமாணங்களையும் சுவாரசியம் குறையாமல் சொல்ல அவர் எவ்வளவு கள ஆய்வும் கடும் உழைப்பும் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.

சவுத் இந்தியா விஸ்கோஸ் கம்பெனியின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப் பட்டது எனினும், இரண்டாம் உலகப் போர், இந்திய சுதந்திரம், பவானிசாகர் அணை கட்டப்பட்ட வரலாறு, புரூக்பாண்ட் கம்பெனி இருந்த இடம் புரூக்ஃபீல்டு பிளாசாவாக மாறியுள்ளது வரையிலான கோவையின் வளர்ச்சி என்று பல தளங்களில் நம்மைப் பயணிக்க வைக்கிறார்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் மில்கள் இங்கிருக்க, பருத்தி எல்லாம் அங்கிருக்க, இரு நாடுகளும் ஒரே நாளில் பெரும் பொருளாதார தேக்கம் அடைந்து விட்ட பின்னணியில், பருத்தி இல்லாமலே செயற்கை இழையில் இருந்து ரேயான் (ray – சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம் உடைய; on – cotton போலவே ஆடைகளாக மாற்றக் கூடியது) ஆடைகளைத் தயாரிக்கும் திட்டத்தை கோவையைச் சேர்ந்த கஸ்தூரிசாமி நாயுடு செயல் படுத்துகிறார். பவானி சாகர் அணையே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பட்ட நிலையில் 3 கோடி ரூபாய் செலவில் விஸ்கோஸ் ஆலை கட்டப் பட்டது என்றால் அதன் அளவையும் பிரம்மாண்டத்தையும் நாம் உணரலாம்.

இத்தாலியில் இருந்து மரக்கூழால் செய்யப்பட்ட அட்டைகளை வாங்கி, காஸ்டிக் சோடாவில், கார்பன் டை சல்பைடு, கந்தக அமிலம் போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி விஸ்கோஸ் என்ற கூழாக மாற்றி அதிலிருந்து ரேயான் இழை தயாரிப்பதே திட்டம். பெரும்பாலான மக்கள் ஒரு படி அரிசி வாங்கவும் கதியற்றவர்களாய் இருந்த அன்றைய சூழலில் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் தலையாய தேவைகளாக இருந்தன. எனவே, சுற்றுச்சூழல் பற்றி எல்லாம் அன்றைக்கு அறிவோ அக்கறையோ பெரிதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆற்றிலிருந்து எளிதில் நீரை எடுக்கவும், ஆலையின் கழிவு நீரை ஆற்றில் விடவும் ஏற்ற வகையில் பவானி ஆற்றுக்கு அருகே சிறுமுகையில் விஸ்கோஸ் ஆலை அமைக்கப் பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். அதுவும் நல்ல சம்பளத்தில். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த பொது, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் அரசு கருவூலம் காலியாகி விட்டிருந்தது. இறக்குமதிகளைக் குறைக்கும் பொருட்டு விஸ்கோஸ் ஆலை நிர்வாகத்தை இந்தியாவிலேயே தனக்கான மூலப் பொருட்களைத் தயாரித்துக் கொள்ள அனுமதி அளித்தது மத்திய அரசு. இதற்காக நீலகிரியில் 40,000 ஏக்கர் யூகலிப்டஸ் மரக்காடுகளில் இருந்து மரங்கள் அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டன. 200 சதவீதம் லாபம் ஈட்டியது விஸ்கோஸ் கம்பெனி. இதற்கிடையில், கம்பெனி பங்குகள் கைமாறி, நிர்வாகம் வடநாட்டவர்கள் வசம் செல்கிறது. உற்பத்தியை அசுர வேகத்தில் அதிகரிக்க ஆற்றையே நாசம் செய்து விடுகிறார்கள்.

சுற்றுச் சூழலுக்காக மக்கள் போராடுகின்றனர். பவானி ஆறு மீட்கப் பட்டதா? அதற்கான போராட்டங்கள் எப்படி இருந்தன? அவற்றின் தாக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் அதே நேரத்தில் இன்று காணாமல் போய் விட்ட நொய்யல் ஆற்றின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பவானி என்பது வடமொழி பெயர். முகில்களிலிருந்து பாய்ந்தோடி வருபவள் இவள். முகில்களைப் போன்றவள். இவள் முகிலினி என்று ராஜுவின் வாயிலாகப் பெயர் சூட்டுகிறார் முருகவேள். தனது கதைமாந்தரை அவர்களின் சிறு/இளம் வயது காலத்தில் அவன்/அவள் என்று குறிப்பிட்டுவிட்டு, அவர்கள் முதுமை அடைந்ததும் அவர் என்று குறிப்பிடும் உத்தி நன்றாக உள்ளது.

தி.மு.க.வின் வளர்ச்சியும், கம்யூனிசத்தின் தொய்வும் அலசப் பட்டுள்ளன. “நம்மாளு ஒண்ணு லண்டனுக்கு போய் உலகத்துல இருக்கற எல்லாத்தையும் படிச்சவனா இருக்கான். இல்லாட்டி எழுதப்படிக்கவே தெரியாத தற்குறியா இருக்கான். ரெண்டுக்கும் நடுவுல இருக்கற பள்ளிகூடம், காலேஜ் பசங்க எல்லாத்தையும் அண்ணாத்தொர ஆளுங்க வளச்சுட்டாங்க” என்ற உரையாடலின் மூலம் இதற்கான காரணத்தை விளங்க வைக்கிறார் ஆசிரியர். அதே போல காந்தியவாதிகள் காங்கிரஸ் காட்சியைக் கோட்டை விட்டதையும் குறிப்பிடுகிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டமும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளன.

சாதிய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள், நீதிமன்ற வழக்குகளில் சட்ட நடைமுறைகள், வாதாடும் நுணுக்கங்கள், சூழல் அறிவியல் தகவல்கள், வனத்துறை vs. பழங்குடியினர் உறவுகள், முதலாளித்துவ கொள்கைகளை, தொழிலாளர் சங்க செயல்பாடுகள், இன்றும் தொடரும் நவீன கொத்தடிமைத்தனம் என்று பல துறைகளைப் பற்றிய செய்திகளை முகிலினி மூலமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

எளிய எழுத்து நடை படிக்கும் சுமையை வெகுவாகக் குறைத்து விடுகிறது (அதுவும் ஆமை வேகத்தில் படிக்கும் எனக்கே). எடுத்துக் காட்டாக, விஸ்கோஸ் ஆலை பயன்படுத்திய வேதியியல் முறைகளையும் பொருட்களையும் விவரிக்கும் போது அலெக்சாண்டர் டூமாஸ் கதைகளில் வருவது போல் எல்லா வேதிமப் பொருட்களின் தன்மைகள், பயன்படுத்தப் பட்ட அளவுகள் என்று எல்லாவற்றையும் சொல்லாமல் கதைக்குத் தேவையானவற்றை மட்டும் விவரிக்கிறார். சட்டத் துறை, இயற்கை வேளாண்மை பற்றிய காட்சிகளிலும் அவ்வாறே எல்லோருக்கும் புரியும் படியாக எழுதியிருக்கிறார்.

நம்மாழ்வார் மற்றும் ஜக்கி வாசுதேவ் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார் (‘அசாதாரணமான ஞானக்கிறுக்கு ஒளிவீசும்’ கண்கள் கொண்ட இரண்டாமவர் ஆஸ்மான் சுவாமிகள் என்ற கதாபாத்திரத்தில் கலாய்க்கப் படுவது ரசிக்க வைக்கிறது).

சமூக நீதி, சூழல் பாதுகாப்பு போன்றவற்றை பிரச்சார மொழியில் சொல்லாமல் திருநாவுக்கரசு – கௌதம் இடையயேயான ‘உரையாடல் மற்றும் stuff’ கொண்டு சொன்னது அருமை.

இவ்வளவு பெரிய இந்தியாவில் மாடி வீட்டுத் தோட்டம் போட்டு காய்கறி உற்பத்தி செய்ய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி நியாயமானதாகவே தோன்றுகிறது.

நீலகிரியில் பிறந்து வளர்ந்து, கோவையில் படித்து நான் சுற்றித் திரிந்த காடுகளையும் சாலைகளையும் மையமாகக் கொண்டதாலோ என்னவோ என்னால் எளிதில் இந்த நாவலுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இல்லை என்றாலும், அறிவியல்/மொழி/வரலாறு/சட்டம் என்று நீங்கள் என்ன படித்திருந்தாலும், சூழலியல், மொழியியல், வரலாறு, சமூக நீதி, இயற்கை வேளாண்மை என்று எதில் ஆர்வம் இருந்தாலும், உங்களுக்கும் இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: இந்த நூல் kindle வடிவிலும் கிடைக்கிறது.

ஆயிரத்தில் மூவர்


கல்லணையைக் கரிகால சோழன் கட்டினார் என்கிறோம். அசோகர் மரம் நட்டார் என்கிறோம். இதை ஷாஜகான் கட்டினார் என்கிறோம். அதைக் காமராஜர் கட்டினார் என்கிறோம். ’இதெல்லாம் வெள்ளைக்காரன் போட்ட ரோடு’ என்கிறோம். கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வரலாறு எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அதற்குத் தகுந்தாற்போல் மாறும். காரணம் அடிக்கல் நாட்டியவர் கலைஞர், திறந்து வைத்தவர் ஜெயலலிதா. இப்படியாக, வரலாற்று நிகழ்வுகள், சாதனைகள், கட்டுமானங்கள் என்று எல்லாவற்றுக்கும் அடையாள மனிதர்களை நாமாகவே நியமிக்கிறோம். சில வேளைகளில் அவர்களாகவே அந்த உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் தலைமையில் தான் இந்தச் சாதனைகள் நிறைவேறின என்ற போதிலும், இதில் அடிப்படை கட்டுமான வேலைகளைச் செய்த பல்லாயிரக் கணக்கான சக மனிதர்களையும் (அடிமைகளையும்) அவர்களது உழைப்பையும் அதே அளவிற்கு யாரும் பெரிதாய் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்லும் மண்ணும் சுமந்தவர்கள், காடுகளில் பாடுபட்டவர்கள், சொற்ப கூலிக்கு உயிரைப் பணயம் வைத்து உழைத்தவர்கள் எல்லாம் மறக்கப்படுவர். நமக்குத் தேவை சில பெயர்கள், சில முகங்கள். அவ்வளவே.

நோபல் பரிசும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த வருடம் இயற்பியலுக்கான நோபல் பரிசு இரண்டு வகையில் சர்ச்சைக்குரியது.

Ligo_wave_detected

நோபல் பரிசு வென்ற கண்டுபிடிப்பு. 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கருந்துளைகளின் பெருவெடிப்பில் உருவாகிய ஈர்ப்பு அலைகள் 2015-இல் பூமியில் உணரப்பட்டன.

1. ஈர்ப்பு அலைகள் இருக்கின்றன என்று ஆய்வுச் சான்றுகளின் மூலம் 2015-ஆம் ஆண்டில்நி நிரூபித்ததற்கு, சென்ற ஆண்டில் (2016) விருது கொடுத்திருக்க வேண்டும் (இதைப் பற்றி விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்). ஒரு ஆண்டு தாமதம். சகித்துக் கொள்ளலாம்.

2. இந்த ஆய்வில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 ஆய்வாளர்கள் பங்கேற்றனர் (39 பேர் இந்தியர்களாம்). ஆனால் விருது வாங்குவதோ மூன்றே மூன்று பேர். அதாவது 0.3% பேர் மட்டுமே. என்ன காரணம்? நோபல் தேர்வுக்குழுவின் விதிமுறை அப்படி. அதிகபட்சம் மூன்று பேருக்குத் தான் ஒரு விருது வழங்கப்பட வேண்டும்.

ஆயிரம் பேரில் மூவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது? இவர்கள் இல்லையென்றால் இந்த ஆய்வு நடந்திருக்கவே வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு மூன்று முக்கியமானவர்களைக் கண்டறிய வேண்டும். இந்த ஆய்வுப் பணிகளை மூன்றாகப் பிரித்தோமேயானால்,

1. ஈர்ப்பு அலைகளை உணரும் கருவிகளை வடிவமைப்பது (design/conception),

2. ஈர்ப்பு அலைகளின் தன்மைகளைப் பற்றிய புரிதலை விரிவாக்குவது (understanding), மற்றும்

3. இந்த அலைகளை நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டு ‘காண்பது’ (implementation /demonstration)

என்று வகைப்படுத்தலாம்.

இந்த மூன்று விசயங்களில் முதன்மையானவர்கள் முறையே ரெய்னர் வெய்ஸ், பேரி பரிஷ், மற்றும் கிப் தோர்ன் ஆகிய மூவர்.

Nobel-barish-thorne-weiss

ஆயிரத்தில் மூவர்

அதாவது இவர்கள் மட்டுமே 9 மில்லியன் க்ரோனர்களைப் (ஸ்வீடன் நாட்டின் நாணயம், இந்திய மதிப்பில் சுமார் 7.2 கோடி ரூபாய்) பங்கிட்டுக் கொள்வார்கள்.

Rais_IFO

ரெய்னர் வெய்ஸ் முதலில் வடிவமைத்த ‘ஆண்டெனா’வின் வரைபடம்.

தற்காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் முன்பு போல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்க் பெனிசிலினைக் கண்டுபிடித்ததைப் போலவோ, பெக்யூரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தது போலவோ தனி நபர் எதையும் கண்டுபிடிக்கும் அல்லது சாதிக்கும் நிலை இன்று இல்லை. அறிவியல் ஆய்வுகள் பல ஆய்வகங்களின் கூட்டு முயற்சியாக மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் சார்ந்தே ஒவ்வொரு ஆய்வினையும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு வகையில் இதுவும் நன்மைக்கே. தன் ஆய்வு ரகசியங்களை யாரும் எளிதில் மறைக்க முடியாது. பிற ஆராய்ச்சியாளர்கள் இதனைத் தாங்களும் முயற்சித்துப் பார்த்து, அல்லது திறனாய்ந்து, உறுதி செய்த பின்பே ஒட்டுமொத்த அறிவியல் உலகம் அதை வெற்றியாக ஏற்றுக் கொள்ளும். வருங்கால விஞ்ஞானமோ செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரப் பயிற்றுவிப்பு (Artificial Intelligence and Machine learning) ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்து இருக்கும்.

இதை எல்லாம் நோபல் தேர்வுக் குழு அறியாமல் இல்லை. அவர்களின் விதிமுறை அப்படி. மூன்று பேருக்கு மட்டும் விருது வழங்கி அவர்கள் நோபல் விருது மரபைக் காத்திருக்கலாம். ஆனால் வருங்காலத்திலாவது சாதனைக்குக் காரணமான அனைவரையும் அங்கீகரிக்க வேண்டும். ஏன், ஒருசில கணிப்பொறிகளுக்குக் கூட விருது வழங்க வேண்டி வரலாம்.

படங்கள்:

https://www.ligo.caltech.edu/mit/news/ligo20171003

https://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2017/press.html

தமிழகம் – வரலாற்று வளையங்கள்


தொல்லியல் ஆய்வுகளில் மரங்களின் வயதை அவற்றின் வளையங்களைக் கொண்டு கணக்கிடுகின்றனர் (dendrochronology). அதுபோல், தமிழகம் என்ற ஒரு பழம்பெரும் மரத்தின் வரலாற்றை அது கடந்து வந்த நிகழ்வுகளை வளையங்களாக உருவகப்படுத்தினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை இது. இவ்வாறு செய்ததில் நமக்குக் கிடைப்பது காலங்கள் பல கடந்தும் தனிச்சிறப்பான ஒரு சமூகம் சந்தித்த நிகழ்வுகளின் ஒரு எளிய தொகுப்பு. தமிழக வரலாற்றை முழுவதும் எழுதப் பல்லாயிரம் பக்கங்கள் தேவை. ஒரு சிறிய படத்தை வைத்துக் கொண்டு இதுதான் தமிழக வரலாறு என்று சொல்லிவிட முடியாது. ஒரு பானை சோற்றில் இது சின்னஞ்சிறு  பருக்கை மட்டுமே. 

tamil_tree

தமிழ் மரம்

இனி படத்தில் குறிக்கப்பட்டுள்ள காலங்களைப் பற்றி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு                                                                                         முன்தோன்றி மூத்தகுடி  

என்பது புறப்பொருள் வெண்பாமாலை. இதை அப்படியே அர்த்தம் கொள்ளாமல் தமிழின் தொன்மையயக் குறிக்க அக்கவிஞன் எத்தகைய உவமையைக் கையாண்டிருக்கிறான் என்று வியத்தல் நலம். வேறு எவனும் தன் மொழியைப் பற்றி இவ்வளவு பெருமையுடனும் கவி நயத்துடனும் உறுதியுடனும் சொல்ல முடியாது. இன்றைக்கும் பல மொழிகளுக்கு இலக்கணம் இல்லை. பல மொழிகளில் நூல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூல் தொகுக்கப்பட்டது என்றால், அதுவும் முழுக்க முழுக்க செய்யுள் நடையில் வகுக்கப் பட்டது என்றால், நமது மொழி வளத்தை என்னவென்று சொல்வது! இந்த நூலிலேயே தமிழ் அன்றைய காலகட்டத்தில் வடக்கே வேங்கட மலை முதல் தெற்கே குமரிமுனை வரை பேசப்பட்டது என்று தமிழக எல்லையை வரையறுத்து

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகம்

என்று வரையறுத்துப் பாடியுள்ளனர். 

சங்க காலம் – மூவேந்தர் ஆட்சி (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரை)

வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு சேரர்களும், பூம்புகாரில் இருந்து சோழர்களும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்களும் இவர்கள் தவிர சில குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆண்டதாகச் சான்றுகள் உள்ளன. வட நாட்டில் கோலோச்சிய மௌரியர்கள் போன்ற பேரரசர்களால் கூட தமிழகத்தில் காலூன்ற முடியாததே இவர்களின் போர்த்திறனுக்கும் ஆட்சி நிர்வாகத்திற்கும் சான்று. இவர்கள் ‘தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்புகளைக் கொண்டு புலவர்களை ஊக்குவித்தும் தமிழ் ஆய்வுகளை ஆதரித்தும் தமிழ் வளர்த்ததாக ‘இரையனார் களவியல் உரை’ மற்றும் பிற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இக்காலம் ‘சங்க காலம்’ என்றே வழங்கப்படுகிறது.

களப்பிரர் வருகை – இருண்ட காலம் (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை)

இவர்களைப் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. ஆனால், மூவேந்தர்களையும் முறியடித்து இவர்கள் சுமார் ஐந்து நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். தகவல்கள் இல்லாததாலோ என்னவோ இவர்களின் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. ஆயினும் இந்த இருண்ட காலத்தையும் தமிழும் தமிழகமும் தாக்குப்பிடித்து வந்தமைக்குச் சான்று இக்காலகட்டத்தில் உருவான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.

பல்லவர் ஆட்சி: இதே காலகட்டத்தில், குறிப்பாக கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். சோழர்களைத் தோற்கடித்து, காஞ்சியைத் தலை நகராய்க் கொண்டு இலங்கை வரை ஆதிக்கம் செலுத்தினர். மாமல்லபுரம் உள்ளிட்ட சிற்பக்கலைச் செல்வங்களும், எண்ணற்ற கற்கோயில்களும் இவர்களின் கட்டடக் கலை ஆர்வத்துக்கும் திறமைக்கும் சான்றுகள்.  கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு’ போன்ற புதினங்களில் பல்லவர்களின் இந்த கலை ஆர்வம் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன.

சோழர்கள் ஆட்சி – தமிழகத்தின் பொற்காலம் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை)

ஆதித்த சோழனால் பல்லவ சாம்ராஜ்யம் வீழ்ந்த்து, சோழப் பேரரசு மலர்ந்தது. இராசராச சோழன் பல மன்னர்களையும் வென்று விரிவாக்கிய சோழப் பேரரசை அவன் மகன் இராசேந்திர சோழன் தன் கடற்படை கொண்டு இன்னும் விரிவாக்கி, தென்கிழக்கு ஆசியா வரை புலிக்கொடி நாட்டினான். வட நாட்டில் தான் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் வண்ணம் கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலை நகரை உருவாக்கினான்.

rajendra_map_new-svg

இராசேந்திர சோழனின் ஆட்சியில் சோழ நாட்டு எல்லைகளும் அவர்களது ஆதிக்கம் இருந்த பகுதிகளும் © Wikipedia 

Full view of the temple, as of Periya Koil

கங்கை கொண்ட சோழபுரம்     ©யாத்ரீகன்

அன்றைய சோழ நாடானது நெல் விளைச்சல் மிகுதியால் ‘சோழ நாடு சோறுடைத்து’ என்று  பெயர் பெற்றது. இன்றைய நிலையில் காவிரி காய்ந்து, கெயில் குழாய் பாய்ந்து, பண மதிப்பு தேய்ந்ததால் ‘சோழ நாடு சோர்வுடைத்து’ என்று தான் சொல்ல வேண்டும்.

நாயக்கர்கள் ஆட்சி (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை)

இசுலாமிய அரசர்களின் படையெடுப்பால் சோழர்கள் மற்றும் பாண்டியர் ஆட்சி முடிவுக்கு வரவே, பின்னர் இதனை முறியடிக்க விசய நகரப் பேரரசு உதித்தது. தமிழகப் பகுதிகள் நாயக்கர்களால் நிர்வகிக்கப் பட்டது. பின்னர் சுல்தான்கள் விசய நகரைத் தோற்கடித்த போதிலும் நாயக்கர்களே ஆட்சிப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொண்டனர். மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்கள் தங்களது நிர்வாகத்தாலும் கோயில் பணிகளாலும் புகழ் பெற்றனர்.

வெள்ளையர் வருகை மற்றும் ஆட்சி ( 17-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை)

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் கிழக்கிந்திய கம்பெனி அன்றைய சென்னையில் உதயமான போது ஏற்பட்டது. ஆனால் அது அப்போதே உணரப்படவில்லை. விளைவுகள் பற்றி இங்கே நிறைய சொல்ல வேண்டியதுமில்லை. பல்வேறு குறு நில மன்னரிகளிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி ஆங்கிலேயர்கள் தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டார்கள்.

பாரதி எழுத்தும் பாட்டும்

தேச பக்தி, பெண் விடுதலை, மொழிப் பற்று, சாதி மறுப்பு என்று ஒரு எழுத்தாளராக, கவிஞராக,  சமூக சீர்திருத்தவாதியாக, பத்திரிகை ஆசிரியராக, விடுதலை வீரராக, பல பரிமாணங்களில் தன் படைப்புக்களால் பல்லாயிரம் தமிழ் மக்களை எழுச்சியுறச் செய்தவர் பாரதியார். காற்று புகா வீட்டினுள் அமர்ந்த படியே ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா’ என்று வியக்கும் போதிலும், விடுதலைக்குப் பல ஆண்டுகள் முன்னரே ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்று தீர்க்க தரிசனம் கண்ட போதிலும் ஈடு இணையற்ற கவிஞராய் பாரதியார் தமிழுலகில் தனியொரு இடம் பிடிக்கிறார்.

இந்திய விடுதலையும் எல்லை வரையறையும் 

1947-இல் உண்மையிலேயே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட, பள்ளுப் பாடுவதற்கெல்லாம் நேரமில்லை. எல்லைகளைப் பிரிப்பதில் பல குழுக்கள் முனைந்தன.

440px-british_indian_empire_1909_imperial_gazetteer_of_india

இந்திய விடுதலையின் போது இருந்த மாகாணங்கள் ©Wikipedia

தமிழகத்தைப் பொறுத்த வரை ‘மதராஸ் மாகாணம்’ என்று இன்றைய தமிழகம், கேரளம், கர்னாடகம் மற்றும் ஆந்திரம் ஆகியவற்றின் பெரும்பகுதிகள் சேர்ந்து இருந்தது.

பின்னர் மொழி வாரியாக மாநில எல்லைகள் பிரிக்கப் பட்ட போது சுருங்கிய இந்த மாகாணம், அண்ணா முதல்வர் ஆன போது ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் பெற்றது. எல்லைகளை நிர்ணயிக்கும் போது பல்வேறு போராட்டங்கள், அரசியல் பேரங்கள், தியாகங்கள் எல்லாம் தேவைப்பட்டது.

பெரியாரின் பேரியக்கம்

என்னதான் விடுதலை பெற்றாலும் சாதிக் கொடுமை, மத பேதங்கள், பெண்ணடிமைத்தனம்தங்கள், மது என்று பல சமூக வியாதிகள் நீடிக்கவே, இனி நமக்கு சமூக மாற்றம் தான் தலையாய தேவை என்று உணரச் செய்தார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கிய இந்த திராவிட இயக்கம் இன்றைய தி.மு.க மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகளின் பிறப்பிடம். ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு பெரியாரின் கொள்கைகளைக் கடைபிடிக்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. 

இந்தி எதிர்ப்பு போராட்டம்

தேச ஒற்றுமை என்ற பெயரில் பிற மொழி பேசுபவர்களின் அடையாளங்களை அழித்து அனைவரும் ஒரே மொழி பேசி ஒரே பண்பாட்டைக் கடைபிடிக்கச் செய்ய இப்போதைய மத்திய அரசு செய்வதையே அப்போதும் செய்தார்கள். அதன் முதல் கட்டமாக இந்தியாவின் ஒட்டுமொத்த அலுவல் மொழியாக இந்தியைத் திணித்தார்கள். இதை எதிர்த்துத் தமிழர்கள் தந்தை பெரியார் தலைமையில் அறப்போராட்டம் நடத்தினார்கள்.

hindi1

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ©நக்கீரன்

நடராசன், தாளமுத்து ஆகியோர் காவல் துறையின் அடக்குமுறையில் உயிரிழந்தார்கள். இவர்களாது இறப்பு போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியது. மாபெரும் மாணவர் போராட்டமாய் இது மாறியது. அப்போதும் மாணவர்கள் மத்தியில் (காங்கிரஸ்) கட்சிக்காரர்கள் கெட்ட வார்த்தைகள் பேசிக் குழப்பத்தை ஏற்படுத்த, போராட்டத்தில் வன்முறை புகுத்தப் பட்டது. போராட்டத்தின் விளைவாக இன்னமும் காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியைப் படிக்க முடியவில்லை. பாரதிய ஜனதாவின் நிலையை இப்போது சொல்லவும் வேண்டுமா?

ஜல்லிக்கட்டு போராட்டம்

மூன்று ஆண்டுகளாய் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சல்லிக்கட்டு நடத்த தடை நீடித்திருந்த நிலையில், மத்திய அரசும் மாநில அரசும் மெத்தனமாய் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றமும் விசாரணை முடிந்தும் கூட இப்போது என்ன அவசரம், மெதுவாக தீர்ப்பு எழுதுகிறோம் என்று இழுத்தடிக்க, சிறிய அளவில் துவங்கிய போராட்டம் ஒரு மாபெரும் அறப்போராட்டமாய் உருவெடுத்தது. இந்த முறை எந்த அரசியல் கட்சிக்கும் இதில் இடமில்லை. மாணவர்களும் இளைஞர்களும் தன்னிச்சையாய் சமூக வலைதளங்களிம் மூலம் ஒருங்கிணைந்து இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் அமைதியாகவும் ஆக்கபூர்வமாகவும் போராடினர். சல்லிக்கட்டு மட்டுமல்ல; காவிரி நீர் மறுப்பு, கெயில் குழாய் திட்டம், மீத்தேன் திட்டம் என்று தமிழக-விரோத திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளால் சேர்த்து வைத்திருந்த கோபங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள் மக்கள் – அமைதி வழியில். இதில் சிறப்பு என்னவென்றால், மாணவர்கள் பொதுமக்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. போக்குவரத்தைச் சீர் செய்தார்கள்; குப்பைகளை அகற்றினார்கள்; தலைவர்கள் இல்லாமலேயே ஒருங்கிணைந்தார்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. எல்லோரையும் சக போராட்டக்காரர்களாகவே பாவித்தார்கள். சுருங்கச் சொன்னால், உண்மையில் தமிழகத்தில் இப்படி ஒன்று நடக்கிறதா என்று பலரையும் தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வைத்தார்கள்.

marina-jallikattu-protest_650x400_41484877888

மெரினா கடற்கரையில் கூடிய போராட்டக்காரர்கள் கைபேசி வெளிச்சத்தில் தங்கள் ஒற்றுமையைக் காட்டுகிறார்கள்    ©NDTV

இவை எல்லாவற்றுக்கும் கொள்ளி வைப்பது போல் போராட்டத்தின் எட்டாம் நாள் காவல்துறையினர் போராட்டத்தை முடிக்க அவகாசம் கொடுக்காமல் தடியடி நடத்தினார்கள். பல வண்டிகளுக்கும் குப்பத்து வீடுகளுக்கும் மீன் சந்தைக்கும் காவலர்களே தீ வைப்பதைக் காண முடிந்தது. ‘சமூக விரோதிகள்’ போராட்டத்தைத் திசை திருப்பியதாக அரசு விளக்கமளித்தது.  இவை யாவும் இரண்டு நாட்களில் வரவிருக்கும் குடியரசு தினத்தில் ‘அமைதியான’ தமிழகத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் செய்தார்களோ என்று தோன்றியது. எப்படியோ, இந்தக் கருப்பு மையை நீக்கி விட்டு மாணவர் போராட்டம் என்ற வெள்ளைக் காகிதத்தைப் பார்த்தால் இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த, வரலாற்றில் இதுவரை இல்லாத அறப் போராட்டம் என்பதை எதிரிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள்.                                                    

நண்பர்கள்


“இதைப் பாரேன், அமெரிக்காவுல ஒரு பூனைய வெச்சு ஒரு குட்டிப் பையன் செய்யற குறும்பை!”

“இந்த மீம்ஸ் செம கலக்கல்டா. சி.எம்-ஐயே சூப்பரா கலாய்ச்சிருக்கானுங்க! கவுண்டமணி டயலாக் எல்லாத்துக்குமே செட் ஆகுது இல்ல?”

“தலைவர் நியூ லுக் பாத்தியா?

“காவிரி பிரச்சனையைத் தீர்க்க இவர் சொல்ற ஐடியா நல்லா இருக்கு பாரு”

“ஜல்லிக்கட்டை நடத்த விடாததுக்குப் பின்னாடி ஒரு எகனாமிக் கான்ஸ்பிரஸி இருக்கு”

“மான்சாண்டோ கம்பெனிக்காரனை இந்தியாவை விட்டு துரத்துனாத் தான் விவசாயம் உருப்படும்”

“என் கஸின் ஒரு ஃபேஷன் ஷோரூம் ஆரம்பிச்சிருக்கா. ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லு”

“ராபின் வில்லியம்ஸ் ஸ்டேண்ட்-அப் காமெடிய அடிச்சுக்கவே முடியாது”

“இந்த ட்யூன் மடோனா ஆல்பம்ல இருந்து அப்படியே சுட்டது. கூகுள்ல தமிழ் காப்பிகேட்னு அடிச்சுப் பாரு.”

“இது பைசைக்கிள் தீவ்ஸ்ங்கற படத்தோட காப்பி”

“நானும் பின்க்கியும் டான்ஸானியா போனப்போ எடுத்த ஃபோட்டோ”

“லூசு, செல்ஃபின்னா மாஸ்டர்பேஷன் பண்றவன் இல்ல, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்காதே”

சிரிக்கவும் சிந்திக்கவும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் வேறங்கும் போக வேண்டியதில்லை. நண்பர்களுடன் பேசினால் போதும். அதிலும் விமல் ஒருவன் போதும். எகனாமிஸ்ட் முதல் இந்த வார ஆனந்த விகடன் வரை எல்லாவற்றையும் படித்து வந்து அலசி எடுப்பான். பாலஸ்தீன பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றும் விவரிப்பான். பால் பாக்கெட் காலி ஆனதும் எங்கே போய் என்ன ஆகிறது என்றும் தெரிவிப்பான். ராஜேஷ் அப்படி இல்லை. இதெல்லாம் மொக்கை என்பான். யூ டியூப் டிரெண்ட் பற்றி அவனிடம் தான் கேட்க வேண்டும். வைரல் விடியோ என்பது வைரஸ் சமாசாரம் இல்லை, அது வேகமாகப் புகழ்பெற்றுக் கொண்டிருக்கும் விடியோ என்று அவன் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். பூக்கள் மற்றும் குழந்தைகளின் ஃபோட்டோக்களைத் தேடிக் கண்டுபிடித்து வருவான் அருள். பெண்களுக்கு, குறிப்பாக மோனிகாவுக்கு அவை ரொம்பப் பிடிக்கும். அருளுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்.

சுமித்ரா இணையத்தில் பல ரெசிபிக்களை அலசி ஆராய்ந்து புதிதாக சமைத்த மெக்சிகன் பர்கர்களின் மேல் இதய வடிவில் தக்காள் சட்னி ஊற்றி, சுற்றிலும் கொத்தமல்லி தழைகளைப் பரப்பி நடுவில் ரெண்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பிட்டு வைத்து ஃபோட்டோ எடுத்துக் காட்டுவாள். பதிலுக்கு நானே யோசித்துத் தயிர்வடைக்கு ஒரு ரெசிபி சொன்னால் “வெரி ஃபன்னி” என்பார்கள் அவளும் அவள் தோழிகளும். மெஷின் லேர்னிங், க்லவுட் கம்ப்யூட்டிங் என்று என் மரமண்டைக்கு எட்டாத எதையெதையோ பற்றி லெக்சர் அடிப்பான் வசந்த். இந்திய ராணுவத்தில் ஆஃபீஸர் வேலை முதல் இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் வேலை வரை எல்லா வேலைவாய்ப்புச் செய்திகளையும் தொகுத்துத் தருவான் முருகன். தமிழன் தான் உலகிலேயே உத்தமன் என்று அதற்கான சான்றுகளைப் புறனானூற்றில் இருந்தும் புத்தகக் குறிப்புகளில் இருந்தும் எடுத்துக் காட்டிப் புளகாங்கிதம் அடைவான் சிவனேசன். தமிழர்கள் மட்டுமே பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களை இட்டுக் கொள்வதில்லை என்று பெருமை பட்டுக் கொள்ளும் அதே வேளை தமிழர்கள் சாதிக்குப் பின்னால் போய்க் கொண்டிருப்பதையும் தம் குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை வைத்துப் பூரிப்படைவதையும் கண்டு மனம் வருந்துவான். இளையராஜாதாசனாகவே வாழ்பவன் மணி.

ஷேக்ஸ்பியர் வரிகளை என் கையெழுத்தில் எழுதிக் காட்டிய போது “சூப்பரா எழுதற” என்ற தோழிகள் கூட, தமிழில் ப்ளாக் எழுதறேன் என்றதும் “இது நீயே எழுதினதா இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக் குடுத்ததா” என்கிற மாதிரி பார்த்தார்கள். பொன்னியின் செல்வன் ஹீரோ அருள்மொழி வர்மனா வந்தியத்தேவனா என்று பட்டி மன்றம் வைத்து, தீர்ப்பை ஒவ்வொரு முறையும் தானே மாற்றி வழங்குவான் ரகு. முடிவில்லாத சிறுகதையை வெர்டிகலாக எழுதி கவிதையாக மாற்றி விடுவாள் அபிராமி. இங்கிலிஷ்காரர்களே மறந்து போன வார்த்தையை எல்லாம் போட்டு அதைப் புகழ்ந்து தள்ளுவார்கள் ரோஷினியும் கார்த்திக்கும். எந்த பியரில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கிறது, ரம்முக்கும் விஸ்கிக்கும் என்ன வித்தியாசம் என்பதை எல்லாம் விச்சுவைத் தான் கேட்க வேண்டும். தியேட்டரில் இருந்து கொண்டே ரிவ்யூ எழுதி அனுப்புவான் ஆல்பர்ட். படமே பார்க்காத ஆனந்த், அந்த ரிவ்யூவை விமர்சித்து சந்தோசப் பட்டுக் கொள்வான். இவர்களும் இன்ன பிற நண்பர்களும் இருபத்தி நாலு மணி நேரமும் ஓடும் எண்டர்டெய்ன்மெண்ட் சேனலாக என்னைப் பரவசப் படுத்துவார்கள். நானும் அவ்வப்போது அவர்களின் ஒரு சேனலாக வலம் வருவேன். ஆனால் என்ன வேலை இருந்தாலும் வருடம் தவறாமல் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவார்கள். நான் நன்றி சொல்லா விட்டாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு முன் நான் இறந்து போனது கூட அவர்ளுக்குத் தெரியாது.

எல்லோரும் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

சாணக்கியர் vs. திருவள்ளுவர் – ஊழலை ஒழிக்க யார் வழி சிறந்தது?


முதலில் ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன். அர்த்தசாஸ்திரம், திருக்குறள் இரண்டையுமே நான் முழுவதுமாகப் படித்ததில்லை. அவ்வளவு ஏன், அர்த்தசாஸ்திரத்தைப் படித்ததே இல்லை. திருக்குறளைப் பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் கொஞ்சமும், சாலமன் பாப்பையா வாயிலாகக் கொஞ்சமும், அரசுப் பேருந்துகளில் கொஞ்சமும் படித்ததோடு சரி. சில மாதங்களுக்கு முன் நான் படித்த “Kautilya versus Thiruvalluvar. Inspiration from Indian Ancient Classics for Ethics in Governance and Management” என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து என் புரிதலையும் சில சொந்த கருத்துக்களையும் இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

என்ன ஒப்பீடு இது – அர்த்தசாஸ்திரமும் திருக்குறளும்? அர்த்தசாஸ்திரம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சித்தாந்தம். திருக்குறள் கி.மு. 31 வாக்கில் (ட்விட்டர் வரும் முன்பே) எழுதப்பட்ட முப்பால் (அறம், பொருள், இன்பம்) விளக்கும் வள்ளுவ ட்வீட்டுகள். அடிப்படையில் இவ்விரண்டு நூல்களுமே சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல கருத்துக்களை முன்வைத்தாலும், அதை அடைவதற்கு முற்றிலும் மாறுபட்ட வழிகளைக் காட்டுகின்றன.

மகப்பேறு முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லாவற்றிலும் ஊழல் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில் காந்த்தியக் கொள்கையே காற்றில் பறந்து விட்டது. இதில் சாணக்கியனாவது வள்ளுவனாவது என்று சொல்லலாம். ஆனால் மற்ற எந்தக் காலத்தையும் விட இப்போது தான் இவர்களைப் படிக்க வேண்டிய தேவை அதிகம். மாட்டுத் தீவனம், நிலக்கரி, பீரங்கி, வானூர்தி, அலைக்கற்றை, சூரிய ஒளித்தகடு என்று அண்டவெளியில் வாய்ப்பு கிடைத்த பொருள்களில் எல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்று அறிகிறோம். இதற்கான அவசியம் என்ன? எதனால் மனிதன் ஊழல் செய்கிறான்? பெரும் பதவியில் இருப்பவர்களின் ஊழல்களைப் பார்த்துக் காரித் துப்புகிறோம். சாமாணியர்கள் நாம் மட்டும் யோக்கியர்களா? வாய்ப்பு கிடைத்தால்? அப்படியானால் ஒழுக்கத்தில் எங்கேயோ ஓட்டை இருக்கிறதாகத் தானே அர்த்தம்?

அர்த்தசாஸ்திரம்

ஷாமா ஷாஸ்திரி என்பவரால் 1908-இல் கண்டுபிடிக்கப்பட்ட அர்த்தசாஸ்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அடங்கிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. சந்திரகுப்த மௌரியரின் பிரதான தத்துவ ஞானியான சாணக்கியர் அரசாங்கத்தின் கடமைகளையும் சமுதாயத்தின் சாதி அடிப்படையிலான (வர்ண சாஸ்திரம்) வகைப்படுத்தலையும் முன்னிலைப் படுத்துகிறார். பெரும்பாலும் தன் நாட்டின் செல்வங்களை எப்படிப் பெருக்கியும் பாதுகாத்தும் வர வேண்டும் என்று அரசனுக்குக் கூறும் அறிவுரைகளாகவே இந்த நூல் அமைகிறது. தொழிலாளர் விதிமுறைகள், வரி விதிப்பு, உற்பத்தி, பகிர்வு, வணிகம், நுகர்வு ஆகியவற்றின் நெறிமுறைகள் என்று இந்தக் காலத்திலும் நாம் ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் சமாசாரங்களை அப்போதே வரையறுத்திருக்கிறார். இவரது சிந்தனைகள் சமகால கிரேக்க அறிஞர்களின் சிந்தனைகளுடன் ஒப்பிடப் படுகின்றன. ஒருசில வேறுபாடுகளும் உண்டு. கிரேக்கர்கள் குறைந்த ஊதியத்தில் வேலைகளை முடிக்க அடிமைகளைப் பயன்படுத்தினர். நம் நாட்டிலோ சாதிவாரியான வேலைப் பகிர்வு மூலம் இதனைச் சாதித்துக் கொண்டார்கள். இன்றைக்கு இட ஒதுக்கீட்டை விமர்சிப்பவர்கள் அன்றைக்கு ‘வேலை ஒதுக்கீட்டால்’ ஆதாயம் அடைந்தவர்கள். காலச் சக்கரம் என்று இதைத்தான் சொல்கிறார்கள் போலும்!

இப்படியாக வேலைகளைப் பிரித்த பின்னர், சம்பளத்தை எப்படிப் பிரிப்பது? சாணக்கியரின் கணக்குப்படி அரசு அலுவலகங்களில் ஒரு எழுத்தர் (clerk) வாங்குவதை விட எல்லோரினும் மூத்த அதிகார் 48 மடங்கு அதிக ஊதியம் பெற வேண்டும் (பட்டியல் 1-ஐக் காண்க). முதல் அமைச்சர் 96 மடங்கு அதிகம் ஊதியம் பெற வேண்டும் (1:96 என்கிற விகிதம்). ஒவ்வொரு நிலை ஊழியரின் சம்பளத்தையும் துல்லியமாகப் பட்டியலிடுகிறார். இதை இன்றைய ஊதிய கமிஷன் காலத்துக்கு எப்படி மாற்றிக் கணக்கிடுவது? கினி குணகம் (Gini coefficient) என்ற எண்ணை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். சாணக்கியர் கால விலைவாசி, இன்றைய விலைவாசி, இன்ன பிற காரணிகளையும் ஒப்பிட்டு நமது ஆறாவது ஊதியக் குழுவின் (6th Pay Commission) பரிந்துரையின் அடிப்படையில் பார்த்தால் எழுத்தர்:முதல் அமைச்சர் ஊதிய விகிதம் வெறும் 1:12 என்று வருகிறது. அதாவது குமாஸ்தாவின் சம்பளம் 10,000 ரூபாய் என்றால் முதல் அமைச்சரின் சம்பளம் 1,20,000 ரூபாய். அர்த்தசாஸ்திரக் கணக்குப்படி இது 4,20,000 ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.

chanakya_pay1

அடுத்தது, ஒரே பணியில் பல்வேறு நிலைகள் இருக்கும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். இவர்களின் பதவியில் 8 நிலைகள் (Levels) இருக்கின்றன (பட்டியல் 2).  முதல் இரண்டு நிலைகளில் சாணக்கியர் சொன்னதை விட அதிக ஊதியம் பெறுகின்றனர். ஆனால் அடுத்த நிலைகளில் இவர்களின் ஊதியம் பெரிய அளவில் உயர்த்தப் படுவதில்லை. 8-ஆம் நிலைக்கு வரும்போது சாணக்கியர் பரிந்துரைத்ததில் 13% மட்டுமே பெறுகின்றனர்.

chanakya_pay

இதனால், மூத்த அதிகாரிகள் சலிப்பும் தாழ்வு மனப்பான்மையும் கொள்கின்றனர். என்ன உழைத்தாலும் பெரிய அனுகூலம் இல்லை. ஒன்று வேலை செய்யாமல் ஒப்பேற்றி விடலாம். அல்லது தனது பணி மூப்பைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம். இரண்டும் இன்றி செவ்வனே பணிபுரிபவர்களுக்கு இருக்கவே இருக்கிறது இளிச்சவாயன் பட்டம். எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளே. (ஏழாவது ஊதியக் குழுவில் வாரிக் கொடுத்த போதிலும் வாங்கி வாங்கிச் சிவந்த கைகள் இன்னும் நீட்டியபடியே தான் இருக்கின்றன.)

திருக்குறள்

வடக்கே சாணக்கியர் செல்வங்களைப் பட்டியலிட்டுப் பகிர்ந்தளிக்கச் செய்தார். மனிதர்கள் நெறிப்படுத்தப் பட வேண்டியவர்கள். ஒரு சீரான அமைப்பின் (system) மூலமே இது சாத்தியம் என்பது அவரது கொள்கை. தெற்கே திருவள்ளுவரோ முற்றிலும் வேறொரு பாதையை வகுக்கிறார். இவரது சிந்தனைப்படி அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள்; ஆக்கபூர்வமானவர்கள். தனி மனித ஒழுக்கத்தின் மூலம் சமூக அவலங்கள் தடுக்கப் படும். அத்தகைய நிலையில் எந்த ஒரு system-மும் தேவைப்படாது என்பதே இவரின் சித்தாந்த்தம். அதே வேளையில் அர்த்தசாஸ்திரத்தை ஏற்றுக்கொள்ளாத பௌத்த, ஜைன சமயங்களைப் போல் முற்றும் துறந்த நிலையையும் இவர் முன்னிறுத்தவில்லை. சமுதாய வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அதை அவரவர் ஒழுக்கத்துடனும் திறமையுடனும் செய்து வந்தால் போதும் என்று தன் குறள்களால் விளக்குகிறார். அதிகாரம் 76-இல் “செல்வம் தேவையானதே. நல்வழியில் ஈட்டிய செல்வம் மகிழ்ச்சியையும் ஒழுக்கத்தையும் தரும். இத்தகைய செல்வம் உடையவரை எல்லோரும் போற்றுவர். பகைவரை வெல்ல அதனினும் பெரிய ஆயுதம் கிடையாது” என்கிறார்.

செல்வம் இருந்தால் போதுமா? அதை சும்மா வைத்திருந்தால் யாருக்கு என்ன பயன், என்று 101-ஆம் அதிகாரத்தில் வினவுகிறார். இத்தகைய கருத்துக்கள் ருஸோ, ஆடம் ஸ்மித் போன்ற 18-ஆம் நூற்றாண்டு அறிஞர்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறது. சாணக்கியரைப் போல் அல்லாது, அரசின் தலையீடு பாதுகாப்பு, பொதுப்பணி ஆகியவற்றில் தான் இருக்க வேண்டும் என்றும் உழவுத் தொழிலே முதன்மையானது என்றும் கூறுகிறார். சமூகத்தில் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று என்கிற ரீதியில், அரசன் ஒழுக்கத்துடன் செயல்பட்டால் அது குடிகளையும் ஈர்த்து நல்லாட்சி அமைய வழிவகுக்கும்; மழையும் பயிர் விளைச்சலும் கூட இதைப் பொறுத்தே இருக்கும் என்பது இவரது கோட்பாடு.

மொத்தத்தில் தனி மனித மனம் சுதந்திரமாக, வெறுப்புகளின்றி இருக்கும் பட்சத்தில் அற வழியில் ஈட்டிய பொருள் இன்பத்தைத் தரும். மோட்சம் என்பது வள்ளுவரைப் பொறுத்த வரையில் கானல் நீரே. பற்றறுத்து மோட்சம் பெறும் அவசியம் நமக்கில்லை. உழைப்பினால் வரும் செல்வத்தைக் கொண்டு நல்லன செய்தால் போதும் என்கிறார். அதனால் தான் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலுடன் நிறுத்திக் கொண்டு வீடு (மோட்சம்) பற்றி அவர் வாய் திறக்கவேயில்லை போலும்.

சாணக்கியர் vs. திருவள்ளுவர்

அறிஞர் ருஸோ கூறியது போல ஒவ்வொரு சமூகமும் தனக்கு நல்ல மனிதர்கள் வேண்டுமா அல்லது நல்ல குடிமக்கள் வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு சாணக்கியர் கூறும் விடை ‘நல்ல குடிமக்களே’ என்பது. வள்ளுவரோ ‘நல்ல மனிதர்கள்’ என்பதில் நம்பிக்கை வைக்கிறார். அந்தோ! நமது நாட்டு நலத் திட்டங்களில் இந்த இரண்டயுமே நாம் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

மேற்கோள்:

De Vylder, Gerrit, and Zubin Mulla. “Kautilya versus Thiruvalluvar. Inspiration from Indian Ancient Classics for Ethics in Governance and Management.” Globalization for the Common Good Initiative Journal (GCGI Journal). Vol. 10. No. Fall 2014. Globalization for the Common Good Initiative, 2014.

Government of India (2008). Report of the Sixth Central Pay Commission. Retrieved on September 21, 2012 from http://pib.nic.in/archieve/others/2008/mar/6th_payreport.pdf

Bloom, M. C. (1999). The performance effects of pay dispersion on individuals and organizations. Academy of Management Journal, 42, 25-40.