துன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்


 

தொழில் நிமித்தமாய் வெளியூர் சென்ற தலைவனிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. போனவன் தன்னை விட்டு அப்படியே போய் விட்டானா என்று தலைவிக்கு மிகுந்த சந்தேகம். அவனை நினைத்து நினைத்து சோகக் கடலில் தத்தளிக்கிறாள்.

கணக்குப் புத்தகத்தில் மூழ்கியிருந்த தோழி,

“என்னடி, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.

“உடம்பு சரியாய் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன?”

“ஓ! அவனை நினைத்து ஏங்குகிறாயா? வேலைக்காகத் தானே போயிருக்கிறான்? வந்து விடுவானடி, கவலைப் படாதே!”

“அது தான் கவலையே. போகும் போது ‘வேலை தான் முக்கியம்’ என்று சொல்லி விட்டுப் போனான். அப்போது எனக்குப் புரியவில்லை, அவனுக்கு நான் அவ்வளவு முக்கியம் இல்லை என்று.”

“வேலை முக்கியம் என்றான். சரி தான். அதன் பின், ‘உன் உயிர் நான் தான்’ என்றும் சொன்னான் அல்லவா?”

“ஏனடி அதை எல்லாம் இப்போது ஞாபகப் படுத்துகிறாய்? ‘இல்லின் கண் உறையும் மகளிர்க்கு, ஆடவர் உயிர்’ என்று கவிதை வேறு எழுதித் தந்தான். அவன் விவரமாகத் தான் இருந்திருக்கிறான். என் உயிராக இருந்தவன் போய் விட்டான். இங்கே நடைபிணமாக நான் இருக்கிறேன். எல்லாம் என் விதி.”

“இப்போது தான் distributive law of sets படித்துக் கொண்டிருந்தேன். பங்கீட்டு விதி என்று வைத்துக் கொள்ளேன். இந்த விதி உன் விதிக்கு ரொம்பவே பொருந்துகிறது.”

“நீ வேறு கண்ட விதியை எல்லாம் சொல்லி என்னைக் குழப்பாதே. ஏற்கனவே நான் போட்டிருந்த எல்லாக் கணக்கும் பொய்யாகி விட்டது.”

“அப்படி எல்லாம் சொல்லாதே. ஒரு சின்னப் படம் வரைந்து உனக்கு இதைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்” என்று கூறி, தன் டேப்லெட்டில் மளமளவென்று ஏதோ வரைந்து விட்டு, எழுதியபடியே பேசத் தொடங்கினாள்.

“இந்தப் படத்தைப் பார். இதில் நீ தான் A. தலைவன் B. அவன் செய்யப் போயிருக்கும் வேலை C என்று வைத்துக் கொள்வோம். சமன்பாட்டின் இடது பக்கத்தில் பார்த்தால் A ஆகிய நீ தனித்து நிற்கிறாய். தலைவன் வேலையில் மூழ்கியிருக்கிறான். ஆனால், வலது பக்கத்தில் பார்! நீயும் அவனும் ஒன்றாக இருக்கிறீர்கள்.”

vinaye

“போடி! என்னைச் சமாதானப் படுத்த ஏதேதோ சொல்லுகிறாய். இது நீயே கண்டுபிடித்த கணக்கு போலும்!”

“இல்லையடி, உண்மையிலேயே இது ஒரு கணித விதி தான். வினையே ஆடவர்க்கு உயிர் என்றானல்லவா? அதைத்தான் இங்கே (B ⋂ C) என்று எழுதி இருக்கிறன். தனிமையிலும் அவனை நினைத்து இருக்கிறாய் அல்லவா, எனவே A ஆகிய நீ தனித்திருந்தாலும் நினைவால் அவனுடன் இருப்பதால் A U (B ⋂ C) என்று எழுதினேன். புரிந்ததா?”

“ம்”

“இப்போது வலதுபுறம் பார். A என்ற காதலி நீயும் B என்ற காதலன் அவனும் (A U B) என்று சேர்ந்து இருக்கிறீர்கள். அதற்குக் காரணம் ‘மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என்றான் அல்லவா. அப்படியானால் உன் உயிரான அவன், உடலாகிய நீ இல்லாமல் ஏது? வினை தான் அவன் உயிர் என்றாலும் அது வாழ உடல் நீ வேண்டும் அல்லவா? அதனால் நிச்சயம் அவன் வருவான். அதைத்தான் இங்கே (A U C) என்று எழுதி இருக்கிறேன். என்ன, கணக்கு சரியாக வருகிறதா?”

“என்னவோ சொல்கிறாய். கணக்கு சரியாக வருகிறதோ இல்லையோ, உன் பேச்சில் நம்பிக்கை வரத்தான் செய்கிறது. அவன் வருவான் என்று நம்புவோமாக!”

“பேசிக் கொண்டே நீ என்னடி வரைந்து வைத்திருக்கிறாய்? வென் சித்திரம் போல் தெரிகிறது! விசித்திரமானவள் தான் நீ!”

distrib1

distrib2

“நீ சொல்லிக் கொண்டிருந்த பங்கீட்டு விதியை வென் சித்திரமாக வரைந்திருக்கிறேன். கணக்கு சரியாகத் தான் வருகிறது”.

“அது சரி, காதலன் உன்னைச் சந்திக்க வருவதில் எவ்வளவு நேரம் தாமதமாக வருகிறான் என்பதை தினமும் Excel-இல் அட்டவணை போட்டவள் தானே நீ! வாழ்க உன் காதல்!

 

பாடல் இதோ:

வினையே யாடவர்க் குயிரே வாணுதல் 

மனையுறை மகளிர்க் காடவ ருயிரென 

நமக்குரைத் தோருந் தாமே 

அழாஅ றோழி யழுங்குவர் செலவே.

குறுந்தொகை 135.
பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.

விளக்கம்: வினையே – தொழில் தான்.

ஆடவர்க்கு உயிர் – ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்.

வாணுதல் – ஒளிபொருந்திய நெற்றியையுடைய

மனையுறை மகளிர்க்கு – இல்லின் கண் உறையும் மகளிர்க்கு

ஆடவர் உயிர் என – கணவன்மாரே உயிர் ஆவரென்று

நமக்கு உரைத்தோரும் தாமே – நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே

அழாஅல் – அழாதே

செலவு அழுங்குவர் – திரும்பி வருவார்.

இன்னும் சில இனிய குறுந்தொகை பாடல்கள் இங்கே.

மூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2


 

சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று தமிழ் வேந்தர்களும் தமிழர் வரலாற்றில் ஒரு சில ஆட்சிக் காலங்களைத் தவிர எப்போதும் தமக்குள் போரிட்டு வந்தனர் என்பதை நாம் அறிவோம்.

இரண்டாம் கரிகாலன் (கி.மு. 60 முதல் கி.மு. 10 வரை), ராஜராஜ சோழன் (கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரை) ஆகியோர் நிர்மாணித்த சோழப் பேரரசு மற்ற இரு நாட்டையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. அதேபோல், கி.பி. 1280-இல் சடாவர்மன் சுந்தரபாண்டியன் அமைத்த பாண்டியப் பேரரசில் சோழ நாடு அடங்கி விட்டது. மற்ற காலங்களில் எல்லாம் மூன்று வேந்தர்களும் அவரவரது எல்லைகளுக்கு உள்ளேயே ஆண்டு வந்தனர். அவ்வப்போது மற்ற நாடுகளின் மீது படையெடுத்து, தமக்கு இருந்த படை வலிமையைப் பொறுத்து மற்ற இருவரிடம் வெற்றியோ தோல்வியோ அடைந்து வந்தனர்.

இவ்வாறு, எதிரும் புதிருமாகவே இருந்து வந்த இந்த மூன்று மன்னர்களின் வரலாற்றில் ஒரு அரிய நிகழ்வைப் பதிவு செய்துள்ளார் ஒளவையார்.

Flags_of_Three_Crowned_Kings

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் நட்புடன் கூடி இருக்கின்றனர். ‘இராசசூயம் வேட்ட’ சோழ மன்னன் பெருநற்கிள்ளி ஒரு யாகம் நடத்துகிறான். அந்த நிகழ்ச்சியில், விருந்தாளிகளாகச் சேரனும் பாண்டியனும் வந்திருக்கின்றனர். இதைக் கண்ட ஒளவையார், பெரும் மகிழ்ச்சி அடைந்து மூன்று மன்னர்களையும் வாழ்த்திப் பாடுகிறார். இந்த நிகழ்வு புறநானூற்றின் 367-ஆவது பாடலாக அமைந்துள்ளது.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;

வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;

வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;

யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

- புறநானூறு 367
ஒளவையார்
 

விளக்கம்:

“தேவலோகம் போன்ற நாடாக இருந்தாலும், வேந்தன் இறக்கும் போது அவனுடன் அந்த நாடு செல்வதில்லை. அடுத்து வரும் வலியவன் கைக்கு மாறிவிடும்.

இரந்து வரும் அந்தணர்க்குக் கைநிறைய பூவும் பொன்னும் வழங்கி, பொன் கலத்தில் நாரால் வடிகட்டிய கள்ளினை அருந்தி, ஏழைகளுக்கு இல்லையென்று சொல்லாமல் உதவி செய்து, மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் நீங்கள் வாழ்க. உங்கள் இறப்பிற்குப் பிறகு வேறு எதுவும் உங்களுடன் வரப் போவதில்லை. நீங்கள் செய்த நல்ல செயல்களால் மட்டுமே நீங்கள் மக்கள் மனங்களில் வாழ்வீர்கள்.

இரு பிறப்பு (தாய்வழி பிறப்பு, பின்னர் ஞானப் பிறப்பு ஆகியன) கொண்ட அந்தணர் வளர்க்கும் மூன்று வகை வேள்வித் தீயைப் போல (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை) நீங்கள் மூன்று பேரும் காட்சி அளிக்கின்றீர்கள்! வெண்கொற்றக் குடையையும் கொடி கட்டிய தேர்களையும் உடைய வேந்தர்களே, நான் அறிந்த வாழ்க்கை நெறி இதுவே. வானில் இருக்கும் விண்மீன்களையும் பூமியில் பொழியும் மாமழையையும் விட உங்களது வாழ்நாட்கள் சிறந்து விளங்குவன ஆகுக!”

காலம்: இந்த நிகழ்ச்சி கரிகால் வளவனின் காலத்திற்குப் பிறகும் சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பாகவும் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்.

பாடலில் நாம் அறியும் மற்றொரு செய்தி: சங்க காலத்திலேயே தமிழ் மன்னர்கள் தமது ஆட்சி நிலைக்க வேள்விகள் செய்துள்ளனர். அதற்கு கைம்மாறாக, அந்தணர்க்கு நிலமும் பொன்னும் வழங்கி இருக்கின்றனர். இன்றைக்கும் (2019-இல்) கூட தலைமைச் செயலகத்தில் நள்ளிரவு யாகங்கள் நடப்பதாகக் கேள்வி. நடக்கட்டும்.

 

பனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1


ஒரு நாட்டின் படை எவ்வளவு பெரியது என்பதை எப்படி சொல்வது? வெகுமக்களிடம் கேட்டால், ‘கடல் போல் பெரியது’ என்று சொல்வார்கள். நாட்டுப் பற்றாளர்களிடம் கேட்டால், எதிரி நாட்டின் படையுடன் ஒப்பிட்டு (உயர்த்திச்) சொல்வார்கள். எதையும் நோண்டிப் படித்துப் பார்ப்பவர்களிடம் கேட்டால், இத்தனை ஆயிரம் படைவீரர்கள், இத்தனை பிரிவுகள், இத்தனை ஆயுதங்கள் என்று பட்டியல் இட்டுப் புள்ளிவிவரம் சொல்வார்கள்.

அதுவே ஒரு நல்ல கவிஞரிடம் கேட்டால்?

சுவைமிக்க உவமை, உவமானங்களுடன் இனிய பாடல் தருவார்கள். அப்படி ஒரு பாடல் தான் புறநானூற்றில் 255-ஆவது பாடல். நலங்கிள்ளி என்ற சோழ மன்னனின் (இரண்டாம் கரிகாலன் என்ற மாமன்னனின் புதல்வன்) படைபலத்தை இந்தப் பாடலில் விவரிக்கிறார் ஆலத்தூர்கிழார் என்ற அரும்புலவர்.

தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ

விளக்கம்:

தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய – முன் செல்வோர் நுங்கின் இனிய சுவையை நுகர,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் – இடையில் சென்றோர் பனம்பழத்தினை நுகர,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர – இறுதியில் செல்வோர், வாய் அகன்ற வாயை உடைய பிசிறுதான் சுடப்பட்ட கிழங்கினை நுகர,
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ – இப்படி ஒழுங்குடன் வலம்வந்து சூழ்ந்து.

சோழனின் காலாட்படை மூன்று பிரிவுகள் கொண்டதாம்.
1. தூசிப்படை
2. இடையணிப்படை
3. இறுதியணிப்படை

இதில் முதலாவதான தூசிப்படை வீரர்கள் பனை நுங்கை உண்பார்கள். இடையணிப்படை வீரர்கள், பனம்பழம் சாப்பிடுவார்கள். இறுதியணிப் படை வீரர்களோ சுடப்பட்ட பனங்கிழங்கைத் தின்பார்கள்.

purananuru1

ஏன் இந்தப் பாகுபாடு?

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. முதல் படை போர்க்களம் புகும் பொழுது பனை நுங்கு காய்ந்திருக்கும் காலம். பெரும்பாலும் இவர்களே நுங்குடன் சேர்த்து எதிரிப் படையையும் தீர்த்து விடுவார்கள். வேலை முடியவில்லை என்றால் தான் இரண்டாம் படை அனுப்பப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் நுங்கு பழமாகி இருக்கும். எனவே, இரண்டாம் படை வீரர்கள் பனம்பழத்தை நுகர்ந்தார்கள். இரண்டாம் படையும் தவறினால், இறுதியணிப்படை நுழையும். இதற்குள்ளாக, பனம்பழம் பனங்கிழங்காக மாறியிருக்கும். வெற்றியுடன் சேர்த்து இந்தக் கிழங்குகளை மூன்றாம் படையினர் சுவைத்தார்கள்.

படைகளை ஒரே நேரத்தில் ஓரிடத்தில் குவித்து வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்திய நலங்கிள்ளி போர்த்திறத்திலும் மதிநுட்பத்திலும் ‘கில்லி’ என்பதை இதை விடச் சிறப்பாக யாராலும் சொல்ல முடியாது அல்லவா?

இவ்வாறு, பனை மரத்தின் காலச் சுழற்சியைக் கொண்டே நலங்கிள்ளியின் படை மிகுதியையும் (scale), அது ஒழுங்குடன் கடந்து செல்லும் கால நீட்சியையும் அழகாகப் பாடியுள்ளார் ஆலத்தூர்கிழார். சங்க நூல்களில் இத்தகைய அருமையான புதையல்கள் இன்னும் எத்தனை எத்தனை உள்ளனவோ!

முகிலினி


வரலாற்று நிகழ்வுகளை எல்லா தரப்பின் நியாயங்களையும் அறிந்து, நிகழ்வுகளின் களம், காலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, ‘செத்துப் போனவர்களின் ஜாதகமாக’ இல்லாமல் உயிர்ப்புடன் அவற்றைப் படிப்பவர்களுக்குச் சொல்ல வேண்டும். புனைவு கதை எழுதுவதும் அதே அளவு கடினமானதே. கதைக் களத்தில் ஃபிலிம் காட்டிவிட்டு கதையிலோ கதைமாந்தரின் வடிவமைப்பிலோ கோட்டை விட்டுவிடக் கூடாது. அப்படியானால் வரலாற்றுப் புனைவுக் கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினம் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

அப்படிப்பட்ட வித்தையை ‘முகிலினி’ என்கிற தனது வரலாற்றுப் புதினத்தில் சிறப்பாகச் செய்து காட்டியிருக்கிறார் திரு. இரா. முருகவேள் அவர்கள். சுமார் அறுபது ஆண்டு கால வரலாற்றை, கனவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், உரிமை மீறல்கள், உரிமை மீட்புப் போராட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை வாழ்வாதாரத்துக்குமான மோதல்கள், வணிகப் பேராசைகள், சாதி வேற்றுமைகள், மாற்றங்கள், மாற்றங்களுக்கான தேவைகள், வெற்றிகள், தோல்விகள் என பல பரிமாணங்களையும் சுவாரசியம் குறையாமல் சொல்ல அவர் எவ்வளவு கள ஆய்வும் கடும் உழைப்பும் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.

சவுத் இந்தியா விஸ்கோஸ் கம்பெனியின் வரலாற்றை மையமாக வைத்து எழுதப் பட்டது எனினும், இரண்டாம் உலகப் போர், இந்திய சுதந்திரம், பவானிசாகர் அணை கட்டப்பட்ட வரலாறு, புரூக்பாண்ட் கம்பெனி இருந்த இடம் புரூக்ஃபீல்டு பிளாசாவாக மாறியுள்ளது வரையிலான கோவையின் வளர்ச்சி என்று பல தளங்களில் நம்மைப் பயணிக்க வைக்கிறார்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால் மில்கள் இங்கிருக்க, பருத்தி எல்லாம் அங்கிருக்க, இரு நாடுகளும் ஒரே நாளில் பெரும் பொருளாதார தேக்கம் அடைந்து விட்ட பின்னணியில், பருத்தி இல்லாமலே செயற்கை இழையில் இருந்து ரேயான் (ray – சூரிய ஒளியைப் போன்ற பிரகாசம் உடைய; on – cotton போலவே ஆடைகளாக மாற்றக் கூடியது) ஆடைகளைத் தயாரிக்கும் திட்டத்தை கோவையைச் சேர்ந்த கஸ்தூரிசாமி நாயுடு செயல் படுத்துகிறார். பவானி சாகர் அணையே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப் பட்ட நிலையில் 3 கோடி ரூபாய் செலவில் விஸ்கோஸ் ஆலை கட்டப் பட்டது என்றால் அதன் அளவையும் பிரம்மாண்டத்தையும் நாம் உணரலாம்.

இத்தாலியில் இருந்து மரக்கூழால் செய்யப்பட்ட அட்டைகளை வாங்கி, காஸ்டிக் சோடாவில், கார்பன் டை சல்பைடு, கந்தக அமிலம் போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி விஸ்கோஸ் என்ற கூழாக மாற்றி அதிலிருந்து ரேயான் இழை தயாரிப்பதே திட்டம். பெரும்பாலான மக்கள் ஒரு படி அரிசி வாங்கவும் கதியற்றவர்களாய் இருந்த அன்றைய சூழலில் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் தலையாய தேவைகளாக இருந்தன. எனவே, சுற்றுச்சூழல் பற்றி எல்லாம் அன்றைக்கு அறிவோ அக்கறையோ பெரிதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆற்றிலிருந்து எளிதில் நீரை எடுக்கவும், ஆலையின் கழிவு நீரை ஆற்றில் விடவும் ஏற்ற வகையில் பவானி ஆற்றுக்கு அருகே சிறுமுகையில் விஸ்கோஸ் ஆலை அமைக்கப் பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். அதுவும் நல்ல சம்பளத்தில். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த பொது, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் அரசு கருவூலம் காலியாகி விட்டிருந்தது. இறக்குமதிகளைக் குறைக்கும் பொருட்டு விஸ்கோஸ் ஆலை நிர்வாகத்தை இந்தியாவிலேயே தனக்கான மூலப் பொருட்களைத் தயாரித்துக் கொள்ள அனுமதி அளித்தது மத்திய அரசு. இதற்காக நீலகிரியில் 40,000 ஏக்கர் யூகலிப்டஸ் மரக்காடுகளில் இருந்து மரங்கள் அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டன. 200 சதவீதம் லாபம் ஈட்டியது விஸ்கோஸ் கம்பெனி. இதற்கிடையில், கம்பெனி பங்குகள் கைமாறி, நிர்வாகம் வடநாட்டவர்கள் வசம் செல்கிறது. உற்பத்தியை அசுர வேகத்தில் அதிகரிக்க ஆற்றையே நாசம் செய்து விடுகிறார்கள்.

சுற்றுச் சூழலுக்காக மக்கள் போராடுகின்றனர். பவானி ஆறு மீட்கப் பட்டதா? அதற்கான போராட்டங்கள் எப்படி இருந்தன? அவற்றின் தாக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் அதே நேரத்தில் இன்று காணாமல் போய் விட்ட நொய்யல் ஆற்றின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பவானி என்பது வடமொழி பெயர். முகில்களிலிருந்து பாய்ந்தோடி வருபவள் இவள். முகில்களைப் போன்றவள். இவள் முகிலினி என்று ராஜுவின் வாயிலாகப் பெயர் சூட்டுகிறார் முருகவேள். தனது கதைமாந்தரை அவர்களின் சிறு/இளம் வயது காலத்தில் அவன்/அவள் என்று குறிப்பிட்டுவிட்டு, அவர்கள் முதுமை அடைந்ததும் அவர் என்று குறிப்பிடும் உத்தி நன்றாக உள்ளது.

தி.மு.க.வின் வளர்ச்சியும், கம்யூனிசத்தின் தொய்வும் அலசப் பட்டுள்ளன. “நம்மாளு ஒண்ணு லண்டனுக்கு போய் உலகத்துல இருக்கற எல்லாத்தையும் படிச்சவனா இருக்கான். இல்லாட்டி எழுதப்படிக்கவே தெரியாத தற்குறியா இருக்கான். ரெண்டுக்கும் நடுவுல இருக்கற பள்ளிகூடம், காலேஜ் பசங்க எல்லாத்தையும் அண்ணாத்தொர ஆளுங்க வளச்சுட்டாங்க” என்ற உரையாடலின் மூலம் இதற்கான காரணத்தை விளங்க வைக்கிறார் ஆசிரியர். அதே போல காந்தியவாதிகள் காங்கிரஸ் காட்சியைக் கோட்டை விட்டதையும் குறிப்பிடுகிறார்.

இந்தி எதிர்ப்பு போராட்டமும் பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டங்களும் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளன.

சாதிய அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள், நீதிமன்ற வழக்குகளில் சட்ட நடைமுறைகள், வாதாடும் நுணுக்கங்கள், சூழல் அறிவியல் தகவல்கள், வனத்துறை vs. பழங்குடியினர் உறவுகள், முதலாளித்துவ கொள்கைகளை, தொழிலாளர் சங்க செயல்பாடுகள், இன்றும் தொடரும் நவீன கொத்தடிமைத்தனம் என்று பல துறைகளைப் பற்றிய செய்திகளை முகிலினி மூலமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

எளிய எழுத்து நடை படிக்கும் சுமையை வெகுவாகக் குறைத்து விடுகிறது (அதுவும் ஆமை வேகத்தில் படிக்கும் எனக்கே). எடுத்துக் காட்டாக, விஸ்கோஸ் ஆலை பயன்படுத்திய வேதியியல் முறைகளையும் பொருட்களையும் விவரிக்கும் போது அலெக்சாண்டர் டூமாஸ் கதைகளில் வருவது போல் எல்லா வேதிமப் பொருட்களின் தன்மைகள், பயன்படுத்தப் பட்ட அளவுகள் என்று எல்லாவற்றையும் சொல்லாமல் கதைக்குத் தேவையானவற்றை மட்டும் விவரிக்கிறார். சட்டத் துறை, இயற்கை வேளாண்மை பற்றிய காட்சிகளிலும் அவ்வாறே எல்லோருக்கும் புரியும் படியாக எழுதியிருக்கிறார்.

நம்மாழ்வார் மற்றும் ஜக்கி வாசுதேவ் பற்றிய குறிப்புகளையும் தந்திருக்கிறார் (‘அசாதாரணமான ஞானக்கிறுக்கு ஒளிவீசும்’ கண்கள் கொண்ட இரண்டாமவர் ஆஸ்மான் சுவாமிகள் என்ற கதாபாத்திரத்தில் கலாய்க்கப் படுவது ரசிக்க வைக்கிறது).

சமூக நீதி, சூழல் பாதுகாப்பு போன்றவற்றை பிரச்சார மொழியில் சொல்லாமல் திருநாவுக்கரசு – கௌதம் இடையயேயான ‘உரையாடல் மற்றும் stuff’ கொண்டு சொன்னது அருமை.

இவ்வளவு பெரிய இந்தியாவில் மாடி வீட்டுத் தோட்டம் போட்டு காய்கறி உற்பத்தி செய்ய வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி நியாயமானதாகவே தோன்றுகிறது.

நீலகிரியில் பிறந்து வளர்ந்து, கோவையில் படித்து நான் சுற்றித் திரிந்த காடுகளையும் சாலைகளையும் மையமாகக் கொண்டதாலோ என்னவோ என்னால் எளிதில் இந்த நாவலுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இல்லை என்றாலும், அறிவியல்/மொழி/வரலாறு/சட்டம் என்று நீங்கள் என்ன படித்திருந்தாலும், சூழலியல், மொழியியல், வரலாறு, சமூக நீதி, இயற்கை வேளாண்மை என்று எதில் ஆர்வம் இருந்தாலும், உங்களுக்கும் இந்த நாவல் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

குறிப்பு: இந்த நூல் kindle வடிவிலும் கிடைக்கிறது.

துன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்


தமிழ் மக்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பல விதமான அனுபவங்களையும் உணர்வுகளையும் கதையாகவும், கவிதையாகவும் நாடகங்களாகவும் பலவாறு பதிவு செயதுள்ளனர்.

“இது என்ன பெரிய அதிசயமா? எல்லா மொழிக்காரனும் தான் இதை எல்லாம் செய்யறான். இங்கிலீஷ்காரன் எழுதாததா?” என்பதே இதற்குப் பலரது பதிலாக இருக்கும்.

ஆனால் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். எல்லோரும் தான் எழுதினார்கள். நம்மை விடச் சிலர் நன்றாக எழுதினார்கள். சிலர் நன்றாக அவற்றைச் சேமித்தும் பரப்பியும் உலகப் புகழ் பெறச் செய்தார்கள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர்கள் யாரும் நம் மக்களைப் போல உணர்வுகளை இடம், காலம், சூழல் போன்ற தரவுகளைக் கொண்டு துல்லியமாக வரையறை செய்யவில்லை.

எடுத்துக்காட்டாக, ஆங்கில இலக்கியத்தைப் பெரும்பாலும் Romance, Nature, History போன்ற ஒருசில பிரிவுகளில் அடக்கி விடலாம். கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் செய்யுள் (verse), விளக்கிக் கூறுதல் (narrative), நையாண்டி/வஞ்சப்புகழ்ச்சி (satirical), இரங்கற்பா (elegy), நாடகத் தன்மை (dramatic) என்பன போன்ற பிரிவுகளில் போட்டு அமுக்கி விடுவார்கள்.

இப்போது தமிழுக்கு வருவோம். முதலில் அகம், புறம் என்ற பிரிவுகள். கண்ணதாசன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் பகலெல்லாம் புறம், இரவெல்லாம் அகம்.

போரில் எதிரியைப் போட்டுத் தள்ளியது, போட்டுத் தள்ளியவரின் பெருமை போற்றி ஃப்ளெக்ஸ் போர்டு வைப்பது, ஏழைகளுக்கு உதவியது, முல்லைக்கு காரும் மயிலுக்கு ஜமுக்காளமும் தந்தது (முல்லையும் மயிலும் பெண்களாக இல்லாத பட்சத்தில்) இவை எல்லாம் புறம்.

பக்கத்து ஊர் பெண்ணைப் பார்த்துப் பல் இளித்தது, தூது அனுப்பியது/சென்றது, காதலன் & காதலி இடையேயான ஊடல், கூடல், பிரிதல் (break-up), பிரிவாற்றாமல் இருத்தல், இது போன்ற ‘லவ் மேட்டர்’ எல்லாம் அகம்.

இந்த அகப்பொருளில் யாருடைய காதலைப் பற்றி வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் அவர்களின் பெயரோ முகவரியோ மற்ற தனிப்பட்ட விவரங்களோ சொல்லக் கூடாது. தனி நபர் அந்தரங்கம் (Privacy) மிக முக்கியம். தினத்தந்தியில் வருவது போல் ‘அம்பிகா நகரில் வசிப்பவர் மாரிமுத்து (வயது 52). இவரது மகன் குமார் (வயது 26). இவர் தனது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த மாணிக்கம் (54) என்பவரது மகள் செல்வியை (வயது 23) காதலித்து வந்ததார். இருவரும் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர் (தனியார் கல்லூரி என்றால் மட்டும் பெயர் போடாமல் அகப்பொருள் காப்பார்கள்). இவர்கள் அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் பெற்றோருக்கு இந்த விசயம் தெரிந்த போது பாரதியார் நகரில் வசித்து வரும் பெண்ணின் தாய்மாமன் சுரேஷ் (43)….” என்கிற ரீதியில் எழுதக் கூடாது. இது அகமாகவும் இல்லாமல் புறமாகவும் இல்லாமல் அசிங்கமாகவே பார்க்கப்படும்.

அவ்வளவு ஏன், ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கூறிய நக்கீரரே எழுதிய நெடுநல்வாடை என்ற நூல் பெரும்பாலும் அகம் பற்றியே பேசுவது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வேம்பு என்ற அடையாளம் பாண்டிய மன்னனைக் குறித்ததால் இந்த முழு நூலும் புறப்பொருள் நூல் அலமாரியில் வைக்கப் பட்டுவிட்டது. எனவே, பாடப்படுபவர்களின் அடையாளம் தெரியாதபடி கண்ணியமாக அவர்களது privacy-ஐ மதிப்பதே அகம். காதலன் தலைவன்; காதலி தலைவி. அவ்வளவு தான். மற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் செவிலி மற்றும் தோழி. பாங்கன் (தோழன்) சில நேரத்தில் வருவதுண்டு. கிளுகிளுப்பூட்ட பரத்தை (விலைமகள்) கதாபாத்திரமும் உண்டு.

இது தவிர, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் குளிர்காலக் காதல்கள் (குறிஞ்சி), அடர்ந்த காடுகளில் அமைந்திருக்கும் ரிசார்ட் காதல்கள் (முல்லை), பண்ணை வீட்டுக் காதல்கள் (மருதம்), கடற்கரைக் காதல்கள் (நெய்தல்), இவை எல்லாம் ‘அத்துக்’ கொண்டால் “ஊட்டிக்கு தனியா தான் போக வேணும் போல” என்கிற விரக்தியில் மலைக்கும் காட்டுக்கு இடையே பாழாகிப் புலம்பும் காதல் (பாலை) என்று 5 வகையான திணைகள், அவற்றுக்கு உரிய கருப்பொருட்கள் என்று பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

இப்போதைக்கு, மலைப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் பசலை நோயால் தான் அடைந்து விட்ட மாற்றங்களைச் சொல்லி “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்று விளக்கும் ஒரு குறிஞ்சித் திணையில் அமைந்த பாடலைப் பார்ப்போம். அது என்ன பசலை? கேன்சரை விடக் கொடிய நோயா என்று கேட்பவர்கள் இங்கே ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வரவும்.

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருதலைச் சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே.

குறுந்தொகை பாடல் 13
எழுதியவர்: கபிலர்

இந்தப் பாடலுக்கு எனக்குப் புரிந்த வரை விளக்கம்:
மாசறக் கழீஇய யானை போல – தன் மீது படிந்திருந்த தூசு முழுவதும் போகும்படி சுத்தமாகக் கழுவப்பட்ட யானையைப் போல
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல் – துறுகள் என்பது வட்ட வடிவிலான ஒரு கல். பெருமழையில் கழுவப்பட்ட வட்ட வடிவிலான ஒரு பாறையானது
பைத லொருதலைச் சேக்கு நாடன் – பசுமை நிறைந்த ஒரு பகுதியில் இருக்கும் மலை நாட்டைச் சேர்ந்த காதலன்
நோய்தந் தனனே தோழி – (பசலை என்ற) நோய் ஒன்றைத் தந்து விட்டான், என் தோழியே!
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே – பசலை நிறத்தை அடைந்து விட்டன அழகிய குவளை மலர்களை போல இருந்த என் கண்கள்

kuvalai

குவளை © SanctuaryX [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)%5D

காத்திருப்பு

அதாவது, சுத்தமாகக் கழுவிய யானைப் போல மழை நீரால் நன்கு கழுவப்பட்ட பாறை ஒன்று அமைந்திருக்கும் மலை நாட்டைச் சேர்ந்த என் காதலன் எங்கோ போய் விட்டான். அவனின் நினைவுகளால் என் தோற்றமும் பொலிவும் மாறிவிட்டது. பசலை என்ற இந்தக் கொடிய நோயால், முன்னர் அழகிய குவளை மலர்களை போன்று இருந்த என் கண்கள் இப்போது பசலை நிறம் பெற்று விட்டன.

ஐந்தே வரிகளில் யானை – பாறை, குவளை – கண்கள், நோய் – பிரிவு என்ற உவமைகளும் அவர்கள் வாழ்த நிலப்பரப்பு குறித்த தகவல்களும், உணர்வுகளால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையையும் இலக்கணம் மாறாமல், அக இலக்கிய நெறிக்கு உட்பட்டு உணர்வுகளை வெளிப்படுத்த இனிய தமிழில் எழுதப் பட்ட இந்தக் குறுந்தொகை பாடல் காதலியின் நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது அல்லவா?

ஜன்னல் வழியே குதித்து மாயமாய் மறைந்த 100 வயது மனிதர்


 

“The Hundred-Year-Old Man Who Climbed Out of the Window and Disappeared” என்ற தலைப்பை வேறு மாதிரி மொழிபெயர்க்க எனக்குத் தெரியவில்லை. ஆனால் தலைப்பே கதையைச் சொல்லி விடுவதால் கை புண்ணுக்குக் கண்ணாடி காட்டாமல், அதாவது கதையைச் சொல்லி ஸ்பாய்லர் தராமல் கதையின் களத்தையும் கதை மாந்தரையும் அறிமுகப் படுத்துகிறேன். புத்தக விமர்சனம், திறனாய்வு, பகுப்பாய்வு எல்லாம் செய்யும் அளவுக்கு படிப்போ திறமையோ இல்லை. எனவே, இந்த நாவலைப் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.

கதை துவங்குவது சுவீடன் நாட்டில். ஹீரோவுக்கு இப்போது தான் 100 வயது ஆகிறது. எனவே அவரால் வேகமாக நகரக் கூட முடியாது. ஆனால் என்ன செய்வது? கதாநாயகன் என்பதால் சில விசித்திர சம்பவங்கள் அவருக்கு நடக்கின்றன. அவற்றுக்கு காரணம் அவராகவே கூட இருக்கலாம் என்பது வேறு விஷயம். ஆனால் மனிதர் எத்தகைய சூழ்நிலையிலும் சமயோசிதமாக முடிவெடுத்துத் தப்பித்துக் கொள்ள வல்லவர்.

தனது நூறாவது பிறந்த நாளன்று முதியோர் இல்லம் ஒன்றில் இருக்கும் ஆலன் கார்ல்சன் ஏன் தனது அறையின் ஜன்னல் வழியாக குதித்துக் கீழே இருந்த பூந்தோட்டத்தில் விழுந்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் வெளிச்சம் அதிகம் இல்லாத நேரம் அது. முதியோர் இல்ல வாழ்க்கை ஆலனுக்குப் பிடிக்கவில்லை. அந்த இல்லத்தின் மேலாளர் ஆலிஸ் கண்டிப்பு மிகுந்தவர். விதிமுறைகளை விடுமுறையின்றி விவரித்து உயிரை எடுப்பவர். அங்கே வழங்கப் படும் கஞ்சி உலகிலேயே கொடூரமானது என்பது ஆலனின் அசைக்க முடியாத நம்பிக்கை. வோட்கா இல்லாமல் ஆலனால் இருக்க முடியாது. இத்தனை காரணங்கள் போதாதா? போதாக்குறைக்கு 100 வயதை எட்டியுள்ள ஒருவரின் பிறந்த நாளை அந்த ஊரில் சற்று விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு நகர மேயரும் உள்ளூர் பத்திரிகையாளர் சகிதமாக வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க இருந்தனர்.

தனக்கு இந்த விளம்பரம் எல்லாம் தேவை இல்லை என்று ஆலன் முடிவு செய்து விட்டார். தான் ஒரு முடிவு செய்து விட்டால் தானே நினைத்தாலும் அதை மாற்றாதவர் ஆலன். எனவே இதோ கிளம்பி விட்டார் – படுக்கையறை ஜன்னல் வழியாக. வீட்டினுள் அணியும் மெல்லிய காலணிகளுடன். அதுவும் முதுமையின் விளைவாய் காலோடு ஒழுகிய சிறுநீர் ஈரம் இன்னும் உலராத அந்த காலணிகளுடன்.

இப்படி சட்டென்று கிளம்பிய ஆலன் அடுத்து என்ன செய்வது என்று பெரிதாக திட்டம் எதுவும் வைத்திருக்கவில்லை. போகிற போக்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி விட்டார். அது தான் ஆலன் கார்ல்சன். இப்படித் தான் கடந்த 100 வருடங்களாக அவர் வாழ்ந்து வருகிறார்.

பேருந்து நிலையத்தை அடைகிறார். அடுத்த பேருந்து வரக் காத்திருந்தவர் முரட்டு வாலிபன் ஒருவனைச் சந்திக்க நேர்கிறது. ஆலனைக் கொஞ்சமும் மதிக்காத அவன் தன் பெட்டியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சிறுநீர் கழிக்கச் செல்கிறான். திரும்பி வந்தவன் தன் பெட்டியையும் அங்கிருந்த கிழவனையும் காணாமல் பெருங்கோபம் கொண்டு, எல்லா கோபத்தையும் அங்கிருந்த அலுவலரிடம் காட்டுகிறான். இதற்குள்ளாக, பல மைல் தொலைவில், பாழடைந்த ரயில் நிலையம் அமைந்திருக்கும் ஒரு இடத்தில், ஈர செருப்பணிந்த 100 வயது மதிக்கத் தக்க அந்த முதியவர் பேருந்து ஓட்டுனரின் உதவியுடன் பெட்டியைக் கீழிறக்கி நடக்க ஆரம்பிக்கிறார். முதலில் இந்தப் பெட்டியைத் திறந்து இதில் ஒரு நல்ல ஷூ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி நடக்கிறார். எங்கே போகிறோம் என்று அவருக்கு அப்போது தெரியாது. அது தான் ஆலன் கார்ல்சன்.

பெட்டியில் என்ன இருந்தது? அதைக் கொண்டு வந்தவன் யார்? ஆலன் அடுத்து என்னென்ன செய்தார்? அவரது கடந்த கால வாழ்க்கை எப்படி இருந்தது? இந்தக் கேள்விகளுக்கு விடைகளை நகைச்சுவையாக, வரலாற்றுத் தரவுகளுடன் விவரிக்கிறார் கதாசிரியர் ஜோனாஸ் ஜோனஸ்ஸன்.

ஏறக்குறைய Forrest Gump போன்ற பிளாஷ் பாக் கொண்டவர் ஆலன். அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன், ரஷ்ய அதிபர் ஸ்டாலின், அணு விஞ்ஞானிகள், சீனப் புரட்சியாளர் மா ஸே துங், ஸ்பானிய சர்வாதிகாரி பிராங்கோ, என்று பலரையும் சந்தித்து ஏதோ வகையில் அவர்களுக்கு உதவுகிறார், அவர்களின் உதவியையும் தக்க சமயங்களில் பெறுகிறார். எது நடந்தாலும் பதறாமல், தன்னை நம்பியவர்களைப் பாதுகாப்பதுடன், தானும் தப்பித்துக் கொள்ளும் சமயோசித அறிவும் திறமையும் உடையவராக இருக்கிறார்.

கதையில் வரும் ‘வில்லன்கள்’ உட்பட எல்லோரும் நம்மைச் சிரிக்க வைக்கின்றனர். ஆலனின் திடீர் தலைமறைவை முதலில் ஆள் கடத்தல் என்றும் பின்னர் ஆலனை ஒரு தேர்ந்த கொலை/கொள்ளைக்காரன் என்றும் யூகங்கள் மற்றும் தெளிவற்ற சாட்சிகளை வைத்துக் கொண்டு பத்திரிகைகளில் வரும் செய்திகள், நடப்பவற்றை எல்லாம் மிகச் சரியாக, ஆனால் கொஞ்சம் தாமதமாகக் கண்டுபிடிக்கும் போலீஸ்காரர் அரான்சன், ‘பெயரில் மட்டுமே ஐன்ஸ்டீனின் ஜீன்களை பெற்ற’ அவரது உறவினரான ஹெர்பர்ட் ஐன்ஸ்டீன், எல்லாத் துறைகளிலும் முதுநிலை படித்து, ஆனால் எதிலும் தேர்வெழுதாத பென்னி, அவனது ‘கண்டதும் காதலி’ பியூட்டி, அவளது செல்ல நாய் மற்றும் யானை (ஆமாம், யானை தான்) என்று எல்லோரும் சுவாரஸ்யமான மனிதர்கள்/விலங்குகள்.

நூறாண்டு கால உலக வரலாற்று நிகழ்வுகளையும் கதை போக்கையும் தண்டவாளமாய்ப் பயணிக்கச் செய்து, கதை முடிவில் அவ்விரண்டையும் மிக எளிமையாகப் பிணைத்த விதத்திற்காக கதாசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும். கடைசியில் ஆலன் எடுக்கும் முடிவு உருக்கமாகவும், மனதுக்கு இனிமையானதாகவும் ஒரு feel good நாவலைப் படித்த மன நிறைவைத் தருகிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளைப் போல் மர்மங்களோ எதிர்பாராத (எதிர்பார்க்கும்) திருப்பங்களோ, பாரஸ்ட் கம்ப் கதையைப் போல் நிறைய சோகங்களோ இதில் இல்லை.  ஆலனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், 

“Things are what they are, and whatever will be, will be.” 

ஒரு 100 நூறு வயது மனிதர் கடந்து வந்த பாதை, அவரது வாழ்வில் நடக்கும் சுவாரசியமான பல சம்பவங்கள் என்று அவருடன் பயணிக்கும் அரிய வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.

ஆலன் ஜன்னல் வழியாகக் குதித்து புது வாழ்வு தேடப் புறப்பட்டதைக் கொண்டு, வாழ்க்கை நமக்கு நிறைய வைத்திருக்கிறது. அவற்றை அறிந்து அனுபவிக்க ஒவ்வொருவரும் நிகழ்கால ‘மாய ஜன்னலைத்’ தாண்டிப் பயணிக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார் ஜோனஸ்.

அவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டாம் என்பவர்கள் ஒரு முறை ஜன்னலைத் திறந்து ஆலனின் வாழ்க்கைப் பக்கங்களை ஒருமுறை எட்டிப் பார்க்கலாம். தவறில்லை.

நன்றி.

குறிப்பு: இந்த நாவலைத் தழுவி 2013-இல் ஒரு திரைப்படமும் இதே பெயரில் எடுத்து விட்டார்கள்.

தனிமங்களின் ஹைக்கூ


தனிம அட்டவணையில் (Periodic Table) உள்ள ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு ஹைக்கூ. சயின்ஸ் (Science) சஞ்சிகையில் Elemental haiku என்ற தலைப்பில் மேரி சோன் லீ எழுதிய பதிவால் உந்தப்பட்டு இதை எழுதியிருக்கிறேன். தனிமனித துதியை விட தனிம துதி எவ்வளவோ மேல் என்று நம்புகிறேன். தனிம பண்புகள் சிலவற்றையாவது இதன் மூலம் கற்கலாம் என்றும் நம்புகிறேன்.

—–

1. ஹைட்ரஜன்

விண்மீன்களின் எரிபொருள்

தண்ணீரிலும் தனக்கோர் இடம்

முதல்வன்


2. ஹீலியம்

முதல்வனின் மூப்பு

எவரோடும் வினை இல்லை

ஏன் இந்த தனிமை?


3. லித்தியம்

மெல்லிடையாளே!

திறன்பேசியின் உயிரே!

உன் உலகம் இது.


4. பெரிலியம்

எக்ஸ்-கதிர்களின் ஒருவழிப் பாதை

இனித்திடும்

மரகத மணி


5. போரான்

குறைகடத்திகளின்

வேண்டிய மாசு

வாணவேடிக்கை பாரீர்!


6. கரிமம்

கரி என்றால் கரி

வைரம் என்றால் வைரம்

எடுப்பார் கைப்பிள்ளை.


7. நைட்ரஜன்

காற்று நிலம் பயிர் வேர்

வேர் பயிர் நிலம் காற்று

ஓய்வே இல்லையா உனக்கு?


8. ஆக்ஸிஜன்

என்னுள் நிறைந்தவளே!

எனை விட்டுப் போகாதே

எங்கேயும் எப்போதும்.


9. ஃப்ளூரின்

சண்டை பொறுக்கி

பற்பசையில் பல் இளிக்கும்

எலக்ட்ரான் திருடி


10. நியான்

விளம்பரப் பிரியை

நகர இரவுகளின்

சொரூப ராணி


11. சோடியம்

ஒவ்வொரு முத்தத்திலும்

ஒவ்வொரு நினைவிலும்

வெடிக்கக் காத்திரு.


12. மெக்னீசியம்

வயோதிக நட்சத்திரங்களின் குழந்தை

நீ என்னதான் எரிந்தாலும்

அவர்கள் மீண்டு வரப்போவது இல்லை.


13. அலுமினியம்

கட்டட சட்டங்களில்

விமான உடல்களில்

ஒளி வீசிடும் மெலியவள்


14. சிலிக்கான்

கல்லிலும் கடற்கரை ஓரத்திலும்

ஓய்வெடுத்து காத்திருடா

மின்னணு சாதனத்தில் புகும் வரை!


15. பாஸ்ஃபரஸ்

வெள்ளையும் சிவப்புமாய்

விபரீதம் ஏராளம்

தீப்பெட்டி ஜாக்கிரதை!


16. சல்ஃபர் (கந்தகம்)

கந்தக மங்கையே

ஹைட்ரஜன் பயலுடன் மட்டும் சேராதே

மூக்கு தாங்காது.


17. குளோரின்

உப்பிலும் நீச்சல்குள நீரிலும்

உலகப்பெரும் போரிலும் உலவும்

எலக்ட்ரான் பித்தன்.


18. ஆர்கான்

உனை சோம்பேறி என்றனர் அறியாதார்

நிலைத்து நிற்பதற்கும்

நிறைய பலம் வேண்டும்.


19. பொட்டாஸியம்

மென்மையானவள்

காற்று பட்டால் கூட

சோம்பிப் போகிறாள்.


20. கால்சியம்

எஃகுக்கும் எலும்புக்கும்

தேவை உன்

உறுதி


21. ஸ்கேண்டியம்

அன்றைக்கு டி-பிரிவில் பார்த்தேன்

மற்றொரு நாள் வேறு எங்கோ…

எந்த வகுப்பு மாணவன் நீ?


22. டைட்டானியம்

பறக்கும் வானூர்தி

செயற்கை இடுப்பு

எல்லாம் உன் கைவண்ணம்.


23. வணாடியம்

வளைந்து கொடுப்பதால்

மெலியான் என்று ஏசுவர்

மன்னித்திடு எலக்ட்ரான் வல்லளே!


24. குரோமியம்

மேல்பூசி மெருகேற்றும்

தோல்வேலை தொடர் நோய்தரும்

சாயப் பட்டறை


25. மாங்கனீஸ்

உறுதி குறையாமல் உடைந்தும் போகாமல்

எஃகு எளிதானது

உன் வித்தையன்றி வேறென்ன?


26. இரும்பு

அச்சு, ஆணி, இயந்திரம்

எல்லாவற்றிலும் உன்

இரும்புப் பிடி


27. கோபால்ட்

காங்கோவின் வரமா

இல்லை சாபமா உன்

நீல ஜாலம்?


28. நிக்கல்

மீ ஒளி விண்மீனில்

உதித்தாய்

சில்லறைக் காசு ஆவதற்கா?


29. தாமிரம்

மின்கடத்தி வெப்பக்கடத்தி

தூத்துக்குடியை ஏனோ

நினைவூட்டுகிறாய்.


30. துத்தநாகம்

எளிதில் உருகி விடுகிறாயாம்

டி-பிரிவு போக்கிரிகள் உனைச்

சேர்த்துக் கொள்ள மறுக்கிறார்கள்.


31. காலியம்

உள்ளங்கையில்

உருகும் உனக்கு

எல்.இ.டி-க்கள் தான் சரி.


32. ஜெர்மானியம்

உன் குறைகடத்தி கிரீடத்தை

சிலிக்கான் பறித்துக் கொண்டதை

இன்னுமா குறைசொல்லிக் கொண்டு இருக்கிறாய்?


33. ஆர்செனிக்

பல கொலை விசாரணைகள்

உன் மீது

நெப்போலியனையே சாய்த்து விட்டாயாமே!


34. செலினியம்

ஊட்டச் சத்து உணவில்

உனக்கென்று தனி இடம்

ரொம்ப பெருமையோ?


35. புரோமின்

கொப்பளிக்கும் திரவமே

பண்டைய கிரேக்கத்தில் உன் பெயருக்கு

துர்நாற்றம் என்று பொருளாமே!


36. க்ரிப்டான்

மீட்டரையே அளந்தது

உன் ஒளிக் கோடு

மெய்யாகவே நீ அருவளிமம் தான்.


37. ருபிடியம்

கோபம் வேண்டியது தான்

அதற்காக தண்ணீர் பட்டால் கூடவா

எரிந்து விழுவாய்?


38. ஸ்டிரான்சியம்

எலும்பு விரும்பி

ஃபுகுஷிமா அணுக் கசிவில்

உன் ஆட்டம் தான் போல!


39. இற்றியம்

என்னதான் மீக்கடத்தியில்

இடம் பெற்றாலும்

இப்படியுமா பேர் வைப்பார்கள்?


40. சிர்கோனியம்

அவளது ஆபரணங்களிலும்

அவளைப் போன்ற

நிலாவிலும் இருக்கிறாய்.


41. நியோபியம்

என்றைக்காவது

எண்ணிப் பார்த்திருக்கிறாயா?

‘கொலம்பிய’மாகவே இருந்திருக்கலாம் என்று?


42. மாலிப்டீனம்

ஈயம் என்றெண்ணி

எகத்தாளம் செய்வார்

உன் அருமை தெரியாதார்.


43. டெக்னீஷியம்

வந்ததும் தெரியாது

போனதும் தெரியாது

சிவப்பு அரக்கர்களின் மின்னல் மகள்.


44. ருதீனியம்

இரும்புக்குக் கீழ்

அமர்ந்ததால்

உன் இருப்பிடம் தெரியவில்லை.


45. ரோடியம்

காற்று மாசைக் குறைத்துக் கொண்டிருக்கிறாய்

நச்சுப் புகையை முதலில்

நீ சுவாசித்து.


46. பல்லேடியம்

மூச்சு முட்ட ஹைட்ரஜன் விழுங்கிவிட்டு

பல் இளிக்கிறாள் பவ்யமாய்

ப்ளாட்டினம் கணக்காக!


47. வெள்ளி

பதக்கப் பட்டியலில் இரண்டாமிடம்

அதனால் என்ன?

உன் வெள்ளை மனதால் எல்லாம் வெல்வாய்.


48. கேட்மியம்

நீ மென்மையானவன் தான்

நெருங்கிப் பழகினால்

கேடுமயம்!


49. இண்டியம்

வெள்ளியின் பேத்தி

கேட்மியப் புதல்வி

சூரிய வம்சம்?


50. வெள்ளீயம் (தகரம்)

‘மாய எண்’ ப்ரோட்டான்களின்

மகத்துவம்

உன் நிலைத்தன்மை.


51. ஆண்டிமோனி

எத்தனை நெருப்புகளை

அணைத்திருப்பாய்?

உன்னையுமா ஈயம் என்று நினைத்தார்கள்?


52. டெல்லூரியம்

விண்வெளிக்கு ஓடி விட்டால்

மறந்திடுவோமா?

ஹப்பிள் உன்னைக் கவனித்து விட்டது!


53. ஐயோடின்

ஒரே ஒரு கேள்வி தான்

உப்பில் நீ

இருக்கிறாயா இல்லையா?


54. செனான்

விளக்குகள்

லேசர்கள்

ஒளிமயமான வாழ்வு உனக்கு!


55. சீசியம்

சீற்றமோ சீற்றம்

உண்மையில் வெகுளி

புலித்தோல் போர்த்திய பசு.


56. பேரியம்

வாண வேடிக்கையில்

பச்சை நிறமெல்லாம்

உன் கைவண்ணமே!


57. லாண்தனம்

கீழ் தளத்தில்

உன் பெயரில் ஒரு குடியிருப்பு

உன் வாசமோ மேல் மாடியில்.


58. சீரியம்

ஈயத்தை விட

நீக்கமற நிறைந்தவன்

இருப்பதோ ‘அரிய’ தனிம கூடாரத்தில்!


59. ப்ராஸ்யோடைமியம்

ஒன்றைக் குளிர்விக்க

வெப்பத்தை குறைக்க வேண்டாம்

காந்தப் புலம் போதும்!


60. நியோடைமியம்

கொஞ்சம் இரும்பு, கொஞ்சம் போரான்

உன்னோடு சேர்ந்தால்

இணையில்லா காந்த சக்தி!


61. ப்ரோமீதியம்

கதிர்வீச்சும்

நிலை மாற்றமுமாய்

எல்லாம் குழப்பம்.


62. சமேரியம்

புற்று நோய் மருத்துவன்

அணு உலை அடக்குவான்

கோடான கோடி நன்றி!


63. யூரோப்பியம்

புற ஊதாக் கதிரின்

கரங்கள் பட்டதும்

ஃப்ளூரசன்ஸ் வெட்கம்!


64. கடோலினியம்

எத்தனை நியூட்ரான்கள்

வந்தாலும்

எனைத் தாண்டிப் போகாது!


65. டெர்பியம்

பச்சை ஒளி

வேண்டுமா?

யாமிருக்க பயமேன்?


66. டிஸ்ப்ரோசியம்

கதிர்வீச்சை அளக்கிறாய்

அணு வினையை அறுக்கிறாய்

அழுக்குப் படாமல் இருந்து கொள்!


67. ஹோமியம்

ஷெர்லாக் ஹோம்ஸ்

தேவையில்லை

நீ ஸ்டாக்ஹோம் காரன் என்று கண்டுபிடிக்க.


68. எர்பியம்

ஒளி இழைகளின்

திறன் ஏற்றுகிறாய்

நாங்கள் இணையத்தில் வேகம் பெற.


69. தூலியம்

ஒன்றல்ல இரண்டல்ல

பதினைந்தாயிரம் வேதியியல் படிகள்

உன்னை அடைய!


70. இட்டர்பியம்

அணுக் கடிகாரங்களின் மணிகாட்டி

உன் துல்லியமான

எலக்ட்ரான் தாவல்கள்.


71. லுட்டீசியம்

முப்பத்தெட்டு பில்லியன் ஆண்டுகள்

அரையாகு காலம்

எல்லோரின் வயதும் அத்துப்படி உனக்கு!


72. ஹாஃப்னியம்

உன் காமா கதிர்வீச்சைத்

தூண்டாமல் இருப்பதே நல்லது

பேரழிவு ஆயுதமன்றோ அது?


73. டாண்டலம்

சின்னச் சின்ன

மின் தேக்கிகள்

வண்ண வண்ண ஜாலங்கள்!


74. டங்க்ஸ்டன்

குண்டு பல்புகளின்

உயிர் நாடி நீ!

சரி சரி, எரிந்து விழாதே!


75. ரீனியம்

ரைன் நதியின்

பெயர் பெற்றனை

கல்லீரலைக் காப்பவனே!


76. ஆஸ்மியம்

அடர்த்தியில் முதல்வன்

ஹைட்ரஜன் விரும்பி

விலை மட்டும் கேட்காதீர்!


77. இரிடியம்

வெள்ளி போல

வெண்மை பூசியும்

இளமஞ்சள் இளிக்கிறதே!


78. பிளாட்டினம்

பொன்னைக் கரைத்திடும்

அமிலமும்

ஒன்றும் செய்யாது உன்னை.


79. தங்கம்

எல்லா

வாக்குகளும்

உனக்குத்தான்.


80. பாதரசம்

இளகிய உலோகமே

ரசவாத ரகசியமே

எங்கள் குடிநீரில் கலந்திடாதே.


81. தாலியம்

ஒப்பற்ற நஞ்சு

எலிகளுக்கும்

வேண்டா விருந்தாளிக்கும்


82. ஈயம்

கதிர்வீச்சுக் கேடயமே!

உனைச் செவிடர் காதில்

ஊற்றுவானேன்?


83. பிசுமத்

அணு எண் செல்வன்

அரை ஆவதில்

மார்க்கண்டேயன்.


84. பொலோனியம்

கியூரியும் பியரியும்

கண்டெடுத்த

கதிர்வீச்சுக் குழந்தை


85. ஆஸ்டடைன்

உலகம் முழுக்க

உருட்டி எடுத்தாலும்

உள்ளங்கை அளவே கிடைத்திடுவாய்.


86. ரேடான்

என்ன திட்டம் தீட்டுகிறாய்

எங்கள் வீட்டுக்கடியில்?

தற்கொலை முயற்சி தானே?


87. ஃப்ரான்சியம்

கடைசி வரிசை கதவோர இருக்கை

இருபது நிமிடத்தில்

இங்கு இருக்க மாட்டாய் நீ.


88. ரேடியம்

கதிர்வீசும் மின்மினி

ஒளிரும் கடிகார முட்களில்

எத்தனை பெண்களின் எச்சில்!


89. ஆக்டினியம்

தனிம வகுப்பில்

கடைசி வரிசை பையன்களின்

தனிப்பெரும் தலைவன்.


90. தோரியம்

நீ மனம் வைத்தால்

அணு ஆற்றலில் இந்தியா

எங்கேயோ போய்விடும்!


91. ப்ரொடாக்டினியம்

இரு புறமும்

அணு வினை வீரர்கள்

நீயோ அவர்களின் வேகத்தடை.


92. யுரேனியம்

நீ பிளந்தால்

வாய் பிளப்போம்

எதற்கும் கட்டுப்பாட்டிலேயே பிள.


93. நெப்டியூனியம்

நன்றாக மோப்பம் பிடி

எப்போது வேண்டுமானாலும்

நியூட்ரான்கள் வரலாம்.


94. புளூட்டோனியம்

அணு ஆயுதப்

பரம பதத்தில்

பாம்புத் தலை கொண்ட ஏணி.


95. அமெரிசியம்

புகை உணரியின்

உயிர் நாடி

வாழ்க உன் ஆல்ஃபா துகள்கள்!


96. கியூரியம்

செவ்வாய் ஆராய்ச்சியில்

கண்டறிவதே

உன் காரியம்.


97. பெர்க்லியம்

வேகத் துகள் குண்டுகள்

துளைத்த போதும்

இன்னும் பருமனான பிள்ளைகள் பிறக்கும்!


98. கலிஃபோர்னியம்

போகிற போக்கில் நீ

போட்டுச் செல்லும் நியூட்ரான்கள் போதும்

அணு உலைகளைத் துவக்க!


99. ஐன்ஸ்டைனியம்

முதல் ஹைட்ரஜன்

குண்டு வெடிப்பின்

அபூர்வ பிள்ளை.


100. ஃபெர்மியம்

ஹைட்ரஜன் குண்டுவெடிப்பில்

பிறந்திட்ட கவுரவர்களில்

நீயும் ஒருவன்.


101. மெண்டலிவியம்

தனிம அட்டவணையின்

தந்தைக்கு

கடைசியில் ஒரு மரியாதை!


102. நோபெலியம்

நோபல் பரிசு

வாங்காமலேயே

அவர் பெயர் பெற்று விட்டாய்!


103. லாரென்சியம்

வெள்ளியை ஒத்த நிறமென்பார்

திடமான தன்மையென்பார்

கண்டோர் யாருமிலர்.


104. ரூதர்ஃபோர்டியம்

எத்தனையோ ஐசோடோப்புகள்

எவனுக்கும் ஆயுளில்லை

ஒரு மணி நேரத்துக்கு மேல்.


105. டியூப்னியம்

நிச்சயம் நீ இந்த வரிசையில்

இருக்க வேண்டியவன் தானா?

விவாதம் தொடரும்…


106. சீபோர்கியம்

வந்தாய்

கண்டாய்

சென்றாய்!


107. போஹ்ரியம்

இது வேதியியலா

வேகவியலா?

ஒரு நிமிட வாழ்க்கை.


108. ஹாசியம்

சிரிக்க என்ன இருக்கிறது?

புரோட்டான் மாய எண்ணும்

நியூட்ரான் மாய எண்ணும் சேரும் போது.


109. மெய்ட்னெரியம்

தகவல் தருபவர்களுக்கு

தக்க சன்மானம்

தரப்படும்!


110. டார்ம்ஸ்டாட்சியம்

கோடிக்கணக்கான

நிக்கல் அயனிகள் தேவை

ஒருமுறை உன்னைக் கொண்டு வர.


111. ரோண்ட்ஜனியம்

தங்கமோ வெள்ளியோ

இல்லை தாமிரமோ?

யாரரிவாரோ?


112. கோப்பர்னிசியம்

சூரியனைச் சுற்றி கோள்கள்

அணுக்கருவைச் சுற்றி எலெட்ரான்கள்

கோப்பர்னிக்கஸ் பெயர்தான் பொருத்தம்.


113. நிஹோனியம்

ஜப்பானின் பெயர் வைக்க

ஆன நேரம் அதிகம்

உன் அரையாகு காலத்தைக் காட்டிலும்!


114. ஃப்ளெரோவியம்

அற்ப ஆயுள் தனிமக் கடலில்

அமைதியான தீவு சேர்க்குமா

உன் ‘இரட்டை மாய’ அணு எண்?


115. மாஸ்கோவியம்

இந்த நூற்றாண்டின் முதல்

தனிமக் குழந்தை

எதிர்காலம் எப்படியோ!


116. லிவர்மோரியம்

மொத்த வாழ்நாளே

நொடியில் சிறு பங்கு

பெயரென்ன, இடமென்ன!


117. டென்னஸ்ஸைன்

தனிம வளாகத்தில்

புத்தம் புது வரவு

வாழ்த்துகிறோம்!


118. ஓகனெஸ்ஸான்

இப்போதைக்கு உன்

விட்டில் பூச்சி வாழ்வுடன்

காட்சி முடிகிறது.


துன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்


அகப்பொருள் பாடல்களில் பெரும்பாலும் தலைவனும் தலைவியும் பிரிந்திருப்பதால் நேரும் துயரம் மேலோங்கி இருக்கும். (இருவரும் இணைந்திருக்கும் போது பாடலா எழுதிக் கொண்டிருப்பார்கள்?) 
 

இவர்கள் இருவரையும் தவிர தலைவியின் நற்றாய் அல்லது தோழி இதில் இடம் பெறுவர். என்ன காரணமோ தெரியவில்லை இதில் ஒரு போதும் தோழன் அல்லது நண்பன் என்று வரக் காணோம்.

 
இவ்வாறு தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை (அப்படி எங்கேதான் சென்றிருப்பானோ?) எண்ணி எண்ணி பசலை தாக்கியது தலைவியை. பச்சிலை தெரியும். காமாலை கூட தெரியும்.  அது என்ன பசலை?  
 

காத்திருப்பு

பிரிவாற்றாமையைத் தான் அவ்வாறு குறித்தனர். இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். மா இலையின் தளிர் நிறத்தில் இருந்தவள் மதி மயங்கி, மனம் உடைந்து, வடிவிழந்து கிடக்கும் படி செய்து விடுமாம் இந்தப் பொல்லாத பசலை. 
 

இந்த ரண களத்திலும் ஒரு உவமை நயமிக்கப் பாடலைப் பாடுதல் “பசலை பாய்தல் எனும் மெய்ப்பாடு” என்று வகைப் படுத்தப் பட்டுள்ளது.  

  
 
அப்படி ஒரு பாடல் தான் குறுந்தொகையில் 27வது பாடல்:
  
 கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
  நல ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு
  எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது   
  பசலை உணீஇயர் வேண்டும்
  திதலை அல்குல் என் மாமைக் கவினே.
 
நச்சினார்க்கினியர் கூற்றுப்படி, இந்தப் பாடலை எழுதியவர் வெள்ளி வீதியார் என்ற பெண்பாற் புலவர். இன்றைய நமது தாமரை போல அக்காலத்தில் பல நாயகிகளின் உணர்வுகளுக்கு இவர் இலக்கிய வடிவம் கொடுத்திருக்க வேண்டும். கொல்லன் அழிசி என்பவர் தான் இதை எழுதினர் என்று பிற சான்றுகள் சொல்கின்றன.
 
சரி, பாடல் என்ன சொல்கிறது?
 
பசுவின் காம்பில் சுரக்கும் பால் அதன் கன்றுக்கு உரியது. ஆனால் அந்தக் கன்றினைக் காணவில்லை. சரி, பால் கறக்கும் பாத்திரத்தில் விழுந்ததா என்றால் அதுவும் இல்லை. பின்பு என்ன தான் ஆனது? கன்றும் உண்ணாது கலத்திலும் படாது அந்தப் பசுவின் பால் கீழே வழிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
 இதைப் பார்த்த தலைவி, தனது தோழியிடம் சொல்கிறாள்:
 
“இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் படாத இந்தப் பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.
 
ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது.”
 
இதை விட அழகாக யாரும் ஒரு காதலியின் உணர்வைச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.
 
காணாமல் போன அந்த தலைவனுக்கு நன்றி. அவன் இருந்திருந்தால் இந்தப் பாடல் நமக்குக் கிடைத்திருக்காது.
 
“என் சுவாசக் காற்றே” திரைப்படத்தில் ‘தீண்டாய்’ பாடலில் முதல் வரிகளாகவும் வந்திருக்காது.