முகிலினி


வரலாற்று நிகழ்வுகளை எல்லா தரப்பின் நியாயங்களையும் அறிந்து, நிகழ்வுகளின் களம், காலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘செத்துப் போனவர்களின் ஜாதகமாக’ இல்லாமல் உயிர்ப்புடன் அவற்றைப் படிப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். புனைவு கதை எழுதுவதும் அதே அளவு கடினமானதே. கதைக் களத்தில் ஃபிலிம் காட்டிவிட்டு கதையிலோ கதைமாந்தரின் வடிவமைப்பிலோ கோட்டை விட்டுவிடக் கூடாது. அப்படியானால் வரலாற்றுப் புனைவுக் கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

அப்படிப்பட்ட வித்தையை ‘முகிலினி’ என்கிற தனது வரலாற்றுப் புதினத்தில் சிறப்பாகச் செய்து காட்டியிருக்கிறார் திரு. இரா. முருகவேள் அவர்கள். சுமார் அறுபது ஆண்டு கால வரலாற்றை, கனவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், உரிமை மீறல்கள், உரிமை மீட்புப் போராட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை வாழ்வாதாரத்துக்குமான மோதல்கள், வணிகப் பேராசைகள், சாதி வேற்றுமைகள், மாற்றங்கள், மாற்றங்களுக்கான தேவைகள், வெற்றிகள், தோல்விகள் என பல பரிமாணங்களையும் சுவாரசியம் குறையாமல் சொல்ல அவர் எவ்வளவு கள ஆய்வும் கடும் உழைப்பும் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.

சவுத் இந்தியா விஸ்கோஸ் கம்பெனியின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப் பட்டது எனினும், இரண்டாம் உலகப் போர், இந்திய சுதந்திரம், பவானிசாகர் அணை கட்டப்பட்ட வரலாறு, புரூக்பாண்ட் கம்பெனி இருந்த இடம் புரூக்ஃபீல்டு பிளாசாவாக மாறியுள்ளது வரையிலான கோவையின் வளர்ச்சி என்று பல தளங்களில் நம்மைப் பயணிக்க வைக்கிறார்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் மில்கள் இங்கிருக்க, பருத்தி எல்லாம் அங்கிருக்க, இரு நாடுகளும் ஒரே நாளில் பெரும் பொருளாதார தேக்கம் அடைந்து விட்ட பின்னணியில், பருத்தி இல்லாமலே செயற்கை இழையில் இருந்து ரேயான் (ray – சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம் உடைய; on – cotton போலவே ஆடைகளாக மாற்றக் கூடியது) ஆடைகளைத் தயாரிக்கும் திட்டத்தை கோவையைச் சேர்ந்த கஸ்தூரிசாமி நாயுடு செயல் படுத்துகிறார். பவானி சாகர் அணையே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பட்ட நிலையில் 3 கோடி ரூபாய் செலவில் விஸ்கோஸ் ஆலை கட்டப் பட்டது என்றால் அதன் அளவையும் பிரம்மாண்டத்தையும் நாம் உணரலாம்.

இத்தாலியில் இருந்து மரக்கூழால் செய்யப்பட்ட அட்டைகளை வாங்கி, காஸ்டிக் சோடாவில், கார்பன் டை சல்பைடு, கந்தக அமிலம் போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி விஸ்கோஸ் என்ற கூழாக மாற்றி அதிலிருந்து ரேயான் இழை தயாரிப்பதே திட்டம். பெரும்பாலான மக்கள் ஒரு படி அரிசி வாங்கவும் கதியற்றவர்களாய் இருந்த அன்றைய சூழலில் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் தலையாய தேவைகளாக இருந்தன. எனவே, சுற்றுச்சூழல் பற்றி எல்லாம் அன்றைக்கு அறிவோ அக்கறையோ பெரிதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆற்றிலிருந்து எளிதில் நீரை எடுக்கவும், ஆலையின் கழிவு நீரை ஆற்றில் விடவும் ஏற்ற வகையில் பவானி ஆற்றுக்கு அருகே சிறுமுகையில் விஸ்கோஸ் ஆலை அமைக்கப் பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். அதுவும் நல்ல சம்பளத்தில். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த பொது, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் அரசு கருவூலம் காலியாகி விட்டிருந்தது. இறக்குமதிகளைக் குறைக்கும் பொருட்டு விஸ்கோஸ் ஆலை நிர்வாகத்தை இந்தியாவிலேயே தனக்கான மூலப் பொருட்களைத் தயாரித்துக் கொள்ள அனுமதி அளித்தது மத்திய அரசு. இதற்காக நீலகிரியில் 40,000 ஏக்கர் யூகலிப்டஸ் மரக்காடுகளில் இருந்து மரங்கள் அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டன. 200 சதவீதம் லாபம் ஈட்டியது விஸ்கோஸ் கம்பெனி. இதற்கிடையில், கம்பெனி பங்குகள் கைமாறி, நிர்வாகம் வடநாட்டவர்கள் வசம் செல்கிறது. உற்பத்தியை அசுர வேகத்தில் அதிகரிக்க ஆற்றையே நாசம் செய்து விடுகிறார்கள்.

சுற்றுச் சூழலுக்காக மக்கள் போராடுகின்றனர். பவானி ஆறு மீட்கப் பட்டதா? அதற்கான போராட்டங்கள் எப்படி இருந்தன? அவற்றின் தாக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் அதே நேரத்தில் இன்று காணாமல் போய் விட்ட நொய்யல் ஆற்றின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பவானி என்பது வடமொழி பெயர். முகில்களிலிருந்து பாய்ந்தோடி வருபவள் இவள். முகில்களைப் போன்றவள். இவள் முகிலினி என்று ராஜுவின் வாயிலாகப் பெயர் சூட்டுகிறார் முருகவேள். தனது கதைமாந்தரை அவர்களின் சிறு/இளம் வயது காலத்தில் அவன்/அவள் என்று குறிப்பிட்டுவிட்டு, அவர்கள் முதுமை அடைந்ததும் அவர் என்று குறிப்பிடும் உத்தி நன்றாக உள்ளது.

தி.மு.க.வின் வளர்ச்சியும், கம்யூனிசத்தின் தொய்வும் அலசப் பட்டுள்ளன. “நம்மாளு ஒண்ணு லண்டனுக்கு போய் உலகத்துல இருக்கற எல்லாத்தையும் படிச்சவனா இருக்கான். இல்லாட்டி எழுதப்படிக்கவே தெரியாத தற்குறியா இருக்கான். ரெண்டுக்கும் நடுவுல இருக்கற பள்ளிகூடம், காலேஜ் பசங்க எல்லாத்தையும் அண்ணாத்தொர ஆளுங்க வளச்சுட்டாங்க” என்ற உரையாடலின் மூலம் இதற்கான காரணத்தை விளங்க வைக்கிறார் ஆசிரியர். அதே போல காந்தியவாதிகள் காங்கிரஸ் காட்சியைக் கோட்டை விட்டதையும் குறிப்பிடுகிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டமும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளன.

சாதிய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள், நீதிமன்ற வழக்குகளில் சட்ட நடைமுறைகள், வாதாடும் நுணுக்கங்கள், சூழல் அறிவியல் தகவல்கள், வனத்துறை vs. பழங்குடியினர் உறவுகள், முதலாளித்துவ கொள்கைகளை, தொழிலாளர் சங்க செயல்பாடுகள், இன்றும் தொடரும் நவீன கொத்தடிமைத்தனம் என்று பல துறைகளைப் பற்றிய செய்திகளை முகிலினி மூலமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

எளிய எழுத்து நடை படிக்கும் சுமையை வெகுவாகக் குறைத்து விடுகிறது (அதுவும் ஆமை வேகத்தில் படிக்கும் எனக்கே). எடுத்துக் காட்டாக, விஸ்கோஸ் ஆலை பயன்படுத்திய வேதியியல் முறைகளையும் பொருட்களையும் விவரிக்கும் போது அலெக்சாண்டர் டூமாஸ் கதைகளில் வருவது போல் எல்லா வேதிமப் பொருட்களின் தன்மைகள், பயன்படுத்தப் பட்ட அளவுகள் என்று எல்லாவற்றையும் சொல்லாமல் கதைக்குத் தேவையானவற்றை மட்டும் விவரிக்கிறார். சட்டத் துறை, இயற்கை வேளாண்மை பற்றிய காட்சிகளிலும் அவ்வாறே எல்லோருக்கும் புரியும் படியாக எழுதியிருக்கிறார்.

நம்மாழ்வார் மற்றும் ஜக்கி வாசுதேவ் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார் (‘அசாதாரணமான ஞானக்கிறுக்கு ஒளிவீசும்’ கண்கள் கொண்ட இரண்டாமவர் ஆஸ்மான் சுவாமிகள் என்ற கதாபாத்திரத்தில் கலாய்க்கப் படுவது ரசிக்க வைக்கிறது).

சமூக நீதி, சூழல் பாதுகாப்பு போன்றவற்றை பிரச்சார மொழியில் சொல்லாமல் திருநாவுக்கரசு – கௌதம் இடையயேயான ‘உரையாடல் மற்றும் stuff’ கொண்டு சொன்னது அருமை.

இவ்வளவு பெரிய இந்தியாவில் மாடி வீட்டுத் தோட்டம் போட்டு காய்கறி உற்பத்தி செய்ய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி நியாயமானதாகவே தோன்றுகிறது.

நீலகிரியில் பிறந்து வளர்ந்து, கோவையில் படித்து நான் சுற்றித் திரிந்த காடுகளையும் சாலைகளையும் மையமாகக் கொண்டதாலோ என்னவோ என்னால் எளிதில் இந்த நாவலுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இல்லை என்றாலும், அறிவியல்/மொழி/வரலாறு/சட்டம் என்று நீங்கள் என்ன படித்திருந்தாலும், சூழலியல், மொழியியல், வரலாறு, சமூக நீதி, இயற்கை வேளாண்மை என்று எதில் ஆர்வம் இருந்தாலும், உங்களுக்கும் இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: இந்த நூல் kindle வடிவிலும் கிடைக்கிறது.

ஜன்னல் வழியே குதித்து மாயமாய் மறைந்த 100 வயது மனிதர்


 

“The Hundred-Year-Old Man Who Climbed Out of the Window and Disappeared” என்ற தலைப்பை வேறு மாதிரி மொழிபெயர்க்க எனக்குத் தெரியவில்லை. ஆனால் தலைப்பே கதையைச் சொல்லி விடுவதால் கை புண்ணுக்குக் கண்ணாடி காட்டாமல், அதாவது கதையைச் சொல்லி ஸ்பாய்லர் தராமல் கதையின் களத்தையும் கதை மாந்தரையும் அறிமுகப் படுத்துகிறேன். புத்தக விமர்சனம், திறனாய்வு, பகுப்பாய்வு எல்லாம் செய்யும் அளவுக்கு படிப்போ திறமையோ இல்லை. எனவே, இந்த நாவலைப் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.

கதை துவங்குவது சுவீடன் நாட்டில். ஹீரோவுக்கு இப்போது தான் 100 வயது ஆகிறது. எனவே அவரால் வேகமாக நகரக் கூட முடியாது. ஆனால் என்ன செய்வது? கதாநாயகன் என்பதால் சில விசித்திர சம்பவங்கள் அவருக்கு நடக்கின்றன. அவற்றுக்கு காரணம் அவராகவே கூட இருக்கலாம் என்பது வேறு விஷயம். ஆனால் மனிதர் எத்தகைய சூழ்நிலையிலும் சமயோசிதமாக முடிவெடுத்துத் தப்பித்துக் கொள்ள வல்லவர்.

தனது நூறாவது பிறந்த நாளன்று முதியோர் இல்லம் ஒன்றில் இருக்கும் ஆலன் கார்ல்சன் ஏன் தனது அறையின் ஜன்னல் வழியாக குதித்துக் கீழே இருந்த பூந்தோட்டத்தில் விழுந்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் வெளிச்சம் அதிகம் இல்லாத நேரம் அது. முதியோர் இல்ல வாழ்க்கை ஆலனுக்குப் பிடிக்கவில்லை. அந்த இல்லத்தின் மேலாளர் ஆலிஸ் கண்டிப்பு மிகுந்தவர். விதிமுறைகளை விடுமுறையின்றி விவரித்து உயிரை எடுப்பவர். அங்கே வழங்கப் படும் கஞ்சி உலகிலேயே கொடூரமானது என்பது ஆலனின் அசைக்க முடியாத நம்பிக்கை. வோட்கா இல்லாமல் ஆலனால் இருக்க முடியாது. இத்தனை காரணங்கள் போதாதா? போதாக்குறைக்கு 100 வயதை எட்டியுள்ள ஒருவரின் பிறந்த நாளை அந்த ஊரில் சற்று விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு நகர மேயரும் உள்ளூர் பத்திரிகையாளர் சகிதமாக வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க இருந்தனர்.

தனக்கு இந்த விளம்பரம் எல்லாம் தேவை இல்லை என்று ஆலன் முடிவு செய்து விட்டார். தான் ஒரு முடிவு செய்து விட்டால் தானே நினைத்தாலும் அதை மாற்றாதவர் ஆலன். எனவே இதோ கிளம்பி விட்டார் – படுக்கையறை ஜன்னல் வழியாக. வீட்டினுள் அணியும் மெல்லிய காலணிகளுடன். அதுவும் முதுமையின் விளைவாய் காலோடு ஒழுகிய சிறுநீர் ஈரம் இன்னும் உலராத அந்த காலணிகளுடன்.

இப்படி சட்டென்று கிளம்பிய ஆலன் அடுத்து என்ன செய்வது என்று பெரிதாக திட்டம் எதுவும் வைத்திருக்கவில்லை. போகிற போக்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டார். அது தான் ஆலன் கார்ல்சன். இப்படித் தான் கடந்த 100 வருடங்களாக அவர் வாழ்ந்து வருகிறார்.

பேருந்து நிலையத்தை அடைகிறார். அடுத்த பேருந்து வரக் காத்திருந்தவர் முரட்டு வாலிபன் ஒருவனைச் சந்திக்க நேர்கிறது. ஆலனைக் கொஞ்சமும் மதிக்காத அவன் தன் பெட்டியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சிறுநீர் கழிக்கச் செல்கிறான். திரும்பி வந்தவன் தன் பெட்டியையும் அங்கிருந்த கிழவனையும் காணாமல் பெருங்கோபம் கொண்டு, எல்லா கோபத்தையும் அங்கிருந்த அலுவலரிடம் காட்டுகிறான். இதற்குள்ளாக, பல மைல் தொலைவில், பாழடைந்த ரயில் நிலையம் அமைந்திருக்கும் ஒரு இடத்தில், ஈர செருப்பணிந்த 100 வயது மதிக்கத் தக்க அந்த முதியவர் பேருந்து ஓட்டுனரின் உதவியுடன் பெட்டியைக் கீழிறக்கி நடக்க ஆரம்பிக்கிறார். முதலில் இந்தப் பெட்டியைத் திறந்து இதில் ஒரு நல்ல ஷூ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி நடக்கிறார். எங்கே போகிறோம் என்று அவருக்கு அப்போது தெரியாது. அது தான் ஆலன் கார்ல்சன்.

பெட்டியில் என்ன இருந்தது? அதைக் கொண்டு வந்தவன் யார்? ஆலன் அடுத்து என்னென்ன செய்தார்? அவரது கடந்த கால வாழ்க்கை எப்படி இருந்தது? இந்தக் கேள்விகளுக்கு விடைகளை நகைச்சுவையாக, வரலாற்றுத் தரவுகளுடன் விவரிக்கிறார் கதாசிரியர் ஜோனாஸ் ஜோனஸ்ஸன்.

ஏறக்குறைய Forrest Gump போன்ற பிளாஷ் பாக் கொண்டவர் ஆலன். அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன், ரஷ்ய அதிபர் ஸ்டாலின், அணு விஞ்ஞானிகள், சீனப் புரட்சியாளர் மா ஸே துங், ஸ்பானிய சர்வாதிகாரி பிராங்கோ, என்று பலரையும் சந்தித்து ஏதோ வகையில் அவர்களுக்கு உதவுகிறார், அவர்களின் உதவியையும் தக்க சமயங்களில் பெறுகிறார். எது நடந்தாலும் பதறாமல், தன்னை நம்பியவர்களைப் பாதுகாப்பதுடன், தானும் தப்பித்துக் கொள்ளும் சமயோசித அறிவும் திறமையும் உடையவராக இருக்கிறார்.

கதையில் வரும் ‘வில்லன்கள்’ உட்பட எல்லோரும் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர். ஆலனின் திடீர் தலைமறைவை முதலில் ஆள் கடத்தல் என்றும் பின்னர் ஆலனை ஒரு தேர்ந்த கொலை/கொள்ளைக்காரன் என்றும் யூகங்கள் மற்றும் தெளிவற்ற சாட்சிகளை வைத்துக் கொண்டு பத்திரிகைகளில் வரும் செய்திகள், நடப்பவற்றை எல்லாம் மிகச் சரியாக, ஆனால் கொஞ்சம் தாமதமாகக் கண்டுபிடிக்கும் போலீஸ்காரர் அரான்சன், ‘பெயரில் மட்டுமே ஐன்ஸ்டீனின் ஜீன்களை பெற்ற’ அவரது உறவினரான ஹெர்பர்ட் ஐன்ஸ்டீன், எல்லாத் துறைகளிலும் முதுநிலை படித்து, ஆனால் எதிலும் தேர்வெழுதாத பென்னி, அவனது ‘கண்டதும் காதலி’ பியூட்டி, அவளது செல்ல நாய் மற்றும் யானை (ஆமாம், யானை தான்) என்று எல்லோரும் சுவாரஸ்யமான மனிதர்கள்/விலங்குகள்.

நூறாண்டு கால உலக வரலாற்று நிகழ்வுகளையும் கதை போக்கையும் தண்டவாளமாய்ப் பயணிக்கச் செய்து, கதை முடிவில் அவ்விரண்டையும் மிக எளிமையாகப் பிணைத்த விதத்திற்காக கதாசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும். கடைசியில் ஆலன் எடுக்கும் முடிவு உருக்கமாகவும், மனதுக்கு இனிமையானதாகவும் ஒரு feel good நாவலைப் படித்த மன நிறைவைத் தருகிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் போல் மர்மங்களோ எதிர்பாராத (எதிர்பார்க்கும்) திருப்பங்களோ, பாரஸ்ட் கம்ப் கதையைப் போல் நிறைய சோகங்களோ இதில் இல்லை.  ஆலனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், 

“Things are what they are, and whatever will be, will be.” 

ஒரு 100 நூறு வயது மனிதர் கடந்து வந்த பாதை, அவரது வாழ்வில் நடக்கும் சுவாரசியமான பல சம்பவங்கள் என்று அவருடன் பயணிக்கும் அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.

ஆலன் ஜன்னல் வழியாகக் குதித்து புது வாழ்வு தேடப் புறப்பட்டதைக் கொண்டு, வாழ்க்கை நமக்கு நிறைய வைத்திருக்கிறது. அவற்றை அறிந்து அனுபவிக்க ஒவ்வொருவரும் நிகழ்கால ‘மாய ஜன்னலைத்’ தாண்டிப் பயணிக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார் ஜோனஸ்.

அவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டாம் என்பவர்கள் ஒரு முறை ஜன்னலைத் திறந்து ஆலனின் வாழ்க்கைப் பக்கங்களை ஒருமுறை எட்டிப் பார்க்கலாம். தவறில்லை.

நன்றி.

குறிப்பு: இந்த நாவலைத் தழுவி 2013-இல் ஒரு திரைப்படமும் இதே பெயரில் எடுத்து விட்டார்கள்.