துன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்


 

தொழில் நிமித்தமாய் வெளியூர் சென்ற தலைவனிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. போனவன் தன்னை விட்டு அப்படியே போய் விட்டானா என்று தலைவிக்கு மிகுந்த சந்தேகம். அவனை நினைத்து நினைத்து சோகக் கடலில் தத்தளிக்கிறாள்.

கணக்குப் புத்தகத்தில் மூழ்கியிருந்த தோழி,

“என்னடி, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள்.

“உடம்பு சரியாய் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் தான் என்ன?”

“ஓ! அவனை நினைத்து ஏங்குகிறாயா? வேலைக்காகத் தானே போயிருக்கிறான்? வந்து விடுவானடி, கவலைப் படாதே!”

“அது தான் கவலையே. போகும் போது ‘வேலை தான் முக்கியம்’ என்று சொல்லி விட்டுப் போனான். அப்போது எனக்குப் புரியவில்லை, அவனுக்கு நான் அவ்வளவு முக்கியம் இல்லை என்று.”

“வேலை முக்கியம் என்றான். சரி தான். அதன் பின், ‘உன் உயிர் நான் தான்’ என்றும் சொன்னான் அல்லவா?”

“ஏனடி அதை எல்லாம் இப்போது ஞாபகப் படுத்துகிறாய்? ‘இல்லின் கண் உறையும் மகளிர்க்கு, ஆடவர் உயிர்’ என்று கவிதை வேறு எழுதித் தந்தான். அவன் விவரமாகத் தான் இருந்திருக்கிறான். என் உயிராக இருந்தவன் போய் விட்டான். இங்கே நடைபிணமாக நான் இருக்கிறேன். எல்லாம் என் விதி.”

“இப்போது தான் distributive law of sets படித்துக் கொண்டிருந்தேன். பங்கீட்டு விதி என்று வைத்துக் கொள்ளேன். இந்த விதி உன் விதிக்கு ரொம்பவே பொருந்துகிறது.”

“நீ வேறு கண்ட விதியை எல்லாம் சொல்லி என்னைக் குழப்பாதே. ஏற்கனவே நான் போட்டிருந்த எல்லாக் கணக்கும் பொய்யாகி விட்டது.”

“அப்படி எல்லாம் சொல்லாதே. ஒரு சின்னப் படம் வரைந்து உனக்கு இதைப் பற்றி சொல்ல முயற்சிக்கிறேன்” என்று கூறி, தன் டேப்லெட்டில் மளமளவென்று ஏதோ வரைந்து விட்டு, எழுதியபடியே பேசத் தொடங்கினாள்.

“இந்தப் படத்தைப் பார். இதில் நீ தான் A. தலைவன் B. அவன் செய்யப் போயிருக்கும் வேலை C என்று வைத்துக் கொள்வோம். சமன்பாட்டின் இடது பக்கத்தில் பார்த்தால் A ஆகிய நீ தனித்து நிற்கிறாய். தலைவன் வேலையில் மூழ்கியிருக்கிறான். ஆனால், வலது பக்கத்தில் பார்! நீயும் அவனும் ஒன்றாக இருக்கிறீர்கள்.”

vinaye

“போடி! என்னைச் சமாதானப் படுத்த ஏதேதோ சொல்லுகிறாய். இது நீயே கண்டுபிடித்த கணக்கு போலும்!”

“இல்லையடி, உண்மையிலேயே இது ஒரு கணித விதி தான். வினையே ஆடவர்க்கு உயிர் என்றானல்லவா? அதைத்தான் இங்கே (B ⋂ C) என்று எழுதி இருக்கிறன். தனிமையிலும் அவனை நினைத்து இருக்கிறாய் அல்லவா, எனவே A ஆகிய நீ தனித்திருந்தாலும் நினைவால் அவனுடன் இருப்பதால் A U (B ⋂ C) என்று எழுதினேன். புரிந்ததா?”

“ம்”

“இப்போது வலதுபுறம் பார். A என்ற காதலி நீயும் B என்ற காதலன் அவனும் (A U B) என்று சேர்ந்து இருக்கிறீர்கள். அதற்குக் காரணம் ‘மகளிர்க்கு ஆடவர் உயிர்’ என்றான் அல்லவா. அப்படியானால் உன் உயிரான அவன், உடலாகிய நீ இல்லாமல் ஏது? வினை தான் அவன் உயிர் என்றாலும் அது வாழ உடல் நீ வேண்டும் அல்லவா? அதனால் நிச்சயம் அவன் வருவான். அதைத்தான் இங்கே (A U C) என்று எழுதி இருக்கிறேன். என்ன, கணக்கு சரியாக வருகிறதா?”

“என்னவோ சொல்கிறாய். கணக்கு சரியாக வருகிறதோ இல்லையோ, உன் பேச்சில் நம்பிக்கை வரத்தான் செய்கிறது. அவன் வருவான் என்று நம்புவோமாக!”

“பேசிக் கொண்டே நீ என்னடி வரைந்து வைத்திருக்கிறாய்? வென் சித்திரம் போல் தெரிகிறது! விசித்திரமானவள் தான் நீ!”

distrib1

distrib2

“நீ சொல்லிக் கொண்டிருந்த பங்கீட்டு விதியை வென் சித்திரமாக வரைந்திருக்கிறேன். கணக்கு சரியாகத் தான் வருகிறது”.

“அது சரி, காதலன் உன்னைச் சந்திக்க வருவதில் எவ்வளவு நேரம் தாமதமாக வருகிறான் என்பதை தினமும் Excel-இல் அட்டவணை போட்டவள் தானே நீ! வாழ்க உன் காதல்!

 

பாடல் இதோ:

வினையே யாடவர்க் குயிரே வாணுதல் 

மனையுறை மகளிர்க் காடவ ருயிரென 

நமக்குரைத் தோருந் தாமே 

அழாஅ றோழி யழுங்குவர் செலவே.

குறுந்தொகை 135.
பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.

விளக்கம்: வினையே – தொழில் தான்.

ஆடவர்க்கு உயிர் – ஆண்மக்களுக்கு உயிர் ஆகும்.

வாணுதல் – ஒளிபொருந்திய நெற்றியையுடைய

மனையுறை மகளிர்க்கு – இல்லின் கண் உறையும் மகளிர்க்கு

ஆடவர் உயிர் என – கணவன்மாரே உயிர் ஆவரென்று

நமக்கு உரைத்தோரும் தாமே – நமக்கு எடுத்துக் கூறியவரும் அத்தலைவரே

அழாஅல் – அழாதே

செலவு அழுங்குவர் – திரும்பி வருவார்.

இன்னும் சில இனிய குறுந்தொகை பாடல்கள் இங்கே.

துன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்


தமிழ் மக்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த பல விதமான அனுபவங்களையும் உணர்வுகளையும் கதையாகவும், கவிதையாகவும் நாடகங்களாகவும் பலவாறு பதிவு செயதுள்ளனர்.

“இது என்ன பெரிய அதிசயமா? எல்லா மொழிக்காரனும் தான் இதை எல்லாம் செய்யறான். இங்கிலீஷ்காரன் எழுதாததா?” என்பதே இதற்குப் பலரது பதிலாக இருக்கும்.

ஆனால் ஒன்றை நாம் மறந்து விடுகிறோம். எல்லோரும் தான் எழுதினார்கள். நம்மை விடச் சிலர் நன்றாக எழுதினார்கள். சிலர் நன்றாக அவற்றைச் சேமித்தும் பரப்பியும் உலகப் புகழ் பெறச் செய்தார்கள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர்கள் யாரும் நம் மக்களைப் போல உணர்வுகளை இடம், காலம், சூழல் போன்ற தரவுகளைக் கொண்டு துல்லியமாக வரையறை செய்யவில்லை.

எடுத்துக்காட்டாக, ஆங்கில இலக்கியத்தைப் பெரும்பாலும் Romance, Nature, History போன்ற ஒருசில பிரிவுகளில் அடக்கி விடலாம். கொஞ்சம் நோண்டிப் பார்த்தால் செய்யுள் (verse), விளக்கிக் கூறுதல் (narrative), நையாண்டி/வஞ்சப்புகழ்ச்சி (satirical), இரங்கற்பா (elegy), நாடகத் தன்மை (dramatic) என்பன போன்ற பிரிவுகளில் போட்டு அமுக்கி விடுவார்கள்.

இப்போது தமிழுக்கு வருவோம். முதலில் அகம், புறம் என்ற பிரிவுகள். கண்ணதாசன் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் பகலெல்லாம் புறம், இரவெல்லாம் அகம்.

போரில் எதிரியைப் போட்டுத் தள்ளியது, போட்டுத் தள்ளியவரின் பெருமை போற்றி ஃப்ளெக்ஸ் போர்டு வைப்பது, ஏழைகளுக்கு உதவியது, முல்லைக்கு காரும் மயிலுக்கு ஜமுக்காளமும் தந்தது (முல்லையும் மயிலும் பெண்களாக இல்லாத பட்சத்தில்) இவை எல்லாம் புறம்.

பக்கத்து ஊர் பெண்ணைப் பார்த்துப் பல் இளித்தது, தூது அனுப்பியது/சென்றது, காதலன் & காதலி இடையேயான ஊடல், கூடல், பிரிதல் (break-up), பிரிவாற்றாமல் இருத்தல், இது போன்ற ‘லவ் மேட்டர்’ எல்லாம் அகம்.

இந்த அகப்பொருளில் யாருடைய காதலைப் பற்றி வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் அவர்களின் பெயரோ முகவரியோ மற்ற தனிப்பட்ட விவரங்களோ சொல்லக் கூடாது. தனி நபர் அந்தரங்கம் (Privacy) மிக முக்கியம். தினத்தந்தியில் வருவது போல் ‘அம்பிகா நகரில் வசிப்பவர் மாரிமுத்து (வயது 52). இவரது மகன் குமார் (வயது 26). இவர் தனது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த மாணிக்கம் (54) என்பவரது மகள் செல்வியை (வயது 23) காதலித்து வந்ததார். இருவரும் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர் (தனியார் கல்லூரி என்றால் மட்டும் பெயர் போடாமல் அகப்பொருள் காப்பார்கள்). இவர்கள் அடிக்கடி வெளியூர் சென்று உல்லாசமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் பெற்றோருக்கு இந்த விசயம் தெரிந்த போது பாரதியார் நகரில் வசித்து வரும் பெண்ணின் தாய்மாமன் சுரேஷ் (43)….” என்கிற ரீதியில் எழுதக் கூடாது. இது அகமாகவும் இல்லாமல் புறமாகவும் இல்லாமல் அசிங்கமாகவே பார்க்கப்படும்.

அவ்வளவு ஏன், ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று கூறிய நக்கீரரே எழுதிய நெடுநல்வாடை என்ற நூல் பெரும்பாலும் அகம் பற்றியே பேசுவது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வேம்பு என்ற அடையாளம் பாண்டிய மன்னனைக் குறித்ததால் இந்த முழு நூலும் புறப்பொருள் நூல் அலமாரியில் வைக்கப் பட்டுவிட்டது. எனவே, பாடப்படுபவர்களின் அடையாளம் தெரியாதபடி கண்ணியமாக அவர்களது privacy-ஐ மதிப்பதே அகம். காதலன் தலைவன்; காதலி தலைவி. அவ்வளவு தான். மற்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் செவிலி மற்றும் தோழி. பாங்கன் (தோழன்) சில நேரத்தில் வருவதுண்டு. கிளுகிளுப்பூட்ட பரத்தை (விலைமகள்) கதாபாத்திரமும் உண்டு.

இது தவிர, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் குளிர்காலக் காதல்கள் (குறிஞ்சி), அடர்ந்த காடுகளில் அமைந்திருக்கும் ரிசார்ட் காதல்கள் (முல்லை), பண்ணை வீட்டுக் காதல்கள் (மருதம்), கடற்கரைக் காதல்கள் (நெய்தல்), இவை எல்லாம் ‘அத்துக்’ கொண்டால் “ஊட்டிக்கு தனியா தான் போக வேணும் போல” என்கிற விரக்தியில் மலைக்கும் காட்டுக்கு இடையே பாழாகிப் புலம்பும் காதல் (பாலை) என்று 5 வகையான திணைகள், அவற்றுக்கு உரிய கருப்பொருட்கள் என்று பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

இப்போதைக்கு, மலைப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண் பசலை நோயால் தான் அடைந்து விட்ட மாற்றங்களைச் சொல்லி “எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்” என்று விளக்கும் ஒரு குறிஞ்சித் திணையில் அமைந்த பாடலைப் பார்ப்போம். அது என்ன பசலை? கேன்சரை விடக் கொடிய நோயா என்று கேட்பவர்கள் இங்கே ஒரு எட்டு போய் பார்த்து விட்டு வரவும்.

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல்
பைத லொருதலைச் சேக்கு நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே.

குறுந்தொகை பாடல் 13
எழுதியவர்: கபிலர்

இந்தப் பாடலுக்கு எனக்குப் புரிந்த வரை விளக்கம்:
மாசறக் கழீஇய யானை போல – தன் மீது படிந்திருந்த தூசு முழுவதும் போகும்படி சுத்தமாகக் கழுவப்பட்ட யானையைப் போல
பெரும்பெய லுழந்த விரும்பிணர்த் துறுகல் – துறுகள் என்பது வட்ட வடிவிலான ஒரு கல். பெருமழையில் கழுவப்பட்ட வட்ட வடிவிலான ஒரு பாறையானது
பைத லொருதலைச் சேக்கு நாடன் – பசுமை நிறைந்த ஒரு பகுதியில் இருக்கும் மலை நாட்டைச் சேர்ந்த காதலன்
நோய்தந் தனனே தோழி – (பசலை என்ற) நோய் ஒன்றைத் தந்து விட்டான், என் தோழியே!
பசலை யார்ந்தன குவளையங் கண்ணே – பசலை நிறத்தை அடைந்து விட்டன அழகிய குவளை மலர்களை போல இருந்த என் கண்கள்

kuvalai

குவளை © SanctuaryX [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)%5D

காத்திருப்பு

அதாவது, சுத்தமாகக் கழுவிய யானைப் போல மழை நீரால் நன்கு கழுவப்பட்ட பாறை ஒன்று அமைந்திருக்கும் மலை நாட்டைச் சேர்ந்த என் காதலன் எங்கோ போய் விட்டான். அவனின் நினைவுகளால் என் தோற்றமும் பொலிவும் மாறிவிட்டது. பசலை என்ற இந்தக் கொடிய நோயால், முன்னர் அழகிய குவளை மலர்களை போன்று இருந்த என் கண்கள் இப்போது பசலை நிறம் பெற்று விட்டன.

ஐந்தே வரிகளில் யானை – பாறை, குவளை – கண்கள், நோய் – பிரிவு என்ற உவமைகளும் அவர்கள் வாழ்த நிலப்பரப்பு குறித்த தகவல்களும், உணர்வுகளால் மனித உடலில் ஏற்படும் மாற்றங்களின் தன்மையையும் இலக்கணம் மாறாமல், அக இலக்கிய நெறிக்கு உட்பட்டு உணர்வுகளை வெளிப்படுத்த இனிய தமிழில் எழுதப் பட்ட இந்தக் குறுந்தொகை பாடல் காதலியின் நிலையை நம் கண்முன் நிறுத்துகிறது அல்லவா?

துன்பத்துப் பால் – ஒரு இனிய குறுந்தொகை பாடல்


அகப்பொருள் பாடல்களில் பெரும்பாலும் தலைவனும் தலைவியும் பிரிந்திருப்பதால் நேரும் துயரம் மேலோங்கி இருக்கும். (இருவரும் இணைந்திருக்கும் போது பாடலா எழுதிக் கொண்டிருப்பார்கள்?) 
 

இவர்கள் இருவரையும் தவிர தலைவியின் நற்றாய் அல்லது தோழி இதில் இடம் பெறுவர். என்ன காரணமோ தெரியவில்லை இதில் ஒரு போதும் தோழன் அல்லது நண்பன் என்று வரக் காணோம்.

 
இவ்வாறு தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை (அப்படி எங்கேதான் சென்றிருப்பானோ?) எண்ணி எண்ணி பசலை தாக்கியது தலைவியை. பச்சிலை தெரியும். காமாலை கூட தெரியும்.  அது என்ன பசலை?  
 

காத்திருப்பு

பிரிவாற்றாமையைத் தான் அவ்வாறு குறித்தனர். இந்த நோய் தாக்கினால் அந்தப் பெண்ணின் முகப் பொலிவும் மேனி அழகும் போய் விடுமாம். மா இலையின் தளிர் நிறத்தில் இருந்தவள் மதி மயங்கி, மனம் உடைந்து, வடிவிழந்து கிடக்கும் படி செய்து விடுமாம் இந்தப் பொல்லாத பசலை. 
 

இந்த ரண களத்திலும் ஒரு உவமை நயமிக்கப் பாடலைப் பாடுதல் “பசலை பாய்தல் எனும் மெய்ப்பாடு” என்று வகைப் படுத்தப் பட்டுள்ளது.  

  
 
அப்படி ஒரு பாடல் தான் குறுந்தொகையில் 27வது பாடல்:
  
 கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
  நல ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு
  எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது   
  பசலை உணீஇயர் வேண்டும்
  திதலை அல்குல் என் மாமைக் கவினே.
 
நச்சினார்க்கினியர் கூற்றுப்படி, இந்தப் பாடலை எழுதியவர் வெள்ளி வீதியார் என்ற பெண்பாற் புலவர். இன்றைய நமது தாமரை போல அக்காலத்தில் பல நாயகிகளின் உணர்வுகளுக்கு இவர் இலக்கிய வடிவம் கொடுத்திருக்க வேண்டும். கொல்லன் அழிசி என்பவர் தான் இதை எழுதினர் என்று பிற சான்றுகள் சொல்கின்றன.
 
சரி, பாடல் என்ன சொல்கிறது?
 
பசுவின் காம்பில் சுரக்கும் பால் அதன் கன்றுக்கு உரியது. ஆனால் அந்தக் கன்றினைக் காணவில்லை. சரி, பால் கறக்கும் பாத்திரத்தில் விழுந்ததா என்றால் அதுவும் இல்லை. பின்பு என்ன தான் ஆனது? கன்றும் உண்ணாது கலத்திலும் படாது அந்தப் பசுவின் பால் கீழே வழிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.
 இதைப் பார்த்த தலைவி, தனது தோழியிடம் சொல்கிறாள்:
 
“இப்படி கன்றும் உண்ணாது கலத்திலும் படாத இந்தப் பாலைப் போன்றதே என் அழகும் இளமையும். என் அழகை அனுபவிக்க வேண்டிய தலைவன் இங்கு இல்லை. அவன் வரும் வரை இந்த அழகையும் இளமையையும் இப்படியே நிறுத்தி வைக்கவும் என்னால் இயலாது.
 
ஆதலால் வீணாக வழிந்தோடும் பாலை வெற்று நிலம் பருகுவது போல் எனக்கும் ஆகாது என்னவனுக்கும் உதவாத இந்த அழகை பசலை நோய் பருகிக் கொண்டிருக்கிறது.”
 
இதை விட அழகாக யாரும் ஒரு காதலியின் உணர்வைச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.
 
காணாமல் போன அந்த தலைவனுக்கு நன்றி. அவன் இருந்திருந்தால் இந்தப் பாடல் நமக்குக் கிடைத்திருக்காது.
 
“என் சுவாசக் காற்றே” திரைப்படத்தில் ‘தீண்டாய்’ பாடலில் முதல் வரிகளாகவும் வந்திருக்காது.