செயற்கை நுண்ணறிவு


கணினியில் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வைத்திருக்கிறேன். அவற்றில் ஏதாவது ஒரு புகைப்படத்தைத் தேட வேண்டும் என்றால் அதை எடுத்த அல்லது கணிப்பொறியில் பதித்த நாள் நினைவுக்கு வர வேண்டும். அல்லது அந்தப் படத்தை எடுத்த இடத்துக்கு எப்போது போனோம் என்ற விவரமோ, படத்துக்கு நான் இட்ட கோப்புப் பெயரோ தெரிய வேண்டும். ஞாபக மறதி இருப்பதையே அடிக்கடி மறந்து விடுவதால் இவை எல்லாம் கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாகவே முடிகின்றன. ஆனால் கணிப்பொறிகள் நாளுக்கு நாள் புதிய திறமைகளை எங்கிருந்தோ பெற்றுக் கொண்டிருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில் படத்தைத் தேட ‘கோபுரம்’ என்ற பொருள் படும்படி ‘tower’ என்று என் கணினியில் தேடினால் கோபுர வடிவம் உள்ள அனைத்து புகைப்படங்களும் வரிசையாய் காட்டப்படுகின்றன. அப்படியானால் ‘கோபுரம்’ என்ற வடிவத்தை தான் காணும் ஒன்றுகளில் இருந்த்தும் சுழியங்களில் இருந்தும் இந்தக் கணினி எப்படியோ அடையாளம் கண்டு தரம் பிரித்து நான் தேடிய தகவலை மட்டும் எனக்குத் தருகிறது. ‘boat’, ‘tree’, ‘stadium’ போன்ற திறவுச் சொற்களும் படகு, மரங்கள் உள்ள புகைப்படங்களை மட்டும் காண்பித்தன.

stadium

‘Stadium’ என்ற குறி சொல் கொண்டு தேடிய போது கிடைத்த படங்கள் (குறிப்பு: இது ‘கூகுள்’ போன்ற இணைய தேடல் அல்ல. இந்த படங்களின் கோப்புப் பெயர்களிலும் (file name) ‘stadium’ என்ற சொல் இல்லை).

சற்று நிமிர்ந்து உட்கார்ந்து ‘horse’ என்று உள்ளீடு தந்ததும் குதிரை மட்டுமல்லாது ஆட்டுக்குட்டி இருக்கும் ஒரு புகைப்படத்தயும் குதிரை சிலை இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்தே காண்பித்தது கணினி. “நீ இன்னும் வளரணும் தம்பீ” என்று சொல்லி கணினியைச் சாத்தினேன். “அது சரி, இவ்வளவு அறிவு கூட இதற்கு இருந்ததில்லையே! இப்போது எப்படி?” என்று யோசித்தால் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அல்லவா இது? இயந்திர மனிதர்கள், தானியக்கி கார்கள், காலநிலை கணிப்புகள் என்று ‘பெரிய’ செயல்பாடுகளில் இருந்த இந்த செயற்கை நுண்ணறிவு இன்று மடி கணினியிலும் திறன்பேசிகளிலும் தடம் பதித்து விட்டது. விரல் வருடல்களில் வித்தைகள் செய்யும் இந்த செயலிகளின் பின்னணியில் உணர்தல், கணித்தல், அறிவுறுத்தல், அறிவித்தல், சூழ்நிலை குறித்த பிரக்ஜை, கற்றல், கற்றவற்றைக் கொண்டு புதுப்பித்தல், தானியக்கவியல் என்று பல பரிமாணங்கள் இருப்பதைக் காணலாம்.

முதலில் கணினி எப்படி ‘பார்க்கிறது’? ஒரு நாய்க்குட்டியின் புகைப்படம் கணினியின் ‘கண்களுக்கு’ இப்படி தெரிகிறது:

dogseenas

கணினியின் பார்வையில் நாய்க்குட்டி

இத்தகைய பார்வை எல்லா நேரத்திலும் கை கொடுப்பதில்லை. நாய்க்குட்டியின் படத்தில் பின்புலம் மாறுகையில் மேற்கண்ட அணியில் (matrix) மாற்றம் ஏற்படுகிறது. இந்த ‘குறைபாடு’ தான் கழுதையையும் குதிரையாகக் காட்டிக் குழப்புகிறது.

3457.567 x 98431.879 =  என்று தட்டியதும் கணப்பொழுதில் விடை தரும் கணினி, கொஞ்சம் ஏமாந்தால் விஸ்வனாதன் ஆனந்த்தையே தோற்கடிக்கும் கணினி, ‘பார்த்தல்’ என்கிற ஒரு ‘தன்னிச்சையான’ செயலில் இப்படி சொதப்புவது ஏன்? இதை மோராவெக் முரண்பாடு (moravec’s paradox) என்கிறார்கள். அதாவது நம்மாலாகாத செயல்கள் பலவும் கணினிக்கு அத்துப்படி. ஆனால் ஒரு குழந்தையால் முடிகிற வேலைகள் கூட கணினிக்கு மிகக் கடினம். இதற்கு மோராவெக் சொல்லும் காரணம்: மனிதர்கள் பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியுற்று சிந்தனை, மொழி போன்றவற்றில் ஆளுமை பெற்றிருக்கிறோம் . கணிப்பொறிகள் ‘நேற்று’ பிறந்த குழந்தைகள் அல்லவா?

இப்போதுதான் நமது மூளை செல்களான நியூரான்களைப் போன்றே கணினி நியூரான் வலையமைப்புகளை (computer neural networks) உருவாக்கத் தொடங்கியுள்ளோம். பார்வையின் மூலம் கிடைக்கும் உள்ளீடுகளை நமது நியூரான்கள் நிர்வகிக்கும் அளவுக்கு இந்த செயற்கை நியூரான்களால் செய்ய முடியுமா என்பது இப்போதைக்குக் கேள்விக்குறிதான். யார் கண்டது? அடுத்த முறை மடிக்கணினியைத் திறக்கும் போது வேறு பல அதிர்ச்சிகள் காத்திருக்கலாம்.

Advertisements

பொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை


தனிமங்களை அவற்றின் குணங்களுக்கேற்ப வரிசைப்படுத்திய ‘தனிம அட்டவணை’ (Periodic Table of Elements) ஒன்றை நம்மில் பலரும் பார்த்திருப்போம். அதைப் பொன்னியின் செல்வன் கதை மாந்தரின் தன்மைக்கேற்ப மாற்றினால் யார் யார் எந்தெந்த இடத்தைப் பிடிப்பார்கள் என்று மல்லாக்கப் படுத்து யோசித்ததன் விளைவு இது. என் எண்ணப்படி முதலில் 10 கதைமாந்தர்களை இந்த கட்டங்களில் திணித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.

ps_periodic_table

பொன்னியின் செல்வன் – தனிம(னித) அட்டவணை

1. வல்லவரையன் ஹைட்ரோஜன் வந்தியத்தேவன்: ‘நம் கதையின் நாயகன்’ என்று பல இடங்களில் கல்கி குறிப்பிடுவது வந்தியத்தேவனைத் தான். அருள்மொழிவர்மனை அல்ல.  ஹைட்ரோஜன் வாயுவைப் போலவே துறுதுறுவென்றும் வீரியத்துடனும் பல சாகசங்களைப் புரிகிறான். நிலவறை உள்ளிட்ட மர்மங்கள் நிறைந்த இடங்களுக்கும் துணிந்து (அல்லது சூழ்நிலையால்) சென்று உண்மைகளை அறிந்து நிலைமைக்கு ஏற்றவாறு செயல்படுகிறான். கதையின் நாயகன் என்பதாலும் ஹைட்ரோஜன் போல சுறுசுறுப்பானவன் என்பதாலும் இந்த முதலிடம் வந்தியத்தேவனுக்குத்தான் சாலப் பொருந்தும் அல்லவா?

2. திருமலை என்கிற ஆழ்வார்க்கடியான்: ஹீலியம் ஒரு மெல்லிய வாயு. திரவ நிலையில் தன் சுற்றுப்புறத்தைக் குளுமையாக மாற்றக்கூடியது (-269 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலேயே கொதித்து விடுவதால்). அறிவியல் கருவிகளில் கசிவு (Leak) இருக்கிறதா என்று சோதிக்க ஹீலியத்தையே பயன்படுத்துகின்றனர் – சிறு துவாரங்களிலும் எளிதில் இது புகக்கூடியது என்பதால். இப்போது ஆழ்வார்க்கடியானின் செயல்பாடுகளை நினைவு படுத்திப் பாருங்கள். அவன் நிச்சயம் ஹீலியம் தான் அல்லவா? காற்று புகாத இடங்களிலும் நுழைந்து விடுபவன். ரகசிய ஆலோசனைக் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் சாகசம் பல புரிந்து அங்கு வந்து சேரும் வந்தியத்தேவனுக்கும் முன்னமேயே அங்கு எப்படித்தான் இவன் நிற்பானோ! அது அவன் வணங்கும் திருமாலுக்குத்தான் வெளிச்சம். வந்தியத்தேவன் கிளர்ச்சியுறும் போதெல்லாம் அவனை விவேகமாய் செயல்பட வைத்து அவனைக் ‘கூலாக’ இருக்க வைப்பதால் இவன் ஹீலியம்.

3. வானதி – லித்தியம்: மிகவும் உணர்ச்சிவயப்படக் கூடியவள். அருகே குந்தவை இல்லையேல் எளிதில் துவண்டு விடுவாள். தொட்டதற்கெல்லாம் மயங்கி விழுந்து விடுவாள் (அருள்மொழிவர்மனை மயக்கி விட்டாள் என்பது வேறு விசயம்). லித்தியமும் இவளைப் போலத்தான். எளிதில் காற்றுடன் வினைபுரிந்து லித்தியம் ஆக்சைடாக மாறி, கருத்துப்போய் துவண்டு விடும் தன்மையது.  ஆனால் ராஜராஜன் என்ற பேட்டரியில் லித்தியம் மிக மிக முக்கியம் (லித்தியம் பேட்டரிகளைப் பற்றி இங்கே பார்க்கவும்).

6. பொன்னியின் கார்பன் செல்வன்: மாறுவேட மன்னன்; கரிம வேதியியலில் கார்பன் போல இந்த கதையின் வேதியியலுக்கு இன்றியமையாதவன். கரியாகவும் வைரமாகவும் கிராஃபைட்டாகவும் தனிம புறவேற்றுரு (allotropes) பலவும் கொண்ட கார்பனைப் போலவே யானைப்பாகனாகவும் ஈழத்திலிருந்து வந்த வியாபாரியாகவும் இளவரசனாகவும் பின்னர் தியாக சிகரமாகவும் வலம் வருகிறான். புவியில் கார்பன் சுழற்சியால் (carbon cycle) மொத்த கார்பன் அளவு மாறாதிருப்பது போல் கதையெங்கும் நிறைந்து நிற்கிறான். தன்னுடன் பழகும் எவரையும் எளிதில் வசீகரித்து விடுகிறான், ஏறத்தாழ எல்லா தனிமங்களுடனும் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் கார்பனைப் போலவே. டீசல், பெட்ரோல் முதலிய பெட்ரோலியப் பொருட்கள், நெகிழி, இழைகள் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் உள்ள நீர்க்கரிமங்கள் (hydrocarbons) போல பொன்னியின் கார்பன் செல்வனும் ஹைட்ரோஜன் வந்த்தியத்தேவனும் சேர்ந்து பல நன்மைகளயும் சாகசங்களையும் புரிகின்றனர்.

22. டைட்டானியம் பூங்குழலி: உறுதியானவள்; ஆணவமற்றவள் – எஃகைப் போன்ற உறுதி இருப்பினும் அடர்த்தி குறைந்த டைட்டானியம் போல. இவளைச் சமுத்திரக் குமாரி என்கிறார் கல்கி. கடல் நீரின் உப்புத் தன்மையால் கப்பலின் வெளிப்புறம் அரிக்கப் படாமல் இருக்க டைட்டானியம் பயன்படுவதில் வியப்பொன்றும் இல்லை அல்லவா? சூரியனின் புற ஊதா கதிர்களிலிருந்து டைட்டானியம் ஆக்சைடு நம் சருமத்தைக் காப்பது போல் அருள்மொழிவர்மனைக் கடலிலிருந்து காப்பாற்றி சூடாமணி விஹாரத்தில் சேர்க்கிறாள். டைட்டானியப் பெண் தான்.

25,26. பழுவேட்டரையர்கள்: உதாரண சகோதரர்கள். சின்னவர் மாங்கனீஸ்; பெரியவர் இரும்பு.அதனால் இணைபிரியாதவர்கள். காந்தமும் இரும்பும் போல.

79. குந்தவை தங்கப் பிராட்டி: Noble metal என்பதற்கேற்ப தங்கமான குணமுடையவள். சுந்தர சோழரின் உடல் இயலாமையிலும் ஆதித்த கரிகாலனின் நிலையில்லாமையிலும் அருள்மொழிவர்மனின் தயக்கத்திலும், அரச நடவடிக்கைகளின் மீது பழுவேட்டரையர்களின் உறுதியான பிடியிலும், நந்தினியின் சூழ்ச்சிகளிலும் நாட்டை நிலை குலையாது நடத்திச் செல்ல பல செயல்களப் புரிகிறாள். நல்லவர்களை முற்றிலும் நம்புகிறாள். தன்னை நம்புபவர்களிடம் 24 கேரட் தூய்மையான அன்பைப் பொழிகிறாள். சரியான நபர்களிடம் சரியான வேலையைக் கொடுத்து காரியங்களைச் சாதிக்கிறாள். அசல் சோழ ரத்தம்.

80. ஆதித்த பாதரச கரிகாலன்: எளிதில் கணிக்க முடியாத, கணப்பொழுதில் மன நிலை மாறுகின்ற நபர்களை ஆங்கிலத்தில் mercurial என்கிறார்கள். இது ஆதித்த கரிகாலனை விட யாருக்கும் கண்டிப்பாகப் பொருந்தாது. புரோமின் தவிர திரவ நிலையில் இருக்கும் தனிமம் பாதரசம் (mercury) தான். இதில் வியப்பு என்னவெனில் ஒரு உலோகம் இயல்பான வெப்ப நிலையில் திரவ நிலையில் இருப்பது தான். பாதரசம் விஷத்தன்மை கொண்டது. வார்த்தைகளால் தன்னிடம் பரிவாகப் பேசுபவர்களிடமும் விஷ அம்புகளை வீசும் ஆதித்தனும் ஒரு வகையில் அப்படித்தான். பாதரசம் தங்கத்தையும் கரைத்து விடும். அதனால் தானோ என்னவோ குந்தவை அருள்மொழிவர்மனிடம் காட்டிய பாசத்தை இவனிடம் காட்டவில்லை.

92. யுரேனியம் நந்தினி: இயற்கையில் 99% யுரேனியம்-238, 1% யுரேனியம்-235. இவளோ 99% அழகு; 1% சூழ்ச்சி. அந்த 1% யுரேனியம்-235 தான் இயற்கையில் அணு பிளவுறும் தன்மை கொண்டது. அதே போல் தன் அழகாலும் நளினத்தாலும் பிறரை ஆட்கொண்டு (வந்தியத்தேவனே பல இடங்களில் வாய் பிளக்கிறான்) தன் 1% சூழ்ச்சி வலையில் விழச் செய்கிறாள். தன்னையே பிளந்து கொண்டு பேராற்றலை வெளியிடும் யுரேனியம் அணுவைப் போல் இவளும் வயது முதிர்ந்த பழுவேட்டரையரை மணந்து சோழ தேசத்தைப் பழிதீர்க்கப் பல அரசியல் பிளவுகளை அரங்கேற்றுகிறாள். இத்தனை ஆண்டுகள் கழிந்தும் தமிழ் படிக்கும் உலகெங்கும் உலா வரும் இவளது கதிர்வீச்சு இல்லையெனில் பொன்னியின் செல்வன் என்றோ தன் பொலிவை இழந்திருக்கும்.

உங்கள் கருத்துக்களைச் சொல்ல கீழே உள்ள பின்னூட்டத்தில் (Comments) எழுதவும். அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

நண்பர்கள்


“இதைப் பாரேன், அமெரிக்காவுல ஒரு பூனைய வெச்சு ஒரு குட்டிப் பையன் செய்யற குறும்பை!”

“இந்த மீம்ஸ் செம கலக்கல்டா. சி.எம்-ஐயே சூப்பரா கலாய்ச்சிருக்கானுங்க! கவுண்டமணி டயலாக் எல்லாத்துக்குமே செட் ஆகுது இல்ல?”

“தலைவர் நியூ லுக் பாத்தியா?

“காவிரி பிரச்சனையைத் தீர்க்க இவர் சொல்ற ஐடியா நல்லா இருக்கு பாரு”

“ஜல்லிக்கட்டை நடத்த விடாததுக்குப் பின்னாடி ஒரு எகனாமிக் கான்ஸ்பிரஸி இருக்கு”

“மான்சாண்டோ கம்பெனிக்காரனை இந்தியாவை விட்டு துரத்துனாத் தான் விவசாயம் உருப்படும்”

“என் கஸின் ஒரு ஃபேஷன் ஷோரூம் ஆரம்பிச்சிருக்கா. ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லு”

“ராபின் வில்லியம்ஸ் ஸ்டேண்ட்-அப் காமெடிய அடிச்சுக்கவே முடியாது”

“இந்த ட்யூன் மடோனா ஆல்பம்ல இருந்து அப்படியே சுட்டது. கூகுள்ல தமிழ் காப்பிகேட்னு அடிச்சுப் பாரு.”

“இது பைசைக்கிள் தீவ்ஸ்ங்கற படத்தோட காப்பி”

“நானும் பின்க்கியும் டான்ஸானியா போனப்போ எடுத்த ஃபோட்டோ”

“லூசு, செல்ஃபின்னா மாஸ்டர்பேஷன் பண்றவன் இல்ல, ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்காதே”

சிரிக்கவும் சிந்திக்கவும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் வேறங்கும் போக வேண்டியதில்லை. நண்பர்களுடன் பேசினால் போதும். அதிலும் விமல் ஒருவன் போதும். எகனாமிஸ்ட் முதல் இந்த வார ஆனந்த விகடன் வரை எல்லாவற்றையும் படித்து வந்து அலசி எடுப்பான். பாலஸ்தீன பிரச்சனை எப்படி ஆரம்பித்தது என்றும் விவரிப்பான். பால் பாக்கெட் காலி ஆனதும் எங்கே போய் என்ன ஆகிறது என்றும் தெரிவிப்பான். ராஜேஷ் அப்படி இல்லை. இதெல்லாம் மொக்கை என்பான். யூ டியூப் டிரெண்ட் பற்றி அவனிடம் தான் கேட்க வேண்டும். வைரல் விடியோ என்பது வைரஸ் சமாசாரம் இல்லை, அது வேகமாகப் புகழ்பெற்றுக் கொண்டிருக்கும் விடியோ என்று அவன் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். பூக்கள் மற்றும் குழந்தைகளின் ஃபோட்டோக்களைத் தேடிக் கண்டுபிடித்து வருவான் அருள். பெண்களுக்கு, குறிப்பாக மோனிகாவுக்கு அவை ரொம்பப் பிடிக்கும். அருளுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்.

சுமித்ரா இணையத்தில் பல ரெசிபிக்களை அலசி ஆராய்ந்து புதிதாக சமைத்த மெக்சிகன் பர்கர்களின் மேல் இதய வடிவில் தக்காள் சட்னி ஊற்றி, சுற்றிலும் கொத்தமல்லி தழைகளைப் பரப்பி நடுவில் ரெண்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பிட்டு வைத்து ஃபோட்டோ எடுத்துக் காட்டுவாள். பதிலுக்கு நானே யோசித்துத் தயிர்வடைக்கு ஒரு ரெசிபி சொன்னால் “வெரி ஃபன்னி” என்பார்கள் அவளும் அவள் தோழிகளும். மெஷின் லேர்னிங், க்லவுட் கம்ப்யூட்டிங் என்று என் மரமண்டைக்கு எட்டாத எதையெதையோ பற்றி லெக்சர் அடிப்பான் வசந்த். இந்திய ராணுவத்தில் ஆஃபீஸர் வேலை முதல் இஸ்ரோவில் சயிண்டிஸ்ட் வேலை வரை எல்லா வேலைவாய்ப்புச் செய்திகளையும் தொகுத்துத் தருவான் முருகன். தமிழன் தான் உலகிலேயே உத்தமன் என்று அதற்கான சான்றுகளைப் புறனானூற்றில் இருந்தும் புத்தகக் குறிப்புகளில் இருந்தும் எடுத்துக் காட்டிப் புளகாங்கிதம் அடைவான் சிவனேசன். தமிழர்கள் மட்டுமே பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களை இட்டுக் கொள்வதில்லை என்று பெருமை பட்டுக் கொள்ளும் அதே வேளை தமிழர்கள் சாதிக்குப் பின்னால் போய்க் கொண்டிருப்பதையும் தம் குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை வைத்துப் பூரிப்படைவதையும் கண்டு மனம் வருந்துவான். இளையராஜாதாசனாகவே வாழ்பவன் மணி.

ஷேக்ஸ்பியர் வரிகளை என் கையெழுத்தில் எழுதிக் காட்டிய போது “சூப்பரா எழுதற” என்ற தோழிகள் கூட, தமிழில் ப்ளாக் எழுதறேன் என்றதும் “இது நீயே எழுதினதா இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக் குடுத்ததா” என்கிற மாதிரி பார்த்தார்கள். பொன்னியின் செல்வன் ஹீரோ அருள்மொழி வர்மனா வந்தியத்தேவனா என்று பட்டி மன்றம் வைத்து, தீர்ப்பை ஒவ்வொரு முறையும் தானே மாற்றி வழங்குவான் ரகு. முடிவில்லாத சிறுகதையை வெர்டிகலாக எழுதி கவிதையாக மாற்றி விடுவாள் அபிராமி. இங்கிலிஷ்காரர்களே மறந்து போன வார்த்தையை எல்லாம் போட்டு அதைப் புகழ்ந்து தள்ளுவார்கள் ரோஷினியும் கார்த்திக்கும். எந்த பியரில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கிறது, ரம்முக்கும் விஸ்கிக்கும் என்ன வித்தியாசம் என்பதை எல்லாம் விச்சுவைத் தான் கேட்க வேண்டும். தியேட்டரில் இருந்து கொண்டே ரிவ்யூ எழுதி அனுப்புவான் ஆல்பர்ட். படமே பார்க்காத ஆனந்த், அந்த ரிவ்யூவை விமர்சித்து சந்தோசப் பட்டுக் கொள்வான். இவர்களும் இன்ன பிற நண்பர்களும் இருபத்தி நாலு மணி நேரமும் ஓடும் எண்டர்டெய்ன்மெண்ட் சேனலாக என்னைப் பரவசப் படுத்துவார்கள். நானும் அவ்வப்போது அவர்களின் ஒரு சேனலாக வலம் வருவேன். ஆனால் என்ன வேலை இருந்தாலும் வருடம் தவறாமல் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவார்கள். நான் நன்றி சொல்லா விட்டாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். மூன்று வருடங்களுக்கு முன் நான் இறந்து போனது கூட அவர்ளுக்குத் தெரியாது.

எல்லோரும் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

நியூட்ரினோ ஆய்வும் நமது தலையெழுத்தும்


தண்ணீர் வருகிறதோ இல்லையோ, தமிழ் நாட்டுக்குப் பல பெரிய திட்டங்கள் வந்த வண்ணம் உள்ளன. சேது சமுத்திரம், கூடங்குளம், டெல்டா பகுதி மீத்தேன் எடுப்பு, இப்போது இந்த நியூட்ரினோ ஆய்வகம் என்று வடக்கில் பல பெரிய மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் நமக்கு பெரும்பாலும் பாதகமாகவே உள்ளன.

சினிமா பிரபலங்கள் நிதி திரட்ட கிரிக்கெட் ஆடுவது, படமே பார்க்காதவர்கள் விமர்சனம் எழுதுவது, ‘பீல்டிங்கா பவுலிங்கா’ என்று கேட்பவர்கள் கிரிக்கெட் தேர்வுக் குழுவில் இருப்பது, கொலை வழக்கில் இருப்பவர்கள் சட்டம் இயற்றுவது, இது போல இன்னும் பல தொடர்பிலிகள் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. அதனால் செழிப்பான விவசாய நிலத்தில் குழிகள் பறித்து வாயுக்கள் எடுப்பது, காடுகளை அழித்து கட்டிடங்கள் அடுக்குவது என்பன எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

முடிவுரைக்கு முந்திக் கொள்வதற்குள் இந்த நியூட்ரினோ ஆய்வகம் பற்றி சில விவரங்களைப் பார்ப்போம்.

 • மற்ற ஆய்வகங்களைப் போலன்றி இதன் பெரும் பகுதி நிலத்தின் அடியில் அமையும்.
 • ஏன் நிலத்தடியில்? நியூட்ரினோக்களை ஆராய நிலத்தின் மேற்புறம் சரிவராது. காரணம் வெளியில் இருக்கும் இயற்கையான மற்றும் சுற்றுப்புற பொருட்களில் இருந்து வரும் கதிர்வீச்சு. ஒரு முனிவரின் தவம் போல இந்த ஆய்வுக் கருவிகளுக்கு யாருமற்ற, எதுவுமற்ற ஒரு வெறுமை தேவைப் படுகிறது.
 • ஏன் தேனியில்? புவியைச் சூழ்ந்துள்ள காந்தக் கோடுகளின் மையம் (magnetic equator) இந்தியாவின் இந்தப் பகுதியையும் கடக்கிறது. இந்த அமைப்பு அணுத் துகள் ஆய்விற்கு உகந்தது.
 • வட இந்தியாவில் இருக்கும் பாறைகளைக் காட்டிலும் Indian Shield எனப்படும் தென்னிந்தியப் பாறைகள் புவியியல் ரீதியாக மிகப் பழையதும் திடமானதும் ஆகும் (குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகள்).
 • 26.5 ஹெக்டேர் நிலம் இத்திட்டத்துக்காக கையகப் படுத்தப் பட்டுள்ளது.
 • இந்தியாவின் பல்வேறு இடங்களிலுள்ள 26 ஆய்வு நிறுவனங்களின் 1௦௦ ஆய்வாளர்கள் இதில் ஈடுபடுகின்றனர்.
\includegraphics[height=12.0cm]{bwhland2_mod.eps}

மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தின் வரைபட மாதிரி. (மூலம்: http://www.ino.tifr.res.in)

சரி. இந்த ஆராய்ச்சியால் என்ன கிடைக்கப் போகிறது? தெரியாது. ஓரிரு நியூட்ரினோக்களின் பயணத்தைப் பதிவு செய்வதே குதிரைக் கொம்பு. இதற்காக ஜப்பானின் கமியோகா மலையினடியில் நிறுவப்பட்டுள்ள Super Kamiokande ஆய்வகம், கனடாவின் Sudbury ஆய்வகம் (இப்போது ஆய்வுகள் நடைபெறுவதில்லை) மற்றும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் சில ஆய்வகங்களும் அண்டார்டிகாவில் ஒருசில ஆய்வகங்களும் உள்ளன. இவை எல்லாமே அந்த நாடுகள் இப்போது இருப்பதை விட செல்வாக்குடன் இருக்கும் போது நிறுவப் பட்டவை.

1500 கோடி பணத்தை நாம் நிச்சயம் வேறு வழிகளில் செலவழிக்கலாம்.

இங்கே குடிக்க நல்ல நீர் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.  குப்பைகள் சரியாகத் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப் படுவதில்லை. தடையற்ற மின்சாரம்? தரமான மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கிறதா? அடிப்படை வசதிகள் கூட அனைவருக்கும் தர முடியவில்லை. மனிதவள வளர்சிக் குறியீட்டில் 135-வது இடத்தில இருந்து மீண்டு வர எதாவது உருப்படியான திட்டம் தீட்டலாம்.

தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமானால் சூரிய ஆற்றல் கொண்டு மின்சாரம் தயாரிக்கத் திட்டமிடலாம். காற்றாலைகளை இன்னும் ஆற்றல் மிக்கவையாக மாற்றலாம். மது விற்றுத் தான் மாநிலத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலையை மாற்ற முயலலாம்.

அறிவியலுக்குத் தான் இந்த பணம் என்றால் வேறு பல ஆய்வுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

 • சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக தொலை பேசிகள் பயன்படுத்தும் நாடு நமது. எத்தனை இந்திய நிறுவனங்கள் தகவல் தொடர்பு கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கின்றன?
 • எத்தனையோ ஆய்வகங்கள் இருந்தும் Microproccessor செய்யும் தொழில் நுட்பத்தைக் கூட நாம் இன்னும் எட்டவில்லை. அதற்கு இந்தப் பணத்தை செலவழிக்கலாம்.
 • மின்கலங்கள் மற்றும் புதிய மின் உற்பத்தி இயந்திரங்கள் பற்றிய ஆய்வுகளுக்குக்ப் பயன்படுத்தலாம்.
 • கடல் நீரை குடிநீராக்கும் ஆய்வுகள் செய்யலாம்.
 • குடிநீர் சுத்திகரிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு என்று எத்தனையோ செய்யலாம்.

இதனால் உள்ளூர் மக்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? காவலாளி வேலை கூட வேறு மாநிலத்தவருக்குத் தான். சிங்காரா, மசினகுடி பகுதிகளில் நிறுவப்பட இருந்த இத்திட்டம் அங்கு உள்ள (பெரும்பாலும் அண்டை மாநிலத்தவர்) சமூக, சுற்றுசூழல்  ஆர்வலர்களின் எதிர்ப்பால் இப்போது தேனிக்கு மாற்றப் பட்டுள்ளது. நிலத்தைத் தோண்டுதல், சுரங்கப் பாதை அமைத்தல், இதற்காக வெடி வைத்து பாறைகளைத் தகர்த்தல், என்று பெரும் கட்டுமானப் பணிகள் இந்த மலைப் பகுதியை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு எந்த முன் மாதிரியும் கிடையாது.

அணு உலை விபத்து போல் மாபெரும் சேதம் விளையா விட்டாலும் நீர்மின் நிலையங்கள் அமைக்க நாம் செய்துள்ள பணிகளைப் பார்க்கும்போது நிச்சயம் இதனால் சுற்றுப்புறங்களின் தன்மை மாறிடும் என்று தெரிகிறது. பாரம்பரியமாகவே கட்டுமானக் கழிவுகளை அகற்றுவதில் நாம் வீணர்களே. சொந்த வீடு கட்டவே சாலையில் மணலையும் செங்கல்லையும் பரப்பி வைத்து சுவர்களுக்குப் பாய்ச்சிய நீரைத் தெருவில் விடுபவர்கள் நாம். மூன்றரை ஆண்டுகள் மலையைக் குடைந்து ஏற்படுத்தப் போகும் சுரங்கதிற்காக தினமும் குறைந்தது ஒரு வெடியாவது வைத்துப் பாறைகளைத் தகர்ப்பார்கள். அதை சுற்றுப்புற மக்கள் தினமும் தீபாவளியாகக் கொண்டாடலாம்.

ஒரு வேளை இந்த ஆய்வுகள் வெற்றி பெற்று யாருக்கேனும் நோபெல் பரிசு கூட கிடைக்கலாம். அதற்காக நாம் கொடுக்கும் விலை? இந்தப் பகுதிக்கென்று இருக்கும் தனித்தன்மையான செடிகொடிகள், உயிரினங்கள், நிலத் தன்மைகள் எல்லாம் மாறக் கூடும். நீர்நிலைகள் மாசுபடக் கூடும்.

நமக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நிகழ்கிறது என்கிறீர்களா? எல்லாம் தமிழ்நாட்டின் தலையெழுத்து  என்று இருக்க வேண்டியது தான். ஒருவேளை தலையெழுத்தை நம்மால் மாற்றவும் முடியலாம்.

பின் குறிப்பு: நியூட்ரினோ குறித்த தற்போதைய ஆய்வுகள் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு முனைவர் ஜெயபாரதன் அவர்கள் எழுதியிருக்கும் அருமையான பதிவு இங்கே.

700 கோடி வயிறுகள்


கருவூலங்களின் காலம் இது. கோயில் கருவூலங்களைத் திறக்கிறார்கள் [1]. அரசு கருவூலங்கள் காலியாகி விட்டதாக சொல்கிறார்கள். இவற்றினிடையே நோர்வே நாட்டில் உலகளாவிய விதை கருவூலம் ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.

2008 -இல் தொடங்கப்பட்ட Svalbard Global Seed Vault எனப்படும் இந்த கருவூலத்தில் சுமார் 30 லட்சம் வகையான பல்வேறு தானிய விதைகளைச் சேகரிக்கும் உயர்-தொழில்நுட்ப வசதிகள் உள்ளன [2].

எதற்காக?

ஒரு வேளை பருவநிலை மாற்றங்கள், இயற்கை பேரிடர்கள்  போன்றவற்றால் பயிர்வகைகள் அழிய நேரிட்டால் ஒரு backup copy -ஆக இந்த விதைகளைப்  பயன்படுத்தலாம்.

சுருங்கச் சொன்னால் இது ஒரு தொலைநோக்கு கொண்ட விதை வங்கி அல்லது  மாபெரும் குளிர்சாதனப் பெட்டி என்று சொல்லலாம்.

இந்தியாவில் இருந்து 77,239,325  விதைகள் இந்த கருவூலத்தில் பாதுகாக்கப் படுகின்றன.

கோடிக்கணக்கில் செலவிட்டு இப்படி ஒரு அமைப்பை நோர்வே அரசு ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். பலருக்கு இது ‘சின்னப் புள்ளத் தனமாகக்’ கூட தெரியலாம்.

குகை மனிதன் குடியானவன் ஆகி பத்தாயிரம் ஆண்டுகளாகக் காட்டுப் பயிர்களை ‘இது  நாம் கொள்வது, இது நம்மைக் கொல்வது’ என்று தரம் பிரித்து வேண்டியவற்றை சாகுபடி செய்து வந்த உணவுப்பயிர்களே மனித இனத்தை சென்ற நூற்றாண்டு வரை காத்து வந்தன.
மக்கள் தொகை பெருக்கத்தால் விளைநிலங்கள் விலை போனதால் இருக்கும் நிலத்திலேயே எல்லோருக்கும் உணவு விளைவிக்கும் கட்டாயம்.  வந்தது பசுமைப் புரட்சி. வாழ்க ஒரு ருபாய் அரிசி.

Program செய்யப்பட எந்திரங்களாக மாறிவிட்டன பயிர்கள். இயற்கையான பயிர்களைப் போல் சூழலுக்கு ஏற்ப தமது தன்மைகளை மாற்றிக்கொள்ளும் திறன் இவற்றுக்கு இல்லை. தொன்று தொட்டு இருந்து வரும் பயிர் ரகங்கள் மறக்கப்பட்டு அழியும் சூழல் உருவாகிறது.

அசல் போனால் என்ன நகல் இருக்கிறதே என்று இருக்கிறோம். பல தருணங்களில் நகல் செல்லாதது ஆகி விடுகிறது.

அனைத்து நிலங்களிலும் ஒரே வகை பயிர் என்பதால் ஒரு புதிய நோய் தாக்கும் பட்சத்தில் அதை எதிர்க்கும் திறன் இல்லையென்று வைத்துக் கொள்வோம். ஒன்று, புதிய மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும். அல்லது புதிய பயிர் ரகம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்குள் போனது போனது தான். இந்த நோய் எதிர்ப்புத் திறன் ஒருவேளை அழிந்து போன அந்த இயற்கை ரகத்தில் இருந்திருக்கக் கூடும்.

என்ன செய்வது, அசல் தான் இல்லையே!

இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடி ஆகிவிடும் என்கிறார்கள் [3].

இத்தனை வயிறுகளுக்கும் உணவளிக்கும் அதே நேரத்தில் பயிர்களைத் தாக்கும் நோய்களால் விளைச்சல் குறைந்து பஞ்சம் ஏற்படும் நிலையைத் தவிர்க்கவும் வேண்டியுள்ளது.

இது நிச்சயம் கயிற்றின் மேல் நடக்கும் வித்தை தான். பாதி கடந்து விட்டோம். வேகமாக போகிறேன் பேர்வழி என்று கயிற்றை அறுத்து விடவோ கீழே விழுந்து விடவோ கூடாது.

மேற்கோள்:

ஆசிரிய வருத்தம்


என் ஆசிரியர்களுக்கு,

உங்களில் பலருக்கு
என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் தெரிந்தாலும்
உங்கள் கேள்விகளுக்கு
என்றுமே நான் எழுந்து
பதில் சொன்னதில்லை.

அது ஏனோ
நீங்கள் என்னைக் கேட்ட
கேள்விகளுக்கு மட்டும்
பதில் தெரிந்ததில்லை.http://www.creative-learner.com/imagesforTWQ/clasroom_cartoon.gif

முதல் வரிசை
முந்திரி கொட்டைகள்
பின்வரிசை ‘பெரிய பையன்கள்’
இரண்டிலும் சேராதவன் நான்.

இரண்டாம் வரிசையில் என் இருக்கை.

அதனால் உங்களுக்கு என்னை
அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று
ஒருசில உண்மைகளை
உங்களிடம் சொல்ல விழைகிறேன்.

அந்த பச்சை நிற வாளியை உடைத்தது
அபராதம் கட்டிய ஐந்து பேருமில்லை.
ஐந்தில் வளையாத நான் மட்டும் தான்.

அதற்குப் பிராயச்சித்தமாக
நண்பன் திருடிய பேனாவுக்கு
நானும் அடி வாங்க நேர்ந்தது.

உண்மையில் என் நாலு கோடு நோட்டு
காணமல் போகவில்லை.
வீட்டுப் பாடம் எழுதாததால்
பொய் சொல்லி விட்டேன்.

அமுக்கன், அறுவை, தூக்க மாத்திரை
இடி அமீன் என்றெல்லாம்
உங்களுக்குப் பட்டப் பெயர் வைத்தது
நான் தான்.

கணக்கு வாத்தியாருக்கு மட்டும்
ஏற்கனவே யாரோ பேர் வைத்துவிட்டனர்.

தமிழாசிரியரின் வெள்ளைச் சட்டையில்
கருப்பு மை அடித்தது நான் தான்.

உணவு இடைவேளையில்
உங்களில் சிலர்போல் நான்
நடித்துக் காட்டியது
நிஜம்தான்.

கை தட்டல்களினால் என்
கண்ணியம் குறைந்துவிட்டது.

நீங்கள் சொன்ன எல்லாமே
என் மண்டையில் ஏறவில்லை தான்.

ஆனால் மனதின் ஒரு மூலையில்
மரியாதை இருக்கத்தான் செய்தது.

நீங்கள் கழுவிய மீன்களில்
நழுவிய மீனாய்
நானும் தேர்ச்சிபெற நேர்ந்தது

என் தவறுகளை நீங்கள்
எப்போதும் போல மன்னிப்பீர்கள்.

இருப்பினும்
இவற்றைச் சொல்வதால் நான்
மீண்டும் என் பள்ளிக்கூட நாட்களுக்கு
திரும்ப முடிந்தது

உங்கள் மாணவனாக….

பாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 6 : நம்ம ஊரில்…


இந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:

By vijay Posted in உளறல் குறிச்சொல்லிடப்பட்டது ,

பாதுகாக்கப்பட்டது: விஷக் கதைகள் – 1


இந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:

ஃபேஸ்புக்… க்ளிக்.. க்ளிக்…


ஃபேஸ்புக் என்றொரு விந்தை 

மக்கள் தொகையில் முதல் இரண்டு நாடுகளை நாம் அறிவோம். மூன்றாம் இடத்தில எந்த நாடு உள்ளது?  ஏறக்குறைய 310 மில்லியன் மக்களைக் கொண்ட அமெரிக்காவுக்கு மூன்றாம் இடம். 

ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தை இந்நேரம் பிடித்திருக்கும். ஆம், இன்றைய அளவில் ஃபேஸ்புக் பயனர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 500 மில்லியன். 

மக்கள் வெள்ளம்

 

2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஃபேஸ்புக் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 100 மில்லியன் உறுப்பினர்களை தன் வசம் ஈர்த்துள்ளது. கிராமத்தில் வதந்தி பரவுவது போல் ஒரு வேகம். 

இதில் அப்படி என்னதான் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்? 

ஒவ்வொருவரும் தங்களது விருப்பு, வெறுப்பு, அவர்களின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சார்பு அல்லது சார்பின்மை, என்று பல விஷயங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். 

விட்டலாச்சார்யா படத்தில் வரும் மாயக் கண்ணாடியின் இன்றைய வடிவம் என்றே இதனை சொல்லலாம். 

என் ஃபேஸ்புக் நண்பர்களில் சிலர் புகைப் படங்களாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். சிலர் திங்கள் கிழமையே எப்போது வெள்ளிக் கிழமை வரும் என்று கேட்கிறார்கள். சிலர் தாங்கள் ரசித்த வீடியோ காட்சிகளைப் பதிவேற்றம் செய்கிறார்கள். 

ராசி பலன் பார்ப்பவர்களும் உண்டு. ஒரு சிலர் 50 வயதாகியும் FarmVille விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

நிஜ வாழ்க்கையில் நீங்கள் செய்ய முடியாத பல விஷயங்களை ஃபேஸ்புக்கில் செய்யலாம். அவை: 

 • பிறர் சுவற்றில் எழுதி விட்டு “It is the writing on the wall” என்று ஓடி விடுவது (முதுகு பழுத்து விடாது?)
 • யாரும் பார்க்காத நேரத்தில் ஒருவரைக் கிள்ளி வைப்பது
 • “நான் தண்ணீரே குடிப்பதில்லை – அதில் மீன்கள் உடலுறவு கொள்வதால்” என்பன போன்ற தத்துவங்களை உதிர்ப்பது (ஊரை விட்டே தள்ளி வைத்து விடுவார் நாட்டாமை)
 • ஒரு டப்பாவில் life box என்று எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பவரிடம் எல்லாம் “இதுல என்ன இருக்குனு பாரேன்” என்று சொல்வது
 • அலுவலக நேரத்தில் பாயிண்ட் வைத்து mafia கும்பலை அழிப்பது
 • மற்றும் பல

ஆனால் ஃபேஸ்புக்கில் பல நன்மைகள் இருக்கத் தான் செய்கின்றன: 

 • ஒரு ஊருக்கு/நாட்டுக்குப் போகும் முன்பாகவே அந்த இடத்தைப் பற்றிய விஷயங்களை சேகரிக்கலாம்
 • புத்தக விமர்சனம் செய்யலாம்/படிக்கலாம் (புத்தகம் படிக்கா விட்டால் என்ன?)
 • பழைய பள்ளி நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து “டேய் ராமசாமி, நீ இங்கயா இருக்க? சொல்லவே இல்ல…” என்று அளவளாவிக் கொள்ளலாம்
 • கல்வி நிறுவனங்கள் பற்றி சக மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் (“மச்சி, ஃபிகர் எல்லாம் தேறுமா?”)
 • “மின்சாரத்தை மிச்சப் படுத்துவோம்”, “கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைப்போம்” என்பது போன்ற இயக்கங்களில் சேர்ந்து நம்மால் முடிந்த வரையில் குரல் கொடுக்கலாம்
 • புதிய இடுகைகளை (blogs) நண்பர்களுக்குத் தெரியப் படுத்தலாம் (இந்த இடுகையை முடித்து நான் submit பொத்தானை அழுத்தியதும் தானாகவே ஃபேஸ்புக்கில் “எலேய், நம்ம பய புள்ள புது ப்லாக் எழுதிருக்குலே” என்று அறிவிக்கப் படும்)
 • எல்லாவற்றுக்கும் மேலாக விளம்பரம் செய்து கொள்ளலாம். நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர் என்பது தான் இங்கு விதி.

ஃபேஸ்புக்கில் என்னைக் கவர்ந்த நண்பர்களில் Alfy முக்கியமானவர். அதிக புகைப் படங்களை ஏற்றிய சாதனை விருதினை இவர் நிச்சயம் பெறுவார். Alfyயிடம் எனக்குப் பிடித்த விஷயம் எல்லா கருத்துகளுக்கும் பதில் அளிப்பதும் பிறர் கிண்டல் செய்தாலும் தனக்குப் பிடித்ததை செய்யும் தன்மையும் தான். 

ஃபேஸ்புக் அடிமைகள்
ஆனால் பல இளைஞர்கள் ஃபேஸ்புக் அடிமைகளாக மாறி (பச்சை மண்ணு?) மனோதத்துவ நிபுணர்களை நாடிச் செல்லும் நிலைக்கு வந்து விடுகின்றனர்.  நிஜ உலகத்தை விட இந்த உலகம் அழகானதாக, எளிதானதாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அமர்ந்த இடத்தில் இருந்தே அனைவருடனும் இணைந்து இருப்பது பெரிய விஷயம் தானே? பிடிக்காத மனிதர்களை ஒரு பட்டனை அமுக்கி காணமல் போகும் படி செய்யும் வசதி வேறெங்கு கிடைக்கும்?

சமூக வலை தளங்களில் அடுத்த புரட்சி வரும் வரை ஃபேஸ்புக் ஆதிக்கம் தான்.

தந்தி: படிக்க – நிற்க – நினைக்க


யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சில காலம் முன்பு வரை  நடிகர்களுக்குத் தந்தியைப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. சிரிப்புக் காட்சியோ அழுகை காட்சியோ, தந்தி என்றதும் பதறிப் போவது போல் நடிக்க வேண்டும். அது சரி, என்ன ஆயிற்று இந்த தந்திக்கு? இருக்கிறதா இல்லையா? யார் தான் அனுப்பிகிறார்கள், யார் தான் பெறுகிறார்கள்?

போர் நிறுத்தக்கோரி முதல்வர்கள் தான் தந்தி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

“ஆட்சி நிற்க போர் நிற்க” என்று அதிலும் இலக்கிய நயம் இருந்திருக்கலாம்.

போரும் முடிந்து விட்டதாக சிலர் பேசிக்  கொள்கிறார்கள். தந்தியை முற்றிலுமாகத் தடை செய்யும் திட்டம் மைய அரசுக்கு இருந்தாலும் வியப்படைவதற்கு இல்லை.

தினத் தந்திக்கு நாம் நன்றி சொல்லியே ஆக வேண்டும். நம்மை அறியாமலே, கொஞ்சமும் பதறாமல் “ஒரு தந்தி கொடுங்க” என்று கேட்டு வாங்கிப் படிக்கிறோம்.

மற்றபடி, பத்தாம் வகுப்புத் தேர்வில் ஒரு இரண்டு மதிப்பெண் கேள்விக்கு ஒரு தந்தி அனுப்பியதாக நினைவு. இன்னும் சில எழுத்தாளர்கள் குளிருக்குப் பற்கள் தந்தி தான் அடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர் தொலைபேசித் தொடர்பு இல்லாத கிராமங்களில் (இருந்தால்) ஒரு வேலை தந்தியைப் பயன்படுத்துகிறார்களோ என்னவோ?

கடல் கடந்து செய்திகளை அனுப்பும் பொருட்டு 1851 இல் ஆரம்பிக்கப் பட்ட வெஸ்டன் யூனியன் நிறுவனம் 2002இல் தனது கடைசி தந்தியை பட்டுவாடா செய்தது.

மனிதனின் முதல் விமானப் பயணம் மற்றும் முதலாம் உலகப் போர்த் துவக்கம் ஆகியவற்றின் செய்திகள் முதலில் தந்தி மூலமே அனுப்பப் பட்டதாம். மோர்ஸ் கோட் (Morse Code) முறையில் அனுப்பப்பட்ட தந்திகள் அக்காலத்தில் தொலை தூர அழைப்புகளை விட மலிவாக இருந்ததால் மக்களின் வரவேற்பைப் பெற்றதாம். நிற்க (STOP) என்ற சொல் இலவசமாதலால் புள்ளிகளைத் தந்தியில் தவிர்த்தனர் (ஒவ்வொரு புள்ளியும் ஒரு சொல்லாகக் கருதப்படும்!).

பீதி

இரண்டாம் உலகப் போரின் போது மஞ்சள் நிறத் தந்திகள் என்றாலே அக்காலப் பெற்றோர் அஞ்சுவர் – அவை பெரும்பாலும் மகன் இறந்த செய்தியைச் சொல்பவை என்பதால்.

1844 இல் மோர்ஸ் தந்தி  முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் தனது நண்பருக்கு “கடவுள் என்ன வடிவமைத்துள்ளார்?” (What hath God wrought?)என்று கேட்டு உலகின் முதல் தந்தியை வாஷிங்டனில் இருந்து பால்டிமோர் நகருக்கு அனுப்பினார். அந்த நண்பர் என்ன பதில் சொன்னார் என்று தெரியவில்லை.

குறுந்தகவல் மற்றும் இணைய வழி அழைப்புகளிடம் மின்னஞ்சலே பிச்சை வாங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் தந்திகள் அரும்பொருள் காட்சியகங்களில் முன்பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், 140 எழுத்துக்கள் கொண்ட ட்வீட்களுக்கும் ஓரிரு வரி தந்திகளுக்கும் அதிக வேறுபாடு இல்லை.

நன்றி: http://www.wired.com/science/discoveries/news/2006/02/70147

நான் இழப்பவை…


நான் இழப்பவை…
 
காலை செய்தித்தாள்
வாயாடி பண்பலை வானொலி
வெள்ளிக்கிழமை சாயங்காலக்
கோயில் ஒலிபெருக்கி
 
தேர் திருவிழாவில்
மாடிப் பெண்கள்
 
முதல் நாள் முதல் காட்சி நெரிசல்
கன்னி  கழியாத தேர்தல் வாக்குறுதிகள்
 
பழைய காகிதத்துக்கு மாம்பழம்
பக்கத்து ஊருடன் பந்தயக்  கிரிக்கெட்
 
நேற்றைய மழையின் காளான் தேடல்
 
நள்ளிரவில்
தானாக ஊளையிட்ட 
வங்கி அலாரம்
 
சில்லரை கேட்டு 
சத்தம போடும் நடத்துனர்
 
மகளிர் இருக்கைக்குப் போராடும் உரிமைவாதிகள்
 
அவசர ஊர்தியைத் துரத்தும் 
இருசக்கர ஆசாமிகள்
 
தண்டீஸ்வர வீதியில் சந்தன வாசனை
  
சாலையோர புளியமர நிழலில் தர்பூசணி
 
கரவொலி கேட்கும் வரை நில்லாத
தொலைக்காட்சித் தர்க்கங்கள்
 
நன்கொடை கேட்டு கதவு தட்டல்கள்
 
படிக்கட்டில் தொங்கல் பயணம்
டீக்கடை அரசியல்
 
வாழை இலையில் 
ஆந்திர மதிய உணவு
 
உதட்டுச் சாயம் வழியாக 
ஆங்கிலக் கலப்புத் தமிழ்
 
இறுதி ஊர்வல நடனங்கள்
 
இரண்டாம் ஆட்டம் முடிந்து வருகையில்
நாய்களின் துரத்தல்
 
சுதந்திர தினக் கவிதைகள்
தீபாவளிப் பட்டிமன்றங்கள்
 
கழிப்பிடக்   கெட்ட வார்த்தைகள்
கடற்கரைக் காதலர்கள்
 
தெண்டுல்கர் மீதான திட்டல்கள்
 
சனிப் பெயர்ச்சிப் பலன்கள்
 
எந்த வானிலை அறிக்கையிலும்
வராத மழைகள்
 
வீட்டுப் பின்புறம் மலர்ந்த
திடீர் பூக்கள்
 
போர்வையைப் பகிர்ந்திடும்
செல்லப் பூனைக்குட்டி
 
அம்மா அடுக்கிக் கொண்டே போகும்
அழகு தோசைகள்
 
புறப்படும் நாட்களில்
அப்பாவுடன் உரையாடல்கள்
 
இனிய தமிழ் பாடல்கள்
  
மற்றும் நீ…
 
 

பேப்பர் பையன்கள்


செய்தித்தாள் வாசிப்பது ஏதோ பட்டிக்காட்டுத்தனம் அல்லது போன நூற்றாண்டுப் பழக்கம் போல் ஆகிவிட்டது. ட்விட்டர், யூ ட்யூப், News Feeds வகையறாக்கள் தொலைக்காட்சியயையே தூக்கி சாப்பிடும் காலத்தில் செய்தித்தாள் ஓலைச் சுவடி போன்ற வஸ்துவாகிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் செய்தித்தாள் படிப்போர் இருக்கத்தான் செய்கிறோம்.

நாம் ‘சூடாகப்’ படிக்கும் செய்தித்தாளின் அச்சு வேலைக்குப் பிறகு பல நச்சு வேலைகளைத் தாண்டியே நம்மை வந்தடைகின்றது. இறுதியில் பெரும்பாலும் யாரோ ஒரு பெயரறியாத செய்திகள் - நம் வாசற்படியில்....சிறுவன் நம் வீடுகளுக்குள் இன்றைய செய்திகளைத் தூக்கி வீசிச் செல்கிறான். யார் இந்த பையன்?

பேப்பர் பையன்கள் தனியொரு இனம் என்று தான் சொல்ல வேண்டும். வெயிலோ மழையோ, இவர்கள் வந்து போனதை வாசலில் இருக்கும் வாசனை போகாத புத்தம் புதிய செய்தித்தாள் சொல்லும்.

 அண்மையில் ஜெபிரி பாக்ஸ் (Jeffrey Fox) என்பவர் எழுதிய “Rain: What a Paperboy Learned About Business” என்ற நூலைப் படித்தேன். அதில் இவர் பேப்பர் பையன்களின் வாழ்கை மற்றும் அவர்களின் அணுகுமுறையை மையமாக வைத்து எப்படி ஒருவர் தான் செய்யும் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி காண முடியும் என்பதை விவரிக்கிறார்.

இந்நூலில் சாதாரண பேப்பர் பையனாக இருந்து வாழ்வில் முன்னேறியவர்களின் ஒரு பெரிய பட்டியலைத் தந்திருக்கிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் – பல அறிவியல் கதைகளை எழுதிய இசாக் அசிமோவ், பெரும் தொழிலதிபர் வாரன் பஃபெட், ஹாலிவுட் நடிகர் டோம் க்ரூஸ், கண்டுபிடிப்பாளர் எடிசன், மார்ட்டின் லூதர் கிங், மற்றும் பலர். இதைப் படித்தவுடன் எனக்கு நமது பாரத ரத்னா அப்துல் கலாம் நினைவுக்கு வந்தார்.

ஒரு காலத்தில் பேப்பர் பையனாக இருந்தவர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூட ஆலோசனை வழங்குகிறார் ஜெபிரி பாக்ஸ்!

இவர்கள் மிகுந்த பொறுமை உடையவர்களாக, கடமை உணர்ச்சியும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத ஆவல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று தன்னுடைய இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறார்.

எனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது. சிறு வயதில் பேப்பர் பையனாகப் பணியாற்றியவர்கள் அந்த அனுபவத்தையும் தங்களது CV-இல் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதும் இல்லை. சொல்லப்போனால் இது நாம் பெருமைப் பட வேண்டிய ஒன்று.

ஆங்கில மோகம்


பலசரக்கு அங்காடியில் நுழைகிறேன். ஆடம்பரத் தம்பதியர் தம் குழந்தையின் ஆங்கில மய மழலையில் பெருமிதம் கொள்கின்றனர். அம்புலிமாமா படித்த காலம் போய் ஹாரி போட்டெர் காலம் வந்து விட்டது.

கலப்பு

கலப்பு

ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் பெயர் சொல்லேன் என்று இன்றைய இளைஞனைக் கேட்டால் பெரும்பாலும் மௌனமோ அல்லது ஏளனமோ தான் உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும். காசு கொடுக்கும் கணிப்பொறி மொழிகளை விடுத்து கனித்தமிழ் படிக்க நேரமில்லை.

பெயர்கள், பெயர்பலகைகள், அன்றாட உரையாடல்கள் என்று அனைத்திலும் ஆங்கிலக் கலப்பு, திணிப்பு, அல்லது மிதப்பு. வானொலி மற்றும் தொலைகாட்சி அறிவிப்பாளர்களின் தமிழ் மொழிப் படுகொலையின் உச்ச கட்டம். ஒரு நிமிடம் தடையின்றி தமிழ் பேசினாலே தங்கம் தரும் அளவுக்குத் தமிழ் வளர்ந்து விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் திரை படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும். பாடல்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தமிழ் பத்திரிகைகள் தங்களால் முடிந்த வரைக்கும் தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் மட்டும் நல்ல தமிழை நம்பி போராடிக் கொண்டிருக்கின்றன.

நல்ல தமிழ் கேட்க யாழ்பாணம் அல்லது மலேசியா செல்ல வேண்டியுள்ளது. வாழ்க தமிழ்.