கொரோனா குறள்கள்


வள்ளுவரிடமிருந்து ஓலையொன்று வந்திருக்கிறது. அவர் தந்த அதிகாரம்:

கொரோனா களைதல்

1. கைகளைக் கழுவுக கசடற கழுவாக்கால்
கைகழுவிச் செல்லும் உலகு
2. தொடுமுறை தவிர்த்து வணக்கம் உரைப்போர்
விடுமுறை விடுவார் நோய்க்கு
3. நுண்ணுயிர்க் கிருமி பேராயுதம் போலே
மண்ணுயிர்க் கழிவைத் தரும்
4. பெற்றவர் பிறந்தவர் உற்றவர் ஆகினும்
சற்றவர் தூரம் நன்று
5. வீட்டிலும் தெருவிலும் ஊரிலும் தூய்மை
நாட்டிலும் நோய் நீக்கும்
6. தும்மலும் சளியும் வருகையில் வேண்டும்
நம்மிடம் கைக் குட்டை
7. காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல்
நோய்த் தொற்று அறிகுறியாம்
8. வதந்தியும் பதற்றமும் நோயினும் விரைவில்
சுதந்திரம் பறித்து விடும்
9. மருத்துவர் செவிலியர் துப்புர வாளர்
திருத்தொழில் போற்றிடு வோம்
10. ஒன்றென யாவரும் உழைத்திட நோயை
வென்றிட லாம் வாரீர்

சாணக்கியர் vs. திருவள்ளுவர் – ஊழலை ஒழிக்க யார் வழி சிறந்தது?


முதலில் ஒரு உண்மையைச் சொல்லி விடுகிறேன். அர்த்தசாஸ்திரம், திருக்குறள் இரண்டையுமே நான் முழுவதுமாகப் படித்ததில்லை. அவ்வளவு ஏன், அர்த்தசாஸ்திரத்தைப் படித்ததே இல்லை. திருக்குறளைப் பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் கொஞ்சமும், சாலமன் பாப்பையா வாயிலாகக் கொஞ்சமும், அரசுப் பேருந்துகளில் கொஞ்சமும் படித்ததோடு சரி. சில மாதங்களுக்கு முன் நான் படித்த “Kautilya versus Thiruvalluvar. Inspiration from Indian Ancient Classics for Ethics in Governance and Management” என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து என் புரிதலையும் சில சொந்த கருத்துக்களையும் இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

என்ன ஒப்பீடு இது – அர்த்தசாஸ்திரமும் திருக்குறளும்? அர்த்தசாஸ்திரம் கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சித்தாந்தம். திருக்குறள் கி.மு. 31 வாக்கில் (ட்விட்டர் வரும் முன்பே) எழுதப்பட்ட முப்பால் (அறம், பொருள், இன்பம்) விளக்கும் வள்ளுவ ட்வீட்டுகள். அடிப்படையில் இவ்விரண்டு நூல்களுமே சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல கருத்துக்களை முன்வைத்தாலும், அதை அடைவதற்கு முற்றிலும் மாறுபட்ட வழிகளைக் காட்டுகின்றன.

மகப்பேறு முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லாவற்றிலும் ஊழல் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில் காந்த்தியக் கொள்கையே காற்றில் பறந்து விட்டது. இதில் சாணக்கியனாவது வள்ளுவனாவது என்று சொல்லலாம். ஆனால் மற்ற எந்தக் காலத்தையும் விட இப்போது தான் இவர்களைப் படிக்க வேண்டிய தேவை அதிகம். மாட்டுத் தீவனம், நிலக்கரி, பீரங்கி, வானூர்தி, அலைக்கற்றை, சூரிய ஒளித்தகடு என்று அண்டவெளியில் வாய்ப்பு கிடைத்த பொருள்களில் எல்லாம் ஊழல் செய்கிறார்கள் என்று அறிகிறோம். இதற்கான அவசியம் என்ன? எதனால் மனிதன் ஊழல் செய்கிறான்? பெரும் பதவியில் இருப்பவர்களின் ஊழல்களைப் பார்த்துக் காரித் துப்புகிறோம். சாமாணியர்கள் நாம் மட்டும் யோக்கியர்களா? வாய்ப்பு கிடைத்தால்? அப்படியானால் ஒழுக்கத்தில் எங்கேயோ ஓட்டை இருக்கிறதாகத் தானே அர்த்தம்?

அர்த்தசாஸ்திரம்

ஷாமா ஷாஸ்திரி என்பவரால் 1908-இல் கண்டுபிடிக்கப்பட்ட அர்த்தசாஸ்திரம், அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அடங்கிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. சந்திரகுப்த மௌரியரின் பிரதான தத்துவ ஞானியான சாணக்கியர் அரசாங்கத்தின் கடமைகளையும் சமுதாயத்தின் சாதி அடிப்படையிலான (வர்ண சாஸ்திரம்) வகைப்படுத்தலையும் முன்னிலைப் படுத்துகிறார். பெரும்பாலும் தன் நாட்டின் செல்வங்களை எப்படிப் பெருக்கியும் பாதுகாத்தும் வர வேண்டும் என்று அரசனுக்குக் கூறும் அறிவுரைகளாகவே இந்த நூல் அமைகிறது. தொழிலாளர் விதிமுறைகள், வரி விதிப்பு, உற்பத்தி, பகிர்வு, வணிகம், நுகர்வு ஆகியவற்றின் நெறிமுறைகள் என்று இந்தக் காலத்திலும் நாம் ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் சமாசாரங்களை அப்போதே வரையறுத்திருக்கிறார். இவரது சிந்தனைகள் சமகால கிரேக்க அறிஞர்களின் சிந்தனைகளுடன் ஒப்பிடப் படுகின்றன. ஒருசில வேறுபாடுகளும் உண்டு. கிரேக்கர்கள் குறைந்த ஊதியத்தில் வேலைகளை முடிக்க அடிமைகளைப் பயன்படுத்தினர். நம் நாட்டிலோ சாதிவாரியான வேலைப் பகிர்வு மூலம் இதனைச் சாதித்துக் கொண்டார்கள். இன்றைக்கு இட ஒதுக்கீட்டை விமர்சிப்பவர்கள் அன்றைக்கு ‘வேலை ஒதுக்கீட்டால்’ ஆதாயம் அடைந்தவர்கள். காலச் சக்கரம் என்று இதைத்தான் சொல்கிறார்கள் போலும்!

இப்படியாக வேலைகளைப் பிரித்த பின்னர், சம்பளத்தை எப்படிப் பிரிப்பது? சாணக்கியரின் கணக்குப்படி அரசு அலுவலகங்களில் ஒரு எழுத்தர் (clerk) வாங்குவதை விட எல்லோரினும் மூத்த அதிகார் 48 மடங்கு அதிக ஊதியம் பெற வேண்டும் (பட்டியல் 1-ஐக் காண்க). முதல் அமைச்சர் 96 மடங்கு அதிகம் ஊதியம் பெற வேண்டும் (1:96 என்கிற விகிதம்). ஒவ்வொரு நிலை ஊழியரின் சம்பளத்தையும் துல்லியமாகப் பட்டியலிடுகிறார். இதை இன்றைய ஊதிய கமிஷன் காலத்துக்கு எப்படி மாற்றிக் கணக்கிடுவது? கினி குணகம் (Gini coefficient) என்ற எண்ணை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். சாணக்கியர் கால விலைவாசி, இன்றைய விலைவாசி, இன்ன பிற காரணிகளையும் ஒப்பிட்டு நமது ஆறாவது ஊதியக் குழுவின் (6th Pay Commission) பரிந்துரையின் அடிப்படையில் பார்த்தால் எழுத்தர்:முதல் அமைச்சர் ஊதிய விகிதம் வெறும் 1:12 என்று வருகிறது. அதாவது குமாஸ்தாவின் சம்பளம் 10,000 ரூபாய் என்றால் முதல் அமைச்சரின் சம்பளம் 1,20,000 ரூபாய். அர்த்தசாஸ்திரக் கணக்குப்படி இது 4,20,000 ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.

chanakya_pay1

அடுத்தது, ஒரே பணியில் பல்வேறு நிலைகள் இருக்கும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எடுத்துக் கொள்வோம். இவர்களின் பதவியில் 8 நிலைகள் (Levels) இருக்கின்றன (பட்டியல் 2).  முதல் இரண்டு நிலைகளில் சாணக்கியர் சொன்னதை விட அதிக ஊதியம் பெறுகின்றனர். ஆனால் அடுத்த நிலைகளில் இவர்களின் ஊதியம் பெரிய அளவில் உயர்த்தப் படுவதில்லை. 8-ஆம் நிலைக்கு வரும்போது சாணக்கியர் பரிந்துரைத்ததில் 13% மட்டுமே பெறுகின்றனர்.

chanakya_pay

இதனால், மூத்த அதிகாரிகள் சலிப்பும் தாழ்வு மனப்பான்மையும் கொள்கின்றனர். என்ன உழைத்தாலும் பெரிய அனுகூலம் இல்லை. ஒன்று வேலை செய்யாமல் ஒப்பேற்றி விடலாம். அல்லது தனது பணி மூப்பைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் சம்பாதிக்கலாம். இரண்டும் இன்றி செவ்வனே பணிபுரிபவர்களுக்கு இருக்கவே இருக்கிறது இளிச்சவாயன் பட்டம். எல்லாத் துறைகளிலும் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகளே. (ஏழாவது ஊதியக் குழுவில் வாரிக் கொடுத்த போதிலும் வாங்கி வாங்கிச் சிவந்த கைகள் இன்னும் நீட்டியபடியே தான் இருக்கின்றன.)

திருக்குறள்

வடக்கே சாணக்கியர் செல்வங்களைப் பட்டியலிட்டுப் பகிர்ந்தளிக்கச் செய்தார். மனிதர்கள் நெறிப்படுத்தப் பட வேண்டியவர்கள். ஒரு சீரான அமைப்பின் (system) மூலமே இது சாத்தியம் என்பது அவரது கொள்கை. தெற்கே திருவள்ளுவரோ முற்றிலும் வேறொரு பாதையை வகுக்கிறார். இவரது சிந்தனைப்படி அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள்; ஆக்கபூர்வமானவர்கள். தனி மனித ஒழுக்கத்தின் மூலம் சமூக அவலங்கள் தடுக்கப் படும். அத்தகைய நிலையில் எந்த ஒரு system-மும் தேவைப்படாது என்பதே இவரின் சித்தாந்த்தம். அதே வேளையில் அர்த்தசாஸ்திரத்தை ஏற்றுக்கொள்ளாத பௌத்த, ஜைன சமயங்களைப் போல் முற்றும் துறந்த நிலையையும் இவர் முன்னிறுத்தவில்லை. சமுதாய வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அதை அவரவர் ஒழுக்கத்துடனும் திறமையுடனும் செய்து வந்தால் போதும் என்று தன் குறள்களால் விளக்குகிறார். அதிகாரம் 76-இல் “செல்வம் தேவையானதே. நல்வழியில் ஈட்டிய செல்வம் மகிழ்ச்சியையும் ஒழுக்கத்தையும் தரும். இத்தகைய செல்வம் உடையவரை எல்லோரும் போற்றுவர். பகைவரை வெல்ல அதனினும் பெரிய ஆயுதம் கிடையாது” என்கிறார்.

செல்வம் இருந்தால் போதுமா? அதை சும்மா வைத்திருந்தால் யாருக்கு என்ன பயன், என்று 101-ஆம் அதிகாரத்தில் வினவுகிறார். இத்தகைய கருத்துக்கள் ருஸோ, ஆடம் ஸ்மித் போன்ற 18-ஆம் நூற்றாண்டு அறிஞர்களின் கருத்துக்களுடன் ஒத்துப்போகிறது. சாணக்கியரைப் போல் அல்லாது, அரசின் தலையீடு பாதுகாப்பு, பொதுப்பணி ஆகியவற்றில் தான் இருக்க வேண்டும் என்றும் உழவுத் தொழிலே முதன்மையானது என்றும் கூறுகிறார். சமூகத்தில் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று என்கிற ரீதியில், அரசன் ஒழுக்கத்துடன் செயல்பட்டால் அது குடிகளையும் ஈர்த்து நல்லாட்சி அமைய வழிவகுக்கும்; மழையும் பயிர் விளைச்சலும் கூட இதைப் பொறுத்தே இருக்கும் என்பது இவரது கோட்பாடு.

மொத்தத்தில் தனி மனித மனம் சுதந்திரமாக, வெறுப்புகளின்றி இருக்கும் பட்சத்தில் அற வழியில் ஈட்டிய பொருள் இன்பத்தைத் தரும். மோட்சம் என்பது வள்ளுவரைப் பொறுத்த வரையில் கானல் நீரே. பற்றறுத்து மோட்சம் பெறும் அவசியம் நமக்கில்லை. உழைப்பினால் வரும் செல்வத்தைக் கொண்டு நல்லன செய்தால் போதும் என்கிறார். அதனால் தான் அறம், பொருள், இன்பம் என்று முப்பாலுடன் நிறுத்திக் கொண்டு வீடு (மோட்சம்) பற்றி அவர் வாய் திறக்கவேயில்லை போலும்.

சாணக்கியர் vs. திருவள்ளுவர்

அறிஞர் ருஸோ கூறியது போல ஒவ்வொரு சமூகமும் தனக்கு நல்ல மனிதர்கள் வேண்டுமா அல்லது நல்ல குடிமக்கள் வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு சாணக்கியர் கூறும் விடை ‘நல்ல குடிமக்களே’ என்பது. வள்ளுவரோ ‘நல்ல மனிதர்கள்’ என்பதில் நம்பிக்கை வைக்கிறார். அந்தோ! நமது நாட்டு நலத் திட்டங்களில் இந்த இரண்டயுமே நாம் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

மேற்கோள்:

De Vylder, Gerrit, and Zubin Mulla. “Kautilya versus Thiruvalluvar. Inspiration from Indian Ancient Classics for Ethics in Governance and Management.” Globalization for the Common Good Initiative Journal (GCGI Journal). Vol. 10. No. Fall 2014. Globalization for the Common Good Initiative, 2014.

Government of India (2008). Report of the Sixth Central Pay Commission. Retrieved on September 21, 2012 from http://pib.nic.in/archieve/others/2008/mar/6th_payreport.pdf

Bloom, M. C. (1999). The performance effects of pay dispersion on individuals and organizations. Academy of Management Journal, 42, 25-40.